என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நள்ளிரவில் வேகத்தடை தெரியாமல் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
    X

    நள்ளிரவில் வேகத்தடை தெரியாமல் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

    • கண் இமைக்கும் நேரத்தில் சந்திரகாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • விபத்துக்கு காரணமான வேகத்தடை மீது வெள்ளை நிறத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரவோடு இரவாக பெயிண்ட் அடித்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு கொடிசியா அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளி முன்பு உள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தடை அமைத்தனர்.

    ஆனால் அவர்கள், சாலையில் வரும் வாகன ஓட்டிகள் தூரத்தில் இருந்து வரும்போது வேகத்தடை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் அதன் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை. மேலும் வேகத்தடை உள்ளது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.

    இந்த நிலையில் சூலூரை சேர்ந்த சந்திரகாந்த்(வயது 26) என்பவர் நேற்றிரவு வேலை விசயமாக கோவைக்கு வந்தார். பின்னர் வேலை முடிந்ததும் நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    பள்ளி அருகே வந்தபோது இவருக்கு வேகத்தடை இருப்பது தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் சந்திரகாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று சந்திரகாந்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்துக்கு காரணமான வேகத்தடை மீது வெள்ளை நிறத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரவோடு இரவாக பெயிண்ட் அடித்தனர்.

    இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×