என் மலர்
கோயம்புத்தூர்
- சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- இடையர்பாளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் முகாம் நடக்கிறது.
கோவை,
கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையா ண்டிற்கான சொத்து வரியினை 01.10.2023 முதல் 31.10.2023-க்குள் செலுத்தும் சொத்து உரிமை தாரர்களுக்கு, சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எனவே, பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகை முதலிய அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த கீழ்க்கண்ட பகுதிகளில் 30.09.2023 மற்றும் 01.10.2023 ஆகிய நாட்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடக்கிறது.
மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.56 மற்றும் 57 பகுதிகளுக்கு ஒண்டிபுதூர்-நெசவாளர் காலனி சுங்கம் மைதானத்திலும்,
மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 34ல் கவுண்ட ம்பாளையம் மணிமகால் பூம்புகார் நகர் பகுதியிலும், வார்டு 35ல் இடையர்பா ளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்திலும் இம்முகாம் நடக்கிறது.
தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான வார்டு 89ல் சுண்டக்கா முத்தூர் சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்திலும்,
வார்டு 97ல் கம்பீர விநாயகர் கோவில் வளாகத்திலும், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 குடியிருப்போர் சங்க கட்டிடத்திலும் இம்முகாம் நடைபெறுகிறது.
வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.11ல் ஜனதா நகர் சூர்யா கார்டன்ஸ் பகுதியிலும், வார்டு எண்.19ல் மணியக்காரன்பாளையம் அம்மா உணவகத்திலும், வார்டு எண்.25ல் காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், இம்முகாம் நடக்கிறது.
மத்திய மண்டலத்தி ற்குட்பட்ட வார்டு 32ல் நாராயணசாமி வீதியிலும் வார்டு எண்.62ல் சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், வார்டு 63ல் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், வார்டு எண்.80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், முகாம் நடக்கிறது.
மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்களிலும், மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரிகளை செலுத்தலாம். இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்தி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்ைகயில் கூறியுள்ளார்.
- கண் இமைக்கும் நேரத்தில் சந்திரகாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
- விபத்துக்கு காரணமான வேகத்தடை மீது வெள்ளை நிறத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரவோடு இரவாக பெயிண்ட் அடித்தனர்.
கோவை:
கோவை பீளமேடு கொடிசியா அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி முன்பு உள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தடை அமைத்தனர்.
ஆனால் அவர்கள், சாலையில் வரும் வாகன ஓட்டிகள் தூரத்தில் இருந்து வரும்போது வேகத்தடை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் அதன் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை. மேலும் வேகத்தடை உள்ளது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.
இந்த நிலையில் சூலூரை சேர்ந்த சந்திரகாந்த்(வயது 26) என்பவர் நேற்றிரவு வேலை விசயமாக கோவைக்கு வந்தார். பின்னர் வேலை முடிந்ததும் நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
பள்ளி அருகே வந்தபோது இவருக்கு வேகத்தடை இருப்பது தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் சந்திரகாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று சந்திரகாந்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்துக்கு காரணமான வேகத்தடை மீது வெள்ளை நிறத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரவோடு இரவாக பெயிண்ட் அடித்தனர்.
இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென இளம்பெண் மாயமானார்.
- திருநம்பியான இளம்பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். விவசாய கூலித்தொழிலாளி.
இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுப்பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவந்தது. அவர், தனது தோழியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென அந்த இளம்பெண் மாயமானார். இதுகுறித்து விவசாய கூலித்தொழிலாளி, மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வந்தனர். அப்போது இளம்பெண் திருநம்பியாக மாறிவிட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் தனது பள்ளி வகுப்பு தோழியுடன் சென்னையில் வீடு எடுத்து கணவன்-மனைவி போல வசித்து வருவது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சென்னைக்கு விரைந்தனர். திருநம்பியாக மாறி இருந்த பெண்ணையும், அவரது தோழியையும் மீட்டனர். பின்னர் திருநம்பியான இளம்பெண்ணை கோவைக்கு அழைத்து சென்று அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் திருநம்பியான இளம்பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த பின்னரும் திருநம்பியான இளம்பெண், தனது தோழியுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த திருநம்பியான இளம்பெண் திடீரென மீண்டும் மாயமானார். இதனையடுத்து அவரை கண்டுபிடித்து தருமாறு, அவரது கணவர் ஆழியாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மீண்டும் சென்னை சென்று, தனது தோழியுடன் திருநம்பியாக மாறிய இளம்பெண் வசித்து வருவது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் மீட்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
- காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
- பா.ஜ.க.வை விட்டு பிரிந்ததால் அ.தி.மு.க நல்ல கட்சி என சொல்ல மாட்டோம்.
கோவை:
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1992-ம் ஆண்டு நடந்த வாச்சாத்தி வழக்கை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய பெருமை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு.
வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நடைபயணம் அல்ல. அது இறுதி யாத்திரை என நான் ஏற்கனவே சொன்னது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது.
பா.ஜ.கவை ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். அவர் அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர் என்பதை அவரது பேச்சே காட்டி வருகிறது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
பா.ஜ.க.வை வீழ்த்தும் போராட்டத்தில் நாங்கள் தி.மு.கவுடன் இணைந்துள்ளோம். நாங்கள் தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கிறோம்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. இது கனவு உலகில் இருந்து கதை எழுதுவது போல உள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான உறவு முறிந்துள்ளது. இனி என்னென்ன முறியும் என தெரியவில்லை.
நாங்கள் பா.ஜ.க எதிர்ப்பு மட்டுமின்றி, அ.தி.மு.க எதிர்ப்பிலும் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க.வை விட்டு பிரிந்ததால் அ.தி.மு.க நல்ல கட்சி என சொல்ல மாட்டோம்.
அ.தி.மு.க உடனான கூட்டணி முறிவால் பா.ஜ.க நிலைகுலைந்துள்ளது. இதனாலேயே அண்ணாமலை கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலக அண்ணாமலை பேச்சு மட்டும் போதுமா? பா.ஜ.க.வின் கொள்கைகள் பற்றி கவலையில்லையா? அண்ணாமலை பேச்சுக்காக கூட்டணியை முறிப்பது சரியாக இருக்குமா?.
நாங்கள் இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக இணைந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியில் பிரதமர் தேர்வு என்பது அரைமணி நேர வேலை தான். எனவே அது ஒரு பிரச்சினையே கிடையாது.
தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல் நிலை கூட்டணி தி.மு.க. கூட்டணி தான். கமல்ஹாசன் இந்தியா கூட்டணிக்கு வருவதை வேண்டாம் என சொல்லவில்லை.
பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு அடிப்படையில் தொகுதிகளை கேட்போம். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் மதுரை, கோவை தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம். பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணி ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
- கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவை,
கோவை மாநகராட்சி விக்டோரியோ அரங்கில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன், துணை கமிஷனர் செல்வ சுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு வேலைகளையும் சரியாக செய்வதில்லை என குற்றச்சாட்டை எழுப்பினர்.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை அவரை எந்த அதிகாரியும் சென்று பார்க்கவில்லை.
குப்பை கிடங்கில் என்ன சம்பவங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை என்ற குற்றச்சாட்டையும் கவுன்சிலர்கள் எழுப்பினர்.
இதற்கு மேயர் பதிலளித்து பேசியதாவது:-
வெள்ளலூர் குப்பை கிடங்கில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை.
அது கோவை மாநகராட்சி குப்பை கிடங்கா அல்லது வேறு மாநகராட்சி குப்பை கிடங்கா. அதிகாரிகள் யாருமே சரியாக தகவல் தெரிவிப்பதில்லை.
எனவே அந்த குப்பை கிடங்கு ஒப்பந்ததாரரை உடனடியாக மாற்ற வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை அறிவித்து செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விவசாய நிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், எட்டிமடை, க.க.சாவடி, அன்னூர், தெலுங்குபாளையம், கோவில்பாளையம் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது:-
கோவை மாவட்டத்தில் விவசாயிகளால் போதிய அளவு பயிர்களை சாகுபடி பண்ண முடியவில்லை. பல இடங்களில் நீர் வரத்து இல்லாததால் பயிர்கள் காய்ந்து போய் உள்ளன. எனவே கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் வனவிலங்குகள் நுழை வதை தடுக்கவும், மனித, விலங்கு மோதலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தமிழக அரசின் காப்பீட்டுத் தொகை, நிவாரணத் தொகை போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு கிசான் கார்டு அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண்மை துறை ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பங்களை கொடுத்து கிசான் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
பாரத பிரமதரின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை மாதந்தோறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கிசான் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக அதனை இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட கலெக்டரின் விவசாய துறை நேரடி உதவியாளர் சபி அகமத், வேளாண்மை துறை இணை இயக்குனர் முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் பார்த்திபன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
- 660.176 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- பள்ளிக்கூடம் 2.0 ப்ராஜெக்ட் திட்டம் மூலம் 46,884 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு, காணாமல் போன ரூ.39 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பிலான 200 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 519 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது வரை 8 ஆயிரத்து 543 குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
34 கொலை வழக்குகளில் 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 660.176 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, ரூ.70,00,260 ஆகும். இதில் ரூ.33 லட்சம் மதிப்பில் போதை சாக்லேட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருட்டு தொடர்பாக 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 415 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ..4,78,07,140 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 153 பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 134 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டு 10 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.
பள்ளிக்கூடம் 2.0 ப்ராஜெக்ட் திட்டம் மூலம் 46,884 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 687 பள்ளிகளில் இதுவரை 1302 விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 பள்ளிகளில் மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இதுகுறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கிருஷ்ணவேணி சிங்காநல்லூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் நகையை அடகு வைத்தார்.
- பைனான்ஸ் நிறுவனத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை,
கோவை நீலிகோணாம்பாளையம் ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (36). கணபதியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு சிங்காநல்லூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் 69.02 கிராம் நகையை அடகு வைத்து ரூ.2.45 லட்சம் கடன் பெற்றார். நீண்ட நாட்களாக அவர் நகைக்கு உரிய வட்டியும், அசலும் செலுத்தவில்லை.
இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் அந்த நகையை ஏலத்தில் விட முடிவு செய்தனர். அப்போது அந்த நகையை பரிசோதனை செய்த போது, அது போலியானது என்பதும், தங்க முலாம் பூசப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து பைனான்ஸ் நிறுவனத்தினர் கிருஷ்ணவேணியை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார்.
ஆனால் அதன்பின்பும் நீண்ட நாட்களாக அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மோசடி பிரிவில் கிருஷ்ணவேணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோகுலகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அலுவலகத்திற்கு சென்றார்.
- போலீசார் கண்காணிப்பு காமிராக்களை பார்த்து மர்மநபர்களை தேடுகின்றனர்.
பீளமேடு,
கோவை சின்னியம்பாளையம் கோகுலம் நகரை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(வயது36).
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் அவரது தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் கோகுலகிருஷ்ணனின் தாய் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். கோகுலகிருஷ்ணன் மட்டும் வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று காலை கோகுலகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார்.
அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போய் இருந்தது.
இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கோவை சின்னியம்பாளையம் பி.எல்.எஸ். நகரை சேர்ந்தவர் குருராஜ். இவரது மனைவி பானு மதி(66). இவர் சம்பவத்தன்று தனது மகளை பார்ப்பதற்காக நடந்து சென்றார்.அப்போது் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், பானுமதியின் அருேக வந்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த ¾ பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோ டிவிட்டார். இதுகுறித்து பானுமதி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபரை தேடி வருகின்றனர்.
- கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டது.
- மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பெரியோர் முன்னிலையில் நிச்சயம் செய்து வைத்தனர். ஆனால் இளம்பெண்ணுக்கு அந்த வாலிபரை பிடிக்கவில்லை.
சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் படித்த கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரம் ஆகியும் மகள் திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
வடக்கிப்பாளையம் அருகே உள்ள புதுகாலனியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிளஸ்-1 மாணவியை தேடி வருகின்றனர்
- முத்துகுமார் ரூ.50 ஆயிரத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளர் முத்துக்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.
கோவை,
கோவை டவுன்ஹாலை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 40). இவர் சூலூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் நீலாம்பூரில் உள்ள தனியார் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் மண்டல மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எங்களது நிறுவனத்தில் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த முத்துக்குமார் (33) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று நான் வசூலான பணத்தை கணக்கு பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது ரூ.50 ஆயிரம் குறைவாக இருந்தது. இது குறித்து நான் மேலாளர் முத்துக்குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். பின்னர் இதுகுறித்து நான் காசாளரிடம் கேட்ட போது, மேலாளர் முத்துக்குமாரிடம் கேட்ட போது வசூலான முழு பணத்தையும் கொடுத்து விட்டதாக கூறினார்.
இதனையடுத்து நாங்கள் தலைமறைவான மேலாளரை தேடிய போது அவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் அங்கு சென்று முத்துக்குமாரை மடக்கி பிடித்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ரூ.50 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார்.
எனவே நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் பணத்தை கையாடல் செய்த மேலாளர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளர் முத்துக்கு மாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
- போராட்டம் காரணமாக அங்கு பஸ், லாரி கடைகள் எதுவும் இயங்கவில்லை.
கோவை,
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கு பஸ், லாரி கடைகள் எதுவும் இயங்கவில்லை. போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் மூலம் கோவையில் இருந்து ஏராளமானோர் தினசரி பணி விஷயமாக சென்று வருவது வழக்கம். அதே போன்று, பெங்களூருவில் இருந்தும் படிப்பு மற்றும் பணி நிமித்தமாக கோவை க்கு வருகின்றனர்.
இன்று நடந்த போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன.
அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.






