என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தனியார் விடுதியில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய ஜெயிலில் அடைப்பு

    குனியமுத்தூர்,

    குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை சார்பாக ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடித்து கைது செய்து, தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான பாலக்காட்டை சேர்ந்த காஜா உசேன்(50) என்பவரை கடந்த 4 மாதமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காஜா உசேன், கேரளாவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்த பாலக்காடை சேர்ந்த காஜா உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டதால் பாதிப்பு
    • இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் அறிவிப்பு

    கோவை,

    இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த 1-ந் தேதி தொலை தொடர்பு சேவை மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஐ.வி.ஆர்.எஸ். மாநில மொழி தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டது.

    தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் தமிழ் மொழியில் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து, பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

    • வீடு புகுந்து தங்க நாணயம், வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர்
    • வடவள்ளி போலீசார் விசாரணை

     வடவள்ளி,

    கோவை வடவள்ளி, ராமசாமி நகர் நேரு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). இவர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்துவருகிறார்.

    இந்த நிலையில் அவர் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டூ சென்றார்.

    அப்போது யாரோ மர்மநபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பூஜை அறை மற்றும் பீரோவில் இருந்த தங்க நாணயம், வெள்ளி நகை உள்பட ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி காமிரா காட்டி கொடுத்தது
    • சாய்பாபா காலனி போலீசார் விசாரணை

    வடவள்ளி,

    கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (வயது 19). இவர் அங்கு உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யபிரகாஷ் சம்பவத்தன்று கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார்.

    அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்வந்த ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்து சூர்யபிரகாஷ் சாய்பாபா காலனி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவை ஆய்வுசெய்தனர்.

    இதில் சூர்ய பிரகாசிடம் செல்போன் பறித்து தப்பியது, டி.வி.எஸ் நகரை சேர்ந்த அருண்குமார் (21) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சூர்யபிரகாஷின் செல்போனை மீட்டனர். 

    • 30 சதவீதம் பணம் கட்டினால் அதிகளவில் பணம் கிடைக்கும் என ஏமாற்றி கைவரிசை
    • கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை கணபதி பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 33) என்பவர் கோவை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 30 சதவீதம் பணம் கட்டினால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    எனவே நான் வீட்டில் இருந்த நகை, வீடு கட்ட வைத்திருந்த பணம் உள்பட ரூ.18.75 லட்சத்தை முதலீடு செய்து உள்ளேன். ஆனால் எனக்கு கூடுதல் பணம் கிடைக்கவில்லை. முதலீடு செய்த தொகையும் வரவில்லை.

    எனவே நான் அந்த குறுஞ்செய்தி குறித்து விசாரித்து பார்த்தேன். அப்போது அது போலியான நிறுவனம் என்பது தெரியவந்தது. குறைந்த பணத்தை முதலீடு செய்தால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று கூறி ஆன்லைன் மூலம் ஏமாற்றி மோசடி செய்து உள்ளனர். எனவே போலீசார் இதுகுறித்து விசாரித்து நான் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவு

    கோவை.

    கோவை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாநகர் மற்றும் புறநகர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் அங்கு உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

    மேலும் கோவை மாவட்டத்தில் கனமழை தொடருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் தலைதூக்க தொடங்கி உள்ளன. எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாவட்ட மருத்துவத்துறை இணைஇயக்குனர் டாக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி முதல் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு நோய்பாதிப்புடன் வருவோருக்கு மருத்து வர்கள் பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் கோவை மாநகராட்சியில் ஆபத்தான நோய் அறிகுறிகள் தென்படும் பகுதியாக 54 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்க ஏதுவாக, மருத்துவ-சுகாதார ஊழியர்கள் அடங்கிய 100 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த குழுவினர் ஒரு வட்டாரத்துக்கு தலா 10 பேர் வீதம் நேரடியாக சென்று அங்கு நோய் பாதிப்பின் சதவீதத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.

    மேலும் நோய்அறிகுறி பாதிப்பு உடைய 10 வட்டார பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆனந்த குளியல் போட்டது
    • கருமலை எஸ்டேட் பகுதியில் 12 காட்டு யானைகள் சுற்றியதால் பரபரப்பு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதி அருகில் சேற்றில் உறங்கிய காட்டு யானைகளை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

    வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டம் வழியாக ஆறு, குடியிருப்பு போன்ற இடங்களில் சுற்றி வருகிறது.

    இதை சுற்றுலாப் பயணி களும், பொதுமக்களும் பார்த்து வருகின்றனர், சில நேரங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை இடித்தும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 12 காட்டு யானைகள் சுற்றி வந்தது.

    இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் ஆனந்த குளியல் இட்டு சேற்றில் உறங்கியது. இதை அவ்வழியாக வந்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். 

    • 100 பேருக்கு தினமும் உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்
    • தமிழகத்தில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என அறிவிப்பு

    சூலூர்,

    சூலூர் அருகே மது விலக்கு துறை அமைச்சர் முத்துசாமி இருகூர் பேரூராட்சி பகுதியில் 100 பேருக்கு தினமும் உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஒண்டிப்புதூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் இருந்து பெறப்படும் கழிவு நீரை சுத்திகரித்து குளங்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் திட்டத்தில் பட்டணம்புதூரில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 125 எச்பி மின் திறன் உள்ள மோட்டார்க்கு இலவச மின்சாரம் அளித்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    செட்டிபாளையம் அருகே உள்ள காடு குட்டைக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை கொண்டு செல்லும் குழாயை திறந்து வைத்தார்.

    இதனை அடுத்து செலக்கரிச்சல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து சுமார் 100 பயனாளிகளுக்கு 10 கிலோ விதம் அரிசி மூட்டைகள் வழங்கினார்.

    இதனை அடுத்து சுல்தான்பேட்டை அருகே வடவேடம்பட்டி பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில் புதிதாக மது அருந்த வரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு டாஸ்மாக் ஊழி யர்கள் அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்தி னால் சன்மானம் வழங்கப்ப டும். முன் களப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய ஆலோசிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என தெரிவித்தார்.

    விழாவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், சுல்தான்பேட்டை ஒன்றியகுழு துணைத் தலைவர் பாப்பம்பட்டி மனோகரன், கண்ணம்பா ளையம் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜ கோபால், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார், கலங்கள் ஊராட்சி தலைவர் ரங்க நாதன், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், அவைத்த லைவர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழி ல்நுட்ப பிரிவு துணைச் ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்து மாணிக்கம், செலக்கரச்சல் கிளைச் செயலாளர் தேவராஜ், கலங்கள் கிளைச் செயலாளர் சிவக்குமார், கழிவுநீர் சுத்திகரிப்பு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் சீனிவாசன், கண்ணம்பாளையம் நகர செயலாளர் விஸ்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜா வேலுச்சாமி, பாப்பம்பட்டி ராஜன், தொண்டரணி துணைத் தலைவர் ரமேஷ், ஆதி திராவிடர் நலப்பிரிவு மணி மோகன், வெங்கடேஷ் ஒன்றிய மாணவர் அணி, செலக்கரச்சல் ஆறு சாமி, குப்புசாமி, கோவிந்தராஜ் சிவக்குமார் உள்ளிட்டோர் மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

    • மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு
    • 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

    கோவை,

    தமிழகத்தில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் 600-க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளில் இருந்து தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதற்காக அங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மூலப் பொருட்கள் விலைஉயர்வு, மின்கட்டண அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து ஒபன் எண்ட் நூற்பாலைகள் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளன. இது நாளை மறுநாள் (7-ந்தேதி) தொடங்குகிறது.

    இதுதொடர்பாக ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள்மொழி கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் கழிவுப்பஞ்சில் இருந்து நூல்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் இருந்து தினமும் சுமார் 25 லட்சம் கழிவு நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் மற்றும் பனியன் கழிவுகளில் இருந்து தினமும் சுமார் 15 லட்சம் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் தினமும் ரூ. 60 கோடி மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. எங்கள் நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.97 என்ற நிலையில் இருந்த கழிவு பஞ்சின் விலை தற்போது ரூ.117 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழக அரசு மின்கட்டணத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளது.

    இதனால் நாங்கள் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும், இறக்கு மதியாகும் பஞ்சுக்கான 11 சதவீதம் வரியை நீக்க வேண்டும்,

    தமிழகஅரசு மின்கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். சூரியஒளி மின்சாரத்துக்கு கட்டணம் விதிக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்வதென முடிவெடுத்து உள்ளோம்.

    ஒபன் எண்ட் நூற்பாலைகளின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் வருகிற 7-ந்தேதி தொடங்கு கிறது. இது வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும். மேலும் சந்தை நிலவரம் சீராகும்வரை உற்பத்தி நிறுத்தத்தை தொடருவது என திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட ஆலைகள் தொழில் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு உள்ளன. மற்ற மில்களிலும் 50 சதவீத அளவில் மட்டுமே உற்பத்தி நடக்கிறது. ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக தினமும் 40 லட்சம் கிலோ நூல்உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் நாள்தோறும் ரூ.60 கோடி வர்த்தகம் பாதிக்கும்.

    மேலும் எங்கள் நிறுவனத்தில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுக வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒபன் எண்ட் நூற்பாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையி ழக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    குஜராத், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒபன் எண்ட் நூற்பாலைகளுக்கு மானியவிலையில் மின்சாரம் தரப்படுகிறது. மேலும் தொழில் வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒபன் எண்ட் நூற்பாலைகளின் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் ஜவுளி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது சங்க துணைத்தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
    • மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர கோரிக்கை

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு சிட்கோவை அடுத்துள்ளது கணேசபுரம். சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் இப்பகுதியில் தான் குடியிருந்து வருகின்றனர். அவர்களில் வட மாநில இளைஞர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

    சிட்கோவில் இருந்து கணேசபுரம் செல்லும் வழியில் ெரயில்வே கேட் அருகே ஒரு தரைப்பாலம் உள்ளது. தெருவிளக்கு இல்லாத காரணத்தால், இப்பகுதியானது எந்த நேரமும் இருட்டாக காணப்படும்.

    இதனால் அப்பகுதியில் அவ்வப்போது சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பகுதி மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த வழியாக தனியாக செல்லும் பெண்களை மர்ம நபர்கள் குறிவைத்து மிளகாய் பொடி தூவும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    மிளகாய் பொடி கண்ணில் பட்டதும் நிலைகுலையும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள உடைமைகளை கொள்ளையடிக்கும் செயல் நடந்து வருகிறது. பிரதி வாரம் சனிக்கிழமை சம்பள தேதி என்னும் காரணத்தால் சிட்கோ பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் பணப்பழக்கம் இருக்கும். இதனால் சனிக்கிழமைகளில் இந்த சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கேட்டபோது அந்த இடத்தில் இரவு முழுவதும் போலீசாரின் ரோந்து பணி தீவிர படுத்தப்படும்.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உடனே பொதுமக்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட இந்த இடத்தில், தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 11 மணியில் இருந்து 2 மணி வரையிலும் இது போன்ற மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    சிலர் கூட்டமாக கஞ்சா போதையில் நின்று கொண்டு இருப்பார்கள். தனியாக நடந்து வருபவர்கள் இவர்களை கண்டதும் அச்சப்படுவது இயற்கை. அதனை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய நபர்கள் வழிபறியிலும் ஈடுபடுவது உண்டு.

    எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் உடனே மின் விளக்கு எரிய செய்ய வேண்டும். இரவு முழுவதும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் இப்பகுதியில் ஈடுபட வேண்டும்.

    அத்துமீறும் இளைஞர்களை பிடித்து, போலீசார் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அதைப் பார்த்து மற்றவர்கள் பயந்து, தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அறுந்து கிடந்த வயரை மிதித்ததால் பரிதாபம்
    • விவசாயி உடலை பார்த்து உறவினர்கள் கதறல்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கருங்கண்ணன்(வயது67).

    இவர் அந்த பகுதியில் உள்ள பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 25 வருடங்களாக விவசாய வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு தோட்டத்தின் வழியே சென்ற மின்சார வயர் ஒன்று அறுந்து கீழே விழுந்து விட்டது. இரவு நேரம் என்பதால் தோட்டத்தில் யாரும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று காலை, கருங்கண்ணன் வழக்கம் போல வேலைக்கு வந்தார். பின்னர் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்வதற்காக பம்ப் செட் அறைக்கு நடந்து சென்றார். அப்போது வயல் வரப்பில் மின்சார வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல், கருங்கண்ணன் மிதித்து விட்டார்.

    இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்தின் உரிமையாளரான பழனிசாமியின் மகன் செல்வராஜ் ஓடி வந்து பார்த்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கருங்கண்ணனின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த கருங்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு திரண்ட அவரது உறவினர்கள், கருங்க ண்ணன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகபட்சமாக ரூ.7000-7400 வரை கிடைக்கும்
    • ரூ.14 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு

    கோவை,

    தமிழகம் முழுவதும் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு டான்டீ தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன.

    அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

    பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில் அண்ணா தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை

    வீ.அமீது, எல்.பி.எப்.சவுந்தர பாண்டியன், வினோத், ஏ.ஐ.டி.யு.சி. மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரமணி, செல்வகுமார், ஐ.என்.டி.யு.சி. கருப்பையா, ஆனைமலை ஒர்க்கர்ஸ் யூனியன் வர்க்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிர்வாகம் தரப்பில் துணை தலைவர் பாலசந்தர், (உப்ரியார் குரூப்), குரூப் மேலாளர் ரஞ்சித் கட்டபுரம், துணை தலைவர் முரளி பாரிக்கர், (பாரி அக்ரோ), திம்பையா (முடீஸ்), ஆனை மலை தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் ரஞ்சித்குமார், செயலாளர் பர்தோஸ், விஜயன், (கருமலை), ராஜ்மோகன் (வாட்டர்பால்), குரூப் மேலாளர் அக்ஷயா, (டாடா காபி), சட்ட ஆலோசகர் பிரகாஷ் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

    அதன்படி உப்ரியார் (ஸ்டான் மோர் குரூப்), பாரி அக்ரோ (அய்யர் பாடி குரூப்), முடீஸ் குரூப், டாடா காபி, சோலையாறு (ஜெய ஸ்ரீ), கருமலை ஆகிய எஸ்டேட்களில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட் டுள்ளது.

    இது போல் வாட்டர்பால் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு 10 சதவீதம், கவர்கல் எஸ்டேட் தொழிலாளர்க ளுக்கு 9 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு அதிகபட்ச மாக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 400 வரை போனஸ் கிடைக்கும். போனஸ் பட்டு வாடாவை உடனே தொடங்கி நாளை மறுநாளுக்குள் (செவ்வாய்க் கிழமை) வழங்கி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மொத்தமாக சேர்த்து ரூ.14 கோடியே 70 லட்சம் போனஸ் வழங்கப்பட உள்ளதாக எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ×