search icon
என் மலர்tooltip icon

    மத்திய பட்ஜெட் - 2022

    டிஜிட்டல் சொத்தாக கருதப்படும் கிரிப்டோகரன்சிக்கு மத்திய அரசின் நிதி அறிக்கையில் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டில்  அறிவித்துள்ளார். ஆனால், கிரிப்டோகரன்சியை எப்படி அனுமதிக்கும், அதற்கான நெறிமுறைகளை இன்றும் மத்திய அரசு வெளியிடவில்லை.

    இந்த நிலையில் கிரிப்டோகரன்சி டிஜிட்டல் சொத்தாக கருதப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன், அதற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அமலில் இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரியில் உச்சப்பட்சமே 28 சதவீதம்தான். அதையும் தாண்டி 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    கிரிப்டோகரன்சி

    மேலும், ‘‘டிஜிட்டல் சொத்து டிரான்ஸ்பர் மூலம் கிடைக்கும் எந்தெவொரு வருமானத்திற்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும். கையகப்படுத்துதலுக்கான செலவைத் தவிர்த்து வேறேதுனும் செலவு மற்றும் அலவன்ஸ் போன்றவற்றிற்கு வரி குறைக்கப்படாது’’ என தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் கோடிக்கணக்கான ஏழை மக்கள் 100 நாட்கள் வேலைப்பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகிறார்கள். கிராமப்புறத்தில் மிகவும் ஏழ்மையான பெண்களுக்கு இந்த வேலை வாய்ப்பு திட்டம் மிகவும் கைக்கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    2021-2022-ம் நிதியாண்டில் 98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது 2022-23-ம் நிதியாண்டில் 73 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 25 சதவீதம் குறைவாகும்.


    73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020-2021 நிதியாண்டில் செலவு செய்ததை விட சுமார் 34 சதவீதம் குறைவாகும். 2020-2021 நிதியாண்டில் 1.1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    2018 டிசம்பரில் 1.9 கோடி பேர் வேலை பெற்றனர். 2019 டிசம்பர் 1.7 கோடியாக குறைந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக டிசம்பர் 2020-ல் 2.7 கோடியாக அதிகரித்தது. 2021 டிசம்பரில் 2.4 கோடி பேர் வேலைப் பெற்றனர்.

    கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    புது டெல்லி:

    இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த வருடமும், இந்த வருடமும் வரியை உயர்த்தி நான் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை. பற்றாக்குறை இருந்தபோதிலும் கொரோனா சூழலில் மக்கள் மீது வரி சுமை ஏற்றக்கூடாது என பிரதமர் மோடி எங்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.

    மத்திய ரிசர்வ் வங்கி ஒரு டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும், கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை. கிரிப்டோ கரன்சி குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் குறித்த விவரம் ஆலோசனைக்கு பிறகு தெரியவரும்.

    நிர்மலா சீதாராமன்

    வேலையிழப்பு மற்றும் பணவீக்கத்தை சரி செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்கள் அரசு பணவீக்கத்தை இரண்டு இலக்க எண்ணில் செல்வதற்கு அனுமதிக்காது. 2014-ம் ஆண்டுக்கு முன் பணவீக்கம் 10, 11, 12, 13 என இருந்தது.

    கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பலரையும் வேலை இழக்க செய்துள்ளது. ஆனால் நம்முடைய ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பு பலரது வேலையை பாதுகாத்துள்ளது. வேலை இழந்தவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் நாங்கள் உதவி வருகிறோம். நாங்கள் எதையுமே செய்யவில்லை என எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு நியாயம் அல்ல.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    குடைக்கு வரியை உயர்த்திவிட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும்.
    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக அரசில், பாரதப் பிரதமரை நான் நேரில் சந்திக்கும்போதும், கடிதங்களின் வாயிலாகவும் அதிமுக அரசின் கனவுத்  திட்டமான கோதாவரி – காவேரி இணைப்பினை நிறைவேற்றிட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தேன்.  அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்புத்  திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள 
    பாரதப் பிரதமருக்கு, அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், கங்கை-கோதாவரி-கிருஷ்ணா–காவேரி–பெண்ணையாறு நதிகள் இணைப்புத்  திட்டம் இறுதி  செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு  செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் 44,000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்த   நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும், எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முக்கிய அம்சங்களும் உள்ளன.

    * நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடு எதிர்பார்க்கப்படுகிறது.

    * மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதற்காக, 1 லட்சம்  கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.  இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * விவசாயிகளிடம் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.70 லட்சம் கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும். 

    * நடப்பு நிதி  ஆண்டில் பிரதமர் வீடு  வழங்கும்  திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * 3.80 லட்சம் கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    * 60 லட்சம் பு ய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    * கொரோனா நோய்ப் பெருந்தொற்று போன்ற நோய்களின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, நாடு முழுவதும்  தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    * மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத்  திட்டத்தில் சலுகை அறிவித்துள்ளதை  வரவேற்கிறேன்.

    * ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  சிறு குறு நிறுவனங்களுக்கு  2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    * 2030-ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மூலம் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம். இந்த ஆண்டு இதற்காக 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * ராணுவத் தளவாட உற்பத்தியில் 68 சதவீத தயாரிப்புகள் உள்நாட்டிலேயே தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராக இருக்கும்போதே, தமிழ்நாட்டில் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழில்களைத் தொடங்குவதற்கு சேலம்,  திருச்சி, ஓசூர் போன்ற ஒரு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    * 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.  மேலும், 200 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    * நடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி  ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    * சுமார் 1 லட்சம் அஞ்சலகங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாடு முழுவதும் உள்ள தபால் துறை ஊழியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    * 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், மேலும் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு உலகத் தரத்திற்கு ஈடாக சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், துரித சாலைப் போக்குவரத்து வச  மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும்.

    * எனினும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வது, மாத வருமானம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.  எனவே, வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

    மேலும், குடைக்கு வரியை உயர்த்திவிட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.  எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும்.

    * மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி  ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும்  திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை,  60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. 

    அதிமுக சார்பில் பிரதமருக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட்டை நிதி அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிடிட்டுள்ளார்.
    இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து நாளை காலை 11 மணிக்கு விரிவாக உரையாற்ற இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு,  நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

    இந்நிலையில் இந்த பட்ஜெட் நாட்டிற்கு வளர்ச்சியை கொண்டு வரும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    மக்களுக்கு சாதகமான, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாராட்டுகிறேன். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது. “அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலைகள்” என்ற கொள்கையை இந்த பட்ஜெட் பின்பற்றுகிறது. பசுமை வேலைகளுக்கான புதிய ஏற்பாடும் இந்த பட்ஜெட்டில் உள்ளது. இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை இந்த பட்ஜெட் உறுதி செய்கிறது.

    நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளுக்கு 'பர்வத் மாலா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மலைகளுக்கிடையில் நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்கும். இதன் மூலம் எல்லையோர கிராமங்களுக்கு பலம் கிடைக்கும்.

    பாஜக என்னை பட்ஜெட் குறித்தும், சுய சார்பு இந்தியா குறித்தும் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனால் நாளை காலை 11 மணிக்கு விரிவாக உரையாற்றுகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை என கூறி ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு,  நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.  

    இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு ஒன்றுமில்லை என்பதை குறிப்பிட்டு, “வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார். 

    இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “இது மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட். சம்பளம் பெறும் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் , இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள்  உள்ளிட்ட பிரிவினருக்கு  பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்திய பட்ஜெட்டில் சுங்க வரியில் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:

    கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களில், நாங்கள் பல சுங்க வரி விலக்குகளை ஆய்வு செய்தோம். தற்போது மீண்டும் ஒரு விரிவான ஆலோசனையை மேற்கொண்டுள்ளோம்,  இந்த ஆலோசனைகளின் விளைவாக, 350 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளை படிப்படியாக நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

    சில விவசாய பொருட்கள், இரசாயனங்கள், துணிகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் போதுமான உள்நாட்டு திறன் உள்ள மருந்துகள் மற்றும் மருந்துகள் மீதான சுங்க வரி விலக்கு இதில் அடங்கும். மேலும், எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, சுங்கக் கட்டண அட்டவணையிலேயே  பல சலுகை விகிதங்கள் இணைக்கப்படுகின்றன. இது சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும்.  சில இரசாயனங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

    வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5% ஆக குறைக்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விவசாயத் துறைக்கான கருவிகள் மற்றும் கருவிகள் மீதான சுங்க வரி விலக்கு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறித்தார்.

    மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்ட அறிக்கைகளை செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

    முன்னதாக இன்று காலை 9 மணிக்கு நிர்மலா சீதாராமன் தனது நிதி அமைச்சக மூத்த அதிகாரிகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார். முதலில் அவர் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார்.

    பிறகு பாராளுமன்றத்துக்கு புறப்பட்டு வந்தார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    11 மணிக்கு பாராளுமன்ற மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அனைவரும் எதிர்பார்த்தது போன்று பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஒருவர் செலுத்தும் வரி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது.

    தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. தற்போதும் அதே நிலையே தொடரும்.

    ரூ.2½ லட்சத்துக்கு மேலும், ரூ.15 லட்சத்துக்கு மேலும் தற்போது விதிக்கப்படும் வரி சதவீதம் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக நீடிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் சுமார் ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது.

    கோதாவரி- கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு- காவிரி, தமங்கா-பிஞ்சல், பர்தாபி- நர்மதா ஆகிய 5 நதிகள் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. நதிகளை இணைக்கும் திட்டம் தமிழகத்துக்கு பலன் அளிக்கும்.

    மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்ட அறிக்கைகளை செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும். ரூ.4 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மொபைல் சார்ஜர், கேமரா லென்சுகள் உள்ளிட்ட உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் சில பொருட்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

    வைர நகைகளுக்கான சுங்கவரி குறைக்கப்படுகிறது. வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    மொபைல் சார்ஜர், கேமரா லென்சுகள் உள்ளிட்ட உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது.

    * தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

    * மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது.

    * உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    * அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    * ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    * ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * எல்.ஐ.சி. பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்.

    * சுயசார்பு திட்டத்தின் கீழ் தொழில் துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    * நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    * அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும்.

    * இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்.

    * தடுப்பூசி திட்டம் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது பொருளாதார மீட்சிக்கு பெரிய அளவில் உதவியது.

    * மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டன.

    * இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    * போக்குவரத்து வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    * நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விரிவுபடுத்தப்படும்.

    * இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணை வித்துக்கள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

    * குறைந்தபட்ச கொள்முதல் விலை மூலம் வேளாண் விளை பொருட்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.

    * பல்வேறு விவசாய பணிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும்.

    * கிசான் டிரோன் மூலம் நிலங்களை அளப்பது, வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

    * ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

    * சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

    * உள்நாட்டு எண்ணை வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். உள்நாட்டில் எண்ணை வித்துக்கள் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    * பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் ரூ.48 ஆயிரம் கோடி செலவில் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

    * 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

    * டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    * ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்.

    * பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 2022-23-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க ரு.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * அதிநவீன இ-பாஸ் போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

    * நவீன தொழில்நுட்பத்துடன் ‘சிப்’ பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்.

    * மின்சார வாகனங்களில் பேட்டரிகளை ஜார்ஜ் செய்வதற்கு பதிலாக பிரத்தியேக மையங்களில் மாற்றிக் கொள்ளும் வசதியுடன் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

    * நில சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவு முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

    * நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    * அனிமே‌ஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த, தேவைகளை பூர்த்தி செய்ய பேனல் அமைக்கப்படும்.

    * பொதுபோக்குவரத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு இல்லாத தூய்மையான போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    * 2023-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு முடிக்கப்படும்.

    * பாதுகாப்பு படைக்கு தேவையான பொருட்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்.

    * சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்படும்.

    * வடகிழக்கு மாநில மேம்பாட்டுக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * 2030-ம் ஆண்டுக்குள் 280 கிலோவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

    * அதி நவீன இ-பாஸ் போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

    * பொருளாதார மண்டல திட்டத்தை மாற்றி மாநில அரசுகளையும் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்படும்.

    * அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

    * கடந்த ஆண்டை விட மூலதன செலவினங்களுக்கு 35.4 சதவீதம் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    * மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    * ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.

    * தேசிய ஓய்வு திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் ஆக உயர்த்தப்படும். உள்நாட்டில் மின்னணு பொருள் உற்பத்தி ஊக்கவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
    புது டெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்ததாவது:-

    பெரு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

    மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும்.

    ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

    வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

    கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

    மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புது டெல்லி: 

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை. 

    மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது 30 % வரி.

    வரம்புக்கு மேல் உள்ள மெய்நிகர் சொத்துக்களை மாற்றினால் 1 சதவீதம் டி.டி.எஸ். கழிவு.

    கிரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய் மீது 30% வரி விதிப்பு.

    மாநில அரசுகள் ஊழியர்களுக்கு என்.பி.எஸ். பங்களிப்பில் வரி விலக்கு 
    10% லிருந்து 14% ஆக அதிகரிப்பு.

    தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

    புதிதாக இணைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி சலுகை  இன்னும் 1 வருடத்திற்கு நீட்டிப்பு.

    ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பு.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக, கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரியை 15 சதவீதமாக குறைக்க அரசு முன்மொழிகிறது. 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×