என் மலர்
சென்னை
- கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.
- கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
- சாலைகளில் செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
- சென்னை அண்ணா மேம்பாலத்தில் தி.மு.க. கொடிகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி இடங்களில் அனுமதியின்றி உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளது.
சாலைகளில் செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நீதிபதி இளந்திரையன் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், சென்னை அண்ணா மேம்பாலத்தில் தி.மு.க. கொடிகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில், "பொது இடங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் அறிக்கை கோரியுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 3ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சட்டவிரோதமாக தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவது இனியும் யாராலும் ஏற்க முடியாததாகும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த 8.11.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வானகிரி ஊராட்சியைச் சேர்ந்த திரு. ராமையன் என்பவருக்குச் சொந்தமான படகில் 12 மீனவர்கள், தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் கடலூர் மாவட்டம் வசானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என்று மொத்தம் 14 பேர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், படகில் பழுது ஏற்பட்ட காரணத்தினால், காற்று வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றதால் 9.11.2025 அன்று இலங்கை கடற்படை மீனவர்களால் கைது செய்யப்பட்டனர்.
நமது மீனவர்கள் படகில் பழுது ஏற்பட்டுள்ள காரணத்தில் திசை மாறி இங்கே வந்துவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்று கோரியதை இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் ஒதுக்கித்தள்ளி சட்டவிரோதமாக தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கக்கூடிய சூழ்நிலை எப்போது வருமோ ? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் அவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவது இனியும் யாராலும் ஏற்க முடியாததாகும்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிபதில் இருந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதே சமயம் த.வெ.க. கூட்டங்களில் விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் மரம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் மீது ஏறியதை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்தனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று கூறவேண்டாம் என திமுக எம்.எல்.ஏ. எழிலன் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. எழிலன், "தற்குறி என்று பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்களை விமர்சிப்பது தவறானது. நாம் அவர்களுடன் உரையாடவில்லை என்பது நமது தவறு. பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை. நாம் அவர்களுடன் உரையாட தொடங்கினால், அவர்கள் தெளிவடைவார்கள்.
சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்களை 'தற்குறி' என அவமானப்படுத்துவது சங்கிகளின் சதி. சோசியல் மீடியாவில் அவர்களை தற்குறி என அழைப்பது தேவையில்லை. அது சங்கிகளின் திட்டம். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.நாம் அந்த சதியை உணர வேண்டும்.
தவெக தலைமை சுயநலமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம்தான். அவர்களை விமர்சிக்காமல், அவர்களுடன் உரையாட தொடங்க வேண்டும். அவர்கள் சங்கிகள் அல்ல, நம்ம பசங்கதான். அவர்களை நாம் நெருக்கமாகப் பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.
- அமைச்சர் சேகர்பாபு துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.
- அங்கே இருக்கிற தலைவர்கள் அண்ணாமலை உட்பட எல்லோரும் அதற்கான ‘கவுண்டவுனை’ தொடங்கி விட்டார்கள்.
சென்னை:
இந்து அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் தி.மு.க.வின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளிக்கும்போது, 'நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருக்கும் நாட்கள்தான் எண்ணப்பட்டு வருகிறது.
அந்த நாட்கள் எண்ணுவதற்கு அங்கே இருக்கிற தலைவர்கள் அண்ணாமலை உட்பட எல்லோரும் அதற்கான 'கவுண்டவுனை' தொடங்கி விட்டார்கள்' என்றார்.
- கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
- கும்கி 2 படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழர்களை உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
- பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி முதல் 17-11-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
- 2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியில் வசித்து வருபவர் டாக்டர் சாமுவேல் காட்வின். சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையில் சோதனை நடத்தினார்கள். இதேபோன்று வெட்டுவாங்கேணியில் வசித்து வரும் சார்பானந்த் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.
2 இடங்களிலும் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 2 பேர் வீட்டில் இருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள்.
- 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வேதாரண்யம் தொகுதியை இந்த முறை வென்றெடுக்க வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று வரை மொத்தமாக 37 நாட்களில் 79 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
- நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர்.
- எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.
அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம்.
தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.
போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.
நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.
எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆட்குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 400 இளநிலை உறைவிட மருத்துவர்களை இடமாற்றம் செய்து பிற மருத்துவமனை களில் பணி நிரவல் முறை யில் நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.
தேவையில் பாதியளவு, அதாவது 12,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழலில் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை உறை விட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு கட்டப்பட்ட புதிய மருத்துவ மனைகளுக்குத் தேவையான மருத்துவர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி அந்த பணியிடங்களில் தகுதியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேசிய மருத்துவ ஆணை யத்தின் சிறப்பு அனுமதி பெற்று புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






