என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளது.
    • காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மழை தொடர்பாக அவர் கூறியதாவது:

    காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட வட கடலோர, வட தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வட தமிழக மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலையில் இன்று பிற்பகல் வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை தீபம் ஏற்றும் நேரத்தில் மழையின் தீவிரம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.
    • ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரெயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரெயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது ரெயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அந்த வகையில், ரெயில் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரெயில்களுக்குள்ளோ அல்லது ரெயில் நிலைய வளாகத்திற்குள்ளோ கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரெயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதற்கே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது தீ விபத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

    இதுகுறித்து, சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரெயில்களுக்குள்ளும், ரெயில் நிலைய வளாகங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும்.
    • வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும்.

    சென்னை:

    வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. இதன்படி இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது, வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் வீடு வாடகைக்கு எடுப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் என இருதரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் உள்ளன.

    அவற்றின் முக்கியமான சில அம்சங்கள் பின்வருமாறு:-

    * வீட்டை வாடகைக்குவிட்டால், அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு சாதாரண ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.

    * ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூடாது.

    * வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.

    * ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீசு மூலம் வாடகைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    * வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதனை சரி செய்துகொண்டு, வாடகைதொகையில் கழித்துக்கொள்ளலாம்.

    * வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் நுழையமுடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.

    * வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் என குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல் காலி செய்ய வற்புறுத்தக்கூடாது.

    * வாடகை தகராறு வழக்கு, வீட்டை காலி செய்யும் வழக்கு போன்றவற்றுக்கு இனி 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.

    * வீட்டு வாடகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். சிறிய அல்லது நடுத்தர வாடகை வீட்டினருக்கு டி.டி.எஸ். விலக்கு வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பதிவு செய்வது எப்படி?

    வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சாா் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார், பான் அட்டை என ஏதேனும் ஒரு ஆவணம் போதுமானது. வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு, சட்டப் பாதுகாப்பு போன்ற பலன்கள் இதன்மூலம் வலியுறுத்தப்படும். வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம் உருவாக்கம், தகராறுகளுக்கு தீர்ப்பு, மோசடி ஆகியை தடுக்கப்படும்.

    • கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும்ட என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
    • திமுக அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை.

    பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தத் தவறியதால் மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்துவதற்காக தள்ளுபடி நாடகத்தை அரங்கேற்றிய திமுக அரசு, இப்போது அந்த நாடகத்திற்கும் மூடுவிழா நடத்தியுள்ளதன் விளைவு தான் இந்த விலை ஏற்றம் ஆகும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய அரசு, அதற்கு எதிராக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

    ஆவின் நிறுவனம் அதன் தயாரிப்பான நெய்யின் விலையை அரை கிலோவுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.40, 5 கிலோவுக்கு ரூ.350, 15 கிலோவுக்கு ரூ.1155 வீதம் நேற்று முதல் உயர்த்தியுள்ளது. அதேபோல், ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் நெய், பன்னீர் ஆகிய பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி இப்போது திரும்பப் பெறப்பட்டிருப்பதன் மூலம் தான் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான நாடகம். இந்த ஏமாற்று வேலையை மக்கள் நம்பமாட்டார்கள்.

    உண்மையில் திமுக அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை. மாறாக, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்காக செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடத்தி வந்த ஏமாற்று நாடகத்தை இப்போது திமுக அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. அதன்படி குஜராத் அமுல், கர்நாடகம் நந்தினி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பால் பொருள்களின் விலையை குறைத்த நிலையில், ஆவின் மட்டும் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தவில்லை.

    அப்போதே திமுக அரசின் இந்த துரோகத்தை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டேன். ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் பிறகு தான் திமுக அரசு தள்ளுபடி வழங்கும் நாடகத்தை அரங்கேற்றியது.

    ஜி.எஸ்.டி வரிவிகிதக் குறைப்பின் அடிப்படையில் எந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டுமோ, அதே தொகையை நெய்யுக்கும், பன்னீருக்கும் மட்டும் நவம்பர் 30&ஆம் தேதி வரை தள்ளுபடியாக வழங்குவதாக ஆவின் அறிவித்தது. அதுவும் கூட பிற பால் பொருள்களுக்கு வழங்கப்படவில்லை. திமுக அரசின் இந்த நடவடிக்கையும் மக்களை ஏமாற்றும் நாடகம் தான் என்று விமர்சித்திருந்த நான், நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் போது, திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர்

    ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள்

    அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும் என்று குற்றஞ்சாட்டியிருந்தேன். இரு மாதங்களுக்கு முன் நான் என்ன கூறியிருந்தேனோ, அது தான் இப்போது நடந்திருக்கிறது. திமுக முகமூடி கிழிந்திருக்கிறது.

    நெய்யுக்கும், பன்னீருக்கும் வழங்கி வந்த தள்ளுபடியை திமுக அரசு திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு முன் நெய், பன்னீர் ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டனவோ, அதே விலை மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் திருட்டுத்தனங்களை செய்து திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. பொதுவாக பேராசை பிடித்த தனியார் வணிக நிறுவனங்கள் தான் இத்தகைய மோசடிகளை செய்யும். ஆனால், அத்தகைய மோசடிகளை கண்டுபிடித்து தடுக்க வேண்டிய திமுக அரசே, ஜி.எஸ்.டி வரிகுறைப்பை வழங்காமல் மொசடி செய்வதை மன்னிக்க முடியாது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை 2023-ஆம் ஆண்டுக்குள் ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆக உயர்ந்தது. இப்போது ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் மூலம் வழங்கப்பட வேண்டிய 40 ரூபாயை வழங்காமல் இருப்பதன் மூலம் ஆவின் நெய் விலை 5 கட்டங்களாக ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. இது 44% உயர்வு ஆகும். மனசாட்சி உள்ள எந்த அரசும் இந்த அளவுக்கு பால்பொருள் விலையை உயர்த்தாது.

    திமுக அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை. அதனால் தான் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டண உயர்வு, 175% வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, வாகன வரி உயர்வு, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு மறைமுகமாக உயர்வு என அடுக்கடுக்காக மக்கள் மீது சுமைகளை சுமத்தியது. அவற்றின் தொடர்ச்சியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் நெய் விலையை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது.

    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதை தவிர காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர்.
    • நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம்.

    திருப்பூர்:

    காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம், திருப்பூர் உள்பட ஒரு சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பார் உரிமையாளர்கள் வரவேற்றாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், பல்வேறு குளறுபடி நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பார் உரிமையாளர்கள், இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் டாஸ்மாக் மதுக்கூட உரிமம் பெற்று தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலிபாட்டில்களை சேகரித்து கொள்ளும் உரிமம் பெற்று வருகிறோம். தற்போது எங்கள் கடையில் சேகரமாகும் பாட்டில்களை தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    எங்களுக்கு உரிமம் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், எங்களது வியாபார நஷ்டத்தை சரி செய்து, சுமூகமான வியாபாரம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் காலிபாட்டில்களால் ஏற்படும் நஷ்டத்தை மட்டும் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
    • கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    • 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற தேர்தலையும் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட வருசநாடு-வாலிப்பாறை இடையே சாலை அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

    குறிப்பிட்ட அளவு சாலை அமைக்க வனத்துறையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரடியாக இடத்தை பார்வையிட்டு சாலை அமைக்கும் பணிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தியும், சுமூகத்தீர்வு ஏற்படவில்லை. குறிப்பிட்ட இடத்துக்கு பதிலாக பொதுமக்கள் 2 மடங்கு இடத்தை தருவதாக தெரிவித்தனர். வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வேலி அமைத்து தரப்படும் என்றும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் எனவும் வனத்துறையினரிடம் உறுதிமொழி அளித்தும், சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள், வீடுகளில் கருப்பு கொடி, கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு போன்ற பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    மேலும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற தேர்தலையும் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று வருசநாடு, தும்மக்குண்டு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் வருகை தந்தார். அப்போது மயிலாடும்பாறையில் கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். சாலை அமைக்கும் பணியை ஏன் தாமதம் செய்கிறீர்கள் என கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஜன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். இன்னும் 15 நாட்களில் ஒரு கமிட்டி அமைத்து கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் சாலை அமைக்கும் பணிக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் ஆடு, மாடுகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மகாராஜன் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் மயிலாடும்பாறை கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
    • முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற் றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கும் 2023-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும், அதே ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பினமாக மகளிர் ஒருவருக்கும் 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து சுகிதா சாரங்கராஜிக்கும் வழங்கப்பட்டது.

    அவற்றின் தொடர்ச்சியாக, 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

    டி.இ.ஆர்.சுகுமார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து நேர்முகமாகப் பேட்டிகண்டு சுவையான செய்திகளை மக்களுக்கு வழங்கியவர் ஆவார். தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும் அவர் எழுதி வரும் "தலையங்கம்", வாரம் ஒருமுறை "பேனா மன்னன்" என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்து வரும் பதில்களும் மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்று உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் டி.இ.ஆர்.சுகுமார், உலக அளவில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சிறப்பான நிகழ்வுகளின்போது, அந்தந்த நாடுகளுக்குச் சென்று, செய்திகளைத் திரட்டி, தினத்தந்தி வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பான இதழியல் துறை அனுபவங்களையும் கொண்டுள்ளார். அத்துடன் முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நேர்மையுடனும் நெஞ்சுறுதியோடும் தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றிவரும் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றையதினம் 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 லட்சம் ரூபாய் பொற்கிழி ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×