search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிட்கோ அருகே தனியாக செல்லும் பெண்கள் மீது மிளகாய் பொடி வீசும் மர்ம நபர்கள்
    X

    சிட்கோ அருகே தனியாக செல்லும் பெண்கள் மீது மிளகாய் பொடி வீசும் மர்ம நபர்கள்

    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
    • மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர கோரிக்கை

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு சிட்கோவை அடுத்துள்ளது கணேசபுரம். சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் இப்பகுதியில் தான் குடியிருந்து வருகின்றனர். அவர்களில் வட மாநில இளைஞர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

    சிட்கோவில் இருந்து கணேசபுரம் செல்லும் வழியில் ெரயில்வே கேட் அருகே ஒரு தரைப்பாலம் உள்ளது. தெருவிளக்கு இல்லாத காரணத்தால், இப்பகுதியானது எந்த நேரமும் இருட்டாக காணப்படும்.

    இதனால் அப்பகுதியில் அவ்வப்போது சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பகுதி மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த வழியாக தனியாக செல்லும் பெண்களை மர்ம நபர்கள் குறிவைத்து மிளகாய் பொடி தூவும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    மிளகாய் பொடி கண்ணில் பட்டதும் நிலைகுலையும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள உடைமைகளை கொள்ளையடிக்கும் செயல் நடந்து வருகிறது. பிரதி வாரம் சனிக்கிழமை சம்பள தேதி என்னும் காரணத்தால் சிட்கோ பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் பணப்பழக்கம் இருக்கும். இதனால் சனிக்கிழமைகளில் இந்த சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கேட்டபோது அந்த இடத்தில் இரவு முழுவதும் போலீசாரின் ரோந்து பணி தீவிர படுத்தப்படும்.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உடனே பொதுமக்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட இந்த இடத்தில், தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 11 மணியில் இருந்து 2 மணி வரையிலும் இது போன்ற மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    சிலர் கூட்டமாக கஞ்சா போதையில் நின்று கொண்டு இருப்பார்கள். தனியாக நடந்து வருபவர்கள் இவர்களை கண்டதும் அச்சப்படுவது இயற்கை. அதனை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய நபர்கள் வழிபறியிலும் ஈடுபடுவது உண்டு.

    எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் உடனே மின் விளக்கு எரிய செய்ய வேண்டும். இரவு முழுவதும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் இப்பகுதியில் ஈடுபட வேண்டும்.

    அத்துமீறும் இளைஞர்களை பிடித்து, போலீசார் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அதைப் பார்த்து மற்றவர்கள் பயந்து, தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×