search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வை எதிர்ப்பதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுதியாக உள்ளது: பாலகிருஷ்ணன்
    X

    அ.தி.மு.க.வை எதிர்ப்பதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுதியாக உள்ளது: பாலகிருஷ்ணன்

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
    • பா.ஜ.க.வை விட்டு பிரிந்ததால் அ.தி.மு.க நல்ல கட்சி என சொல்ல மாட்டோம்.

    கோவை:

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1992-ம் ஆண்டு நடந்த வாச்சாத்தி வழக்கை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய பெருமை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு.

    வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம்.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நடைபயணம் அல்ல. அது இறுதி யாத்திரை என நான் ஏற்கனவே சொன்னது தான் தற்போது நடந்து கொண்டுள்ளது.

    பா.ஜ.கவை ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். அவர் அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர் என்பதை அவரது பேச்சே காட்டி வருகிறது.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    பா.ஜ.க.வை வீழ்த்தும் போராட்டத்தில் நாங்கள் தி.மு.கவுடன் இணைந்துள்ளோம். நாங்கள் தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கிறோம்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. இது கனவு உலகில் இருந்து கதை எழுதுவது போல உள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான உறவு முறிந்துள்ளது. இனி என்னென்ன முறியும் என தெரியவில்லை.

    நாங்கள் பா.ஜ.க எதிர்ப்பு மட்டுமின்றி, அ.தி.மு.க எதிர்ப்பிலும் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க.வை விட்டு பிரிந்ததால் அ.தி.மு.க நல்ல கட்சி என சொல்ல மாட்டோம்.

    அ.தி.மு.க உடனான கூட்டணி முறிவால் பா.ஜ.க நிலைகுலைந்துள்ளது. இதனாலேயே அண்ணாமலை கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலக அண்ணாமலை பேச்சு மட்டும் போதுமா? பா.ஜ.க.வின் கொள்கைகள் பற்றி கவலையில்லையா? அண்ணாமலை பேச்சுக்காக கூட்டணியை முறிப்பது சரியாக இருக்குமா?.

    நாங்கள் இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக இணைந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியில் பிரதமர் தேர்வு என்பது அரைமணி நேர வேலை தான். எனவே அது ஒரு பிரச்சினையே கிடையாது.

    தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல் நிலை கூட்டணி தி.மு.க. கூட்டணி தான். கமல்ஹாசன் இந்தியா கூட்டணிக்கு வருவதை வேண்டாம் என சொல்லவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு அடிப்படையில் தொகுதிகளை கேட்போம். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் மதுரை, கோவை தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம். பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணி ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×