கோவை அருகே திருமணம் நிச்சயமான இளம்பெண் காதலனுடன் ஓட்டம்

கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டது. மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.
கோவை அருகே திருமணம் நிச்சயமான இளம்பெண் காதலனுடன் ஓட்டம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பெரியோர் முன்னிலையில் நிச்சயம் செய்து வைத்தனர். ஆனால் இளம்பெண்ணுக்கு அந்த வாலிபரை பிடிக்கவில்லை.

சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் படித்த கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரம் ஆகியும் மகள் திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

வடக்கிப்பாளையம் அருகே உள்ள புதுகாலனியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிளஸ்-1 மாணவியை தேடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com