என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் மழையால் சுமார் 100 ஏக்கருக்கும் மேலாக நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிந்துவிட்டன.

    இவற்றுக்கு நிவாரணம் வழங்க கோரி, திருமானூர் ஒன்றியம் டெல்டா பகுதியான கீழக்கா வட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய வயல்வெளியில் இறங்கி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் விவசாயிகள் முத்து, உத்திராபதி, வளர்மதி, ஆனந்த், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில செயலாளர் அருளானந்தம், உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், நெற்பயிர்கள் பாதிப்புக்கு காரணமாக உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம்கள்ளூர் சாலையில் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி தர வேண்டும் எனவும் மேலும் ஓடைகளை சரியான முறையில் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நெல் வயல்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி வைத்து விவசாயிகளை சந்தித்து ஆறுதல் படுத்திட வேண்டும் எனவும், முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டம் நடைபெற்றது.
    ஆண்டிபட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சருத்து பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் பெரியதுரை. (வயது 28). இவருக்கும் உத்தம பாளையம் சிங்காரத் தோப்பு தெருவைச் சேர்ந்த சிறுமிக்கும் கடந்த ஆண்டு கன்னியப்பபிள்ளைபட்டி அருகே உள்ள கோபால்சாமி கோவிலில் திருமணம் நடந்தது. இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். 6 மாத குறை பிரசவத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையும் சிறுமியும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

    இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரியதுரை மற்றும் உறவினர்கள் கண்ணன், கீதா, வித்யா, திருக்குமரன், மரகதம், லதா ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெரிய துரையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில், காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    பின்னர் பேரணியாக அண்ணாசிலை, தேரடி, கடைத்தெரு, சத்திரம், மாதா கோவில் வழியாக பேரணி ஒற்றுமைதிடலில் முடிவுற்றது.

    பேரணியில் நகர காங்கிரஸ் தலைவர் சந்திர சேகர், மாவட்ட பொருளாளர் மனோகர், சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராகவன், பழனிச்சாமி, தியாகராஜன், மகளிர் அணி சகுந்தலா, நகர பொறுப்பாளர் ஆண்டனி, செந்தில், சேவா தளம் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    கமல்

    இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    செந்துறை அருகே பார்களில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு உள்ள பார்களில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அமைத்திருந்த தனிப்படை போலீசார், அந்த பார்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செந்துறை ஆலமரம் அருகே உள்ள பாரில் மது விற்ற முரளி கிருஷ்ணன், பெரிய ஏரிக்கரையில் உள்ள பாரில் மது விற்ற பாலாஜி(வயது 34), ரெயில் நிலையம் அருகே உள்ள பாரில் மது விற்ற ராஜேந்திரன்(59) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 126 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வெள்ளையம்மாள் மற்றும் முருகன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை அருகே மழையால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    நெல்லை:

    தாழையூத்து காமராஜர் நகரை சேர்ந்தவர் புதியவன் செல்வன் (வயது 28). தொழிலாளி. நேற்று மாலை இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேலப்பாட்டம் அருகே சென்றபோது பலத்த மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    தா.பழூர் ஒன்றியத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 35 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து தா.பழூர், கோட்டியால், சுத்தமல்லி, விக்கிரமங்கலம், உதயநத்தம் ஆகிய கிராமங்களில் உள்ள பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் கடைவீதியில் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 16 கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டது.

    மேலும் உதயநத்தம் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.500, கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு ரூ.200, கோட்டியால் கிராமத்தில் 4 கடைகளுக்கு ரூ.800, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் 2 கடைகளுக்கு ரூ.700, விக்கிரமங்கலம் கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய், சுத்தமல்லி கிராமத்தில் 5 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடைபெற்ற கடைகளில் இருந்து மொத்தம் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்றியம் முழுவதும் மொத்தம் 35 கடைகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சத்யராஜ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி, பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியதால் தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மருதையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பகல் நேரத்தில் மழை பெய்யாமல், இரவு நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது.

    இந்நிலையில் நேற்று காலை அவ்வப்போது விட்டு, விட்டு மழையாக தூறிக்கொண்டிருந்தது. மதியம் 1.15 மணிக்கு திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.

    இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய பலத்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இரவிலும் மழை பெய்தது. நேற்று பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக் டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது.

    கால்நடை வளர்ப்போர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், நாட்டின காளைகள் என்பதற்கு அரசு கால்நடைமருத்துவர் மூலமாக மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் முற்றிலும் நாட்டின காளைகளாக இருக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டின காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். கலப்பின மற்றும் உயர் ரக காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது.

    எனவே, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை வளர்ப்போர்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு நாட்டினம் என்பதற்கான தனிச்சான்றிதழை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி அரசு கால்நடை மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் இனி வருங்காலங்களில் பங்கு பெற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பூக்கள் விலை உயர்ந்தபோதிலும் வியாபாரிகளும், பொது மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.
    ஆரல்வாய்மொழி:

    குமரிமாவட்டம் தோவாளையில் மலர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்துதான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    தோவாளை, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், மாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பூச்சி பூ, சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரு பகுதியிலிருந்து பட்டர் ரோஸ், மஞ்சள்கிரோந்தி, ராஜபாளையம், வத்தல்குண்டு, மானாமதுரை, கொடைரோடு, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் ஆரல்வாய் மொழி, செண்பகராமன்புதூர், தோப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளி, சம்பங்கி, ரோஜா, பச்சை துளசி, கோழிப்பூ ஆகியவை இந்த சந்தைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை ஆகி வருகிறது.

    இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மலர் சந்தைக்கு கடந்த சிலநாட்களாக பூக்கள் வருவது குறைந்துள்ளது. மழை காரணமாக செடிகளில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதனால் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    தோவாளை மலர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கிரேந்தி ரூ.90, அரளி ரூ.330, ரோஜா ரூ.130, துளசி ரூ.30, வாடமல்லி ரூ.130 மற்றும் பிச்சி ரூ.550-க்கும் மல்லிகை ரூ.600-க்கும் விற்பனை ஆனது. விலை உயர்ந்தபோதிலும் வியாபாரிகளும், பொது மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.
    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (வயது 35) என்பவர் தமிழ் ஆசிரியராக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து அருள்செல்வன் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக அந்த மாணவி தலைமை ஆசிரியை(பொறுப்பு) லதாவிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

    இந்தநிலையில், ஆசிரியர் அருள்செல்வன் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சித்து மாணவிகளை சமாதானப்படுத்தியது தெரியவந்தது.

    விசாரணையை தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் அதனை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இரு வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    புதுச்சேரியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி எட்டப்படவில்லை. 3½ லட்சம் பேர் முதல் தவணையே போடாத நிலை இருந்து வருவதால் மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பரவத்தொடங்கியது. இந்த தாக்கம் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு 2,200 அளவுக்கு அதிகரித்தது. பலி எண்ணிக்கையும் சராசரியாக 35 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

    இந்தநிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். எனவே மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் குழு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

    புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தது இல்லை. தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை முதலில் குறைவாக இருந்தது.

    விழிப்புணர்வு பிரசாரம், சிறப்பு முகாம்கள், 24 மணி நேர முகாம்கள், நிறுவனங்களில் முகாம்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடுவது என தொடர்ச்சியாக அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்தது.

    100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலம் என்ற இலக்கை தொட சுகாதாரத்துறை அவ்வப்போது தடுப்பூசி திருவிழா நடத்தி வருகிறது. அக்டோபர் 2-ந் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி போட முயற்சி எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த இலக்கினை எட்ட முடியவில்லை.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார். ஆனாலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

    பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அதாவது, ஆரம்ப சுகாதார நிலையம் வரை வந்து விட்டு கட்டாய பரிசோதனைக்கு பயந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதெல்லாம் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

    புதுவையில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் வரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 40 ஆயிரத்து 655 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 45 ஆயிரத்து 659 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த வகையில் பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களே 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக இருப்பது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவையில் 18 வயது நிரம்பிய சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை கணக்கில்கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம். கிட்டத்திட்ட 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி போட்டு வருகிறோம். கவர்னர், முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இந்த பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். வருகிற 30-ந்தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கினை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×