search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சி கூட்டம்: அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    X

    கோவை மாநகராட்சி கூட்டம்: அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

    • வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகராட்சி விக்டோரியோ அரங்கில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன், துணை கமிஷனர் செல்வ சுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு வேலைகளையும் சரியாக செய்வதில்லை என குற்றச்சாட்டை எழுப்பினர்.

    வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை அவரை எந்த அதிகாரியும் சென்று பார்க்கவில்லை.

    குப்பை கிடங்கில் என்ன சம்பவங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை என்ற குற்றச்சாட்டையும் கவுன்சிலர்கள் எழுப்பினர்.

    இதற்கு மேயர் பதிலளித்து பேசியதாவது:-

    வெள்ளலூர் குப்பை கிடங்கில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை.

    அது கோவை மாநகராட்சி குப்பை கிடங்கா அல்லது வேறு மாநகராட்சி குப்பை கிடங்கா. அதிகாரிகள் யாருமே சரியாக தகவல் தெரிவிப்பதில்லை.

    எனவே அந்த குப்பை கிடங்கு ஒப்பந்ததாரரை உடனடியாக மாற்ற வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை அறிவித்து செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×