என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் அதிக காய்ச்சல் பாதிப்பு உள்ள 54 இடங்களில் 100 சுகாதார ஊழியர்கள் ஆய்வு
- நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
- அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவு
கோவை.
கோவை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாநகர் மற்றும் புறநகர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் அங்கு உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் கனமழை தொடருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் தலைதூக்க தொடங்கி உள்ளன. எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட மருத்துவத்துறை இணைஇயக்குனர் டாக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி முதல் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு நோய்பாதிப்புடன் வருவோருக்கு மருத்து வர்கள் பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் கோவை மாநகராட்சியில் ஆபத்தான நோய் அறிகுறிகள் தென்படும் பகுதியாக 54 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்க ஏதுவாக, மருத்துவ-சுகாதார ஊழியர்கள் அடங்கிய 100 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குழுவினர் ஒரு வட்டாரத்துக்கு தலா 10 பேர் வீதம் நேரடியாக சென்று அங்கு நோய் பாதிப்பின் சதவீதத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் நோய்அறிகுறி பாதிப்பு உடைய 10 வட்டார பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






