என் மலர்tooltip icon

    சென்னை

    • தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னையில் மற்ற பகுதிகளைவிட தி.நகர் பகுதியில்தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் மற்ற இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த பகுதிகளில் 28 கேமராக்கள் உள்ள நிலையில் பாண்டி பஜார் மாம்பலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 155 கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    3 டிரோன் கேமராக்கள் மூலமாக தீபாவளி திருடர்களைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீபாவளி நெருங்கும் நேரங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    தி.நகர் பகுதியில் தினமும் 200 போலீசார், 100 ஊர்க்காவல் படையினர், 100 ஆயுதப் படை காவலர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

    வண்ணாரப்பேட்டை பகுதியில் 150 போலீசாரும், புரசைவாக்கத்தில் 120 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 250 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.நகர் பகுதியில் 16 ஒலி பெருக்கிகள் மூலமாகவும் போலீசார் பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடமைகளை தவறவிட்டு விடாதீர்கள் என்பது போன்ற எச்சரிக்கை தகவல்களை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே உள்ளனர். மக்களின் வசதிக்காக 4 காவல் உதவி மையங்கள், 2 தற்காலிக உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    தி.நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சோமசுந்தரம் மைதானம், ராமகிருஷ்ணா பள்ளி மைதானம், தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே என இடங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளன.

    பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு 8939977649, 91504 72278 ஆகிய செல்போன் எண்களும் அவசர உதவி எண்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தையும் மாம்பலம் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் அது போன்ற குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு வணிகப் பகுதிகள் அனைத்திலும் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களும் தற்போது இருப்பதைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தா லிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் விமல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.
    • மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதேபோல் விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 21-ந் தேதி விடுமுறை விடப்படுவதாக காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். 22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும். அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு உயர்வு.
    • பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு 15 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

    பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது. ஆம்னி பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவு என்பதால் வழக்கமான ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்து இருக்கிறார்கள்.

    எனவே தீபாவளியை முன்னிட்டு மேலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
    • ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா?

    சென்னை:

    அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், "தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்" என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.

    அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது.

    ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் 'பொண்டாட்டி இலவசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்துள்ளது, கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு.

    பெண்களை இழிவுபடுத்தி வரும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 

    • அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷனுக்கும் தடை விதிக்கப்பட்டது.
    • கரூர் சம்பவத்திற்கு பிறகு நேற்றிரவு கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி தலைவர் விஜய்யை சந்தித்து பேசி உள்ளார்.

    கரூரில் நடந்த த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.

    மேலும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

    கரூர் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    கட்சி நடவடிக்கைகள் அனைத்திலும் விஜய் உத்தரவின் பேரில் புஸ்ஸி ஆனந்த் இரவு பகலாக ஈடுபட்டு த.வெ.க. தொண்டர்களை ஊக்கப்படுத்தி வந்தார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் த.வெ.க. கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

    இதையடுத்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

    கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் நிதி வழங்க திட்டமிட்டு இருந்தார்.

    கரூர் செல்வதற்கு முறைப்படி அனுமதி கேட்டு போலீசாரிடம் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு குறித்து விஜய் ஆலோசனையின் பேரில் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டு மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

    இதனிடையே கரூரில் 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷனுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு த.வெ.க. தலைவர் விஜய் மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.

    கரூர் சம்பவத்திற்கு பிறகு நேற்றிரவு கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி தலைவர் விஜய்யை சந்தித்து பேசி உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு த.வெ.க.வுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் இன்றும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கரூர் செல்ல உள்ள நிலையில் வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை த.வெ.க. தலைவர் விஜய் அமைத்துள்ளார் 41 குடும்பங்களையும் தனித்தனியாக சந்திக்காமல் திருமண மண்டபம் போன்ற இடத்தில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

    • உடல்நிலை எப்படி இருக்கிறது? பரவாயில்லையா? என்று விசாரித்தார்.
    • இருவரும் 2 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சட்டசபை கூட்டம் இன்று காலையில் நடைபெற்று முடிந்ததும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் வெளியே வந்தனர்.

    அப்போது அமைச்சர் துரைமுருகனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

    உடனே எடப்பாடி பழனிசாமி துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். உடல்நிலை எப்படி இருக்கிறது? பரவாயில்லையா? என்று விசாரித்தார். இருவரும் 2 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

    • பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
    • ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.

    சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு 3 எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்திய நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

    அப்போது, சட்டசபை குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

    பா.ம.க. சட்டசபை குழு தலைவர், கொறடாவாக தாங்களே தொடர்வதாக ஜி.கே.மணியும் அருளும் சபாநாயகரிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் தான் பா.ம.க.வுக்கு வாழ்வு.

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காலத்திலேயே பா.ம.க.வுக்கு இப்படி ஒரு நிலை வந்தது வேதனையாக உள்ளது.

    * ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.

    * ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் திடீரென மழை பெய்யும்.
    • நாளை முதல் 18-ந்தேதி வரை காலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

    தமிழகத்தில் வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தாலும் மழை பெய்து இதமான சூழ்நிலையை தந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் ஏற்கனவே பெய்து வரும் மழையால் தீபாவளியை கொண்டாட முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில், தீபாவளி அன்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த ஒருவாரமாக உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.

    சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் திடீரென மழை பெய்யும். நாளை முதல் 18-ந்தேதி வரை காலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். 19 மற்றும் 20-ந்தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்யும். தீபாவளி அன்று கண்டிப்பாக மழை இருக்கும்.

    தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்ட மக்கள் வெளியே செல்லும் போது குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்வது அவசியம் என்றார். 

    • சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
    • காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று இப்பேரவை தெரிவிக்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

    மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந் தசாமி, அமர்நாத், அறிவழகன், துரைஅன்பரசன் என்கிற ராமலிங்கம், கவிஞர் ரகுமான், இரா. சின்னசாமி ஆகியோர் மறைவுக்கு சபை ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சட்டசபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து கரூரில் கடந்த 27-ந்தேதி அன்று த.வெ.க. கட்சியின் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    27.9.2025 அன்று கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து இந்த பேரவை அதிர்ச்சியும் தாங்க முடியாத துயரமும் கொள்கிறது. இந்த துயர செய்தி அறிந்ததும் முதலமைச்சர் அன்று இரவே கரூருக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களையும் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு நிதி உதவியும் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

    மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த அமைச்சர்களை உடனே கரூருக்கு அனுப்பி வைத்தார். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று இப்பேரவை தெரிவிக்கிறது.

    கரூர் துயர சம்பவத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றவும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த 2 நிமிடம் மவுனம் காக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன், நாகலாந்து மாநில கவர்னராக இருந்த இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக இருந்த டாக்டர் பீலா வெங்கடேசன், நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இவர்களது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர். அத்துடன் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப் பட்டது. சட்டசபை மீண்டும் நாளை காலை கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி சட்டசபை அறையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை விவாதத்தில் எழுப்ப வேண்டிய விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நாளை (15-ந்தேதி) காலை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தில் கேள்வி நேரம் முதலில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். இதன் மீதான விவாதம் 16-ந்தேதி அன்று நடைபெறும். 17-ந்தேதி அன்று நிதித்துறை அமைச்சர் பதில் அளிப்பார். அதன் பிறகு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும்.

    இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் கரூர் துயர சம்பவம், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் மெயின் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அலமதி: கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், கரணி, அம்மனப்பாக்கம், ராமாபுரம்.

    பட்டாபிராம்: ஆவடி செக்போஸ்ட், என்எம் ரோடு, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜ புரம், நேரு பஜார்.

    திருமுல்லைவாயல்: தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் மெயின் ரோடு, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4-வது தெரு, அம்பேத்கர் நகர்.

    ஆவடி: காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 அடி சாலை, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.

    மாங்காடு: ஆவடி ரோடு, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், ஆட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகப்பிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயக நகர், கோரிமேடு, பஜார் தெரு, கண்ணம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் ரோடு.

    எழும்பூர்: எழும்பூர் ஹை ரோடு, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கேப்பு ரோடு, ஜெகதமம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட்.

    பாந்தியன் சாலை: மாண்டித் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் லேண்ட், பழைய ஆணையர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு.

    • சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
    • அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளனர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

    முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு, அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.

    ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
    • ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. இன்று தொடங்கியுள்ள சட்டசபை கூட்டம் வருகிற 17-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர். 

    ×