என் மலர்
செங்கல்பட்டு
- சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
- ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 1000 லிட்டர் கள்ளத்தனமாக விற்க செல்லும் பொழுது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையான போலீசார் விடியற்காலை மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி சோதனை செய்த போது மிகப் பெரிய 11 பேரல்களில் 1000 லிட்டர் டீசல் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் என்பவரிடம் விசாரிக்கும் பொழுது தனது வாகனங்களுக்கு டீசல் வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.இந்த டீசல் வாங்கியதற்கான ரசீது கேட்ட பொழுது அவர் இல்லை எனவும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்கவே போலீசார் தீவிர விசாரணை செய்ததில் தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசரை கள்ளத்தனமாக குறைந்த விலைக்கு வாங்கி வந்தவாசி பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது பிடிபட்டார் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மினி லாரியையும் 11 பேரல் டீசலையும் கைப்பற்றி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் (வயது 44) பிடித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
- தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பெருங்களத்தூரில் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
- சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர்.
பெருங்களத்தூர்:
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர்.
பெருங்களத்தூரில் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம். சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர்.
இதனால் சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது
- கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த ஆதனூர், டி.டி.சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). ரவுடி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மோகன்ராஜ் கொடூராமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்தம் முழுவதும் காய்ந்து இருந்தது.
எனவே மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மட்டும் தனியாக இருந்ததால் கொலை நடந்தது பற்றி அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை. துர்நாற்றம் வீசிய பின்னரே வெளியில் தெரிந்நது.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட மோகன் ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. அவரது தந்தை பம்மலில் வசித்து வருகிறார். தாய் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். பல்வேறு வழக்குகளில் எதிரிகள் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்ததும் மோகன்ராஜ் டி.டி.சி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து உள்ளார்.
இதனை அறிந்த எதிர்தரப்பினர் வீடுபுகுந்து மோகன்ராஜை வெட்டி கொலை செய்து விட்டனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
- கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சளி, சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக படையெடுத்து வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. தற்போது தினந்தோறும் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.
மறைமலை நகராட்சியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் 95 பேர் மற்றும் பொறியாளர் பிரிவு அலுவலர்கள் உட்பட அனைத்து துறை ஊழியர்கள் உள்ளடக்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்களை அழித்தல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை கணக்கெடுத்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், புகை மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது பொத்தேரி கக்கன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மறை மலைநகர் நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் தொழில் சாலை நிர்வாகத்தினர் தங்களது வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள் என்றார்.
- தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
- தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஐபோன் 14 மற்றும் 15 செல்போனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
- விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
மதுராந்தகம்:
திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு லாரி சென்றது. இரவு 12 மணியளவில் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் உடைந்து பீர் ஆறாக ஓடியது. நள்ளிரவு நேரம் என்பதால் லாரியை மீட்டு அதில் இருந்த பீர் பாட்டில் பெட்டிகளை வேறொரு லாரிக்கு மாற்றமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் மின்விளக்கு இல்லை. இதைத்தொடர்ந்து மதுராந்தகம் போலீசார் லாரி கவிழ்ந்த இடத்தில் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் போலீசார் வருவதற்கு முன்பே அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்தனர்.
இதையடுத்து பீர்பாட்டில்களை எடுத்தவர்கள் அங்கேயே ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். அந்த பீர் பாட்டில்களை போலீசார் சேகரித்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இன்று காலை மீட்பு வாகனம் வந்ததும் லாரி மீட்கப்பட்டது. எனினும் ஏராளமான பீர்பாட்டில்கள் உடைந்து வீணானது. சாலை யோரம் லாரி கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தில் இருந்து எல்.எண்டத்தூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி தனியார் பஸ் சென்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய 2 பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
மதுராந்தகம், வன்னியர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 22-ந்தேதி காலை நேதாஜி வழக்கம் போல் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்ல வந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அவர் ஓடிச்சென்று ஏற முயன்றார். இதில் நிலை தடுமாறிய நேதாஜி ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி விழுந்தார்.
அவர் மீது ரெயில் பெட்டிகள் ஏறி இறங்கின. இந்த விபத்தில் நேதாஜியின் இடுப்புக்கு கீழ் உள்ள உடல்பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேதாஜி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சரவணன் தற்கொலை செய்தது எதற்காக என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணத்தின் போது வழங்கிய நகை மற்றும் திருமண செலவு உள்ளிட்டவற்றை பெண் வீட்டார் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது 2-வது மகன் சரவணன் (வயது29). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பெரிய தெருவைச் சேர்ந்த சுவேதா என்பவருக்கும் கடந்த 17-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் சரவணன் திருமணமான 2 நாளிலேயே கடந்த 19-ந்தேதி மனைவியின் முகூர்த்த புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனிலவுக்கு செல்ல சரவணன் திட்டமிட்டு இருந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடைளே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சரவணனும், சுவேதாவும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சரவணன் மாமனாரின் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. சுவேதாவும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்து உள்ளார்.
சரவணன் தற்கொலை செய்தது எதற்காக என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சரவணனின் தந்தை மஞ்சுநாதன் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
அதில் திருமணத்தின் போது வழங்கிய நகை மற்றும் திருமண செலவு உள்ளிட்டவற்றை பெண் வீட்டார் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர். மேலும் திருமணத்தின் போது செய்த செலவு பட்டியலையும் வழங்கி இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, 11 கிலோ எடை கொண்ட காமாட்சி அம்மன் பித்தளை விளக்கு ஆகியவை திருடு போயிருந்தது.
- புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மறைமலைநகர்:
மறைமலைநகர் அடுத்துள்ள மகிந்திரா சிட்டியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூஜைகள் முடிந்து இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை 5 மணியளவில் கோவில் பணியாளரான சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி பகத்சிங் நகரைச் சேர்ந்த செல்வா (வயது28) கோவிலை சுத்தம் செய்ய வந்தார்.
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, 11 கிலோ எடை கொண்ட காமாட்சி அம்மன் பித்தளை விளக்கு ஆகியவை திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.






