என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சபரிமலைக்கு ரெயிலில் செல்லும் பக்தர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த தெற்கு ரெயில்வே
- ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.
- ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரெயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரெயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது ரெயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில், ரெயில் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரெயில்களுக்குள்ளோ அல்லது ரெயில் நிலைய வளாகத்திற்குள்ளோ கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரெயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதற்கே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது தீ விபத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதுகுறித்து, சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரெயில்களுக்குள்ளும், ரெயில் நிலைய வளாகங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






