என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம்.
    • ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா கூட்டணியில் இடம் பெறக்கூடாது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

    சென்னை வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்று கூறினார்.

    இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணி அமைய பல்வேறு நிபந்தனைகளை இ.பி.எஸ். விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    * தமிழகத்தில் 2026 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி.

    * தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவை அ.தி.மு.க.தான் எடுக்கும்.

    * ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா கூட்டணியில் இடம் பெறக்கூடாது.

    * அண்ணாமலையை பா.ஜ.க. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.
    • தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நேர்ந்ததாக நேற்று தகவல் வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் நண்பர்களுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.

    மேலும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததாக SFI மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை.
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

    சென்னையில் 8-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை பறித்த கொள்ளையன் நேற்று நள்ளிரவு தரமணி ரெயில் நிலையம் அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    இந்நிலையில் வடமாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் நேற்று சைதாப்பேட்டையில் ஆரம்பித்து காலை 6 மணி முதல் 7 வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

    * தாம்பரத்தில் இதேபோன்று நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் உடனடியாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தது.

    * கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் ஏறுபவர்கள் குறித்து கண்காணிக்குமாறு முன்பே ஏர்போர்ட் அதிகாரிகளிடம் கூறி இருந்தோம்.

    * அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை. அதுவும் ஒரு ஆதாரமானது.

    * ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த கொள்ளையர்களை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    * செயின் பறிப்பு கொள்ளையர்கள் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுள்ளனர்.

    * நேற்று பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மீது மும்பையில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    * ஒருவன் முந்தைய நாள் இரவும், மற்ற இருவரும் அடுத்த நாள் அதிகாலையும் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    * ஒருவன் முன்னதாக வந்து பைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்த பின்னர் மற்ற இருவர் அடுத்த நாள் வந்து கைவரிசை.

    * கடந்தாண்டு சென்னையில் நடந்த 34 செயின் பறிப்பு சம்பவங்களில் 33-ல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    * நேற்று நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் இரானி கொள்ளையர்கள். இவர்கள் இதற்கு முன்பு சென்னையில் கொள்ளைகளை அரங்கேற்றினரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    * சென்னையில் கொள்ளையன் சாலையில் பைக் ஓட்டிய வேகத்தை பார்க்கும்போது இதற்கு முன்பே வந்ததுபோல் தான் உள்ளது.

    * கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

    * அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான்.
    • எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும்.

    சென்னை:

    டெல்லியில் அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக சட்டசபையில் பேசும்பொருளாக மாறி உள்ளது. சட்டசபையில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,

    அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம் என்று பேசினார்.

    இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போது நீங்கள் (அதிமுக) தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என கூறினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பதில் அளிக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும் என்று சினிமா படபாணியில் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். 

    • நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது.
    • ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் கணவாய், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே இன்று காலை 6:30 மணிக்கு மேல் புனேவில் இருந்து பெருந்துறைக்கு செந்தில் என்ற டிரைவர் டேங்கர் லாரியில் கச்சா எண்ணை பாராம் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

    அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர்லாரி முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி வண்டி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளானது.

    இதில் டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது. இந்த டேங்கர் லாரியை ஓட்டி வந்த செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


    உடனே அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட செந்தில்குமாரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கவிழ்ந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால், தொப்பூர் கணவாய் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    • கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.
    • குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.

    கருத்தரங்கில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவதற்கான நுண்ணறிவுகள் மற்றும் உத்திகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் ஐ.ஏ.எஸ்., ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால் ஐ.பி.எஸ்., கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


    கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாரம்பரிய விளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது. கல்லூரி இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரித் தாளாளர் ப. வெங்கடேஷ் ராஜா, அர்ப்பணிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட தேர்வுத் தயாரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தலைமை உரையை நிகழ்த்தினார்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப், ஐ.ஏ.எஸ்., பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.

    ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், ஐ.பி.எஸ்., தலைமைத்துவம் மற்றும் சிவில் சேவைகளில் சட்ட அமலாக்கத்தின் முக்கியப் பங்கு குறித்து பேசி ஊக்கப்படுத்தினார்.

    கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன், வெற்றிக்கான நடைமுறை உத்திகளைக் கொண்டு மாணவர்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் ஒரு ஊடாடும் கேள்வி பதில் அமர்வை நடத்தினார்.


    நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டு, கருத்தரங்கம் நிறைவு பெற்றது. பங்கேற்பாளர்கள் குடிமைப் பணித் தேர்வின் சவால்களை எதிர்கொள்ள ஒரு மிகச் சிறப்பான முன்னெடுப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது.

    • தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
    • தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தினேன்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப்போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து (மொழிக்கொள்கை) அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

    * தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன்.

    * பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்.

    * தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கூறினார். 

    • 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக சென்ற லாரியை சோதனை செய்தபோது அதில் தர்பூசணி பழங்களுக்கு நடுவே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    தர்பூசணி பழங்களுக்கு இடையே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
    • மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.

    சென்னை:

    டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    * காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதாக அடிக்கடி செய்திகள் வெளியிடப்படுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மத்திய அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு துணை நிற்க கூடாது.

    * உச்சநீதிமன்ற தீர்ப்புபடி, முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தி, நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    * தமிழ்நாட்டில் நடந்த டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

    * தமிழ்நாட்டில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    * அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.

    * தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.

    முன்னதாக, பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் எனக்கூறுவது, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருகின்றனர். 

    • 10 நாட்களுக்கு முன்பாக 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.
    • குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் , பில்டிங் காண்ட்ராக்டர். இவர் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறார். 4 வீடுகள் வைத்திருக்கும் இவர் முதல் 2 வீடுகளில் தனது குடும்பத்துடன் தங்கி வருகிறார்.

    மீதமுள்ள 2 வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் குடும்பத்துடன் ஒருவர் கடைசி வீட்டிற்கு குடிவந்துள்ளார்.10 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மதுரையை சேர்ந்த சக்திவேல் என்ற 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.

    பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களுக்கும் அருகில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே லேசான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பேச்சுவார்த்தை நடத்திய வீட்டின் உரிமையாளர் சேகர், குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணிய வாலிபர்கள் இருவரும் நேற்று இரவு மது போதையில் அரிவாளுடன் சேகரின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து டி.வி., சின்டெக்ஸ் டேங்க், கதவு ஜன்னல்களை பட்டா கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். அப்போது சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து சேகர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அலெக்ஸ் மற்றும் சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வாடகைக்கு குடி வந்த 10-ம் நாள் உரிமையாளர் வீட்டை பட்டா கத்தி கொண்டு இளைஞர்கள் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும்.
    • சட்டமன்ற, பாராளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும் உண்டு.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக தண்ணீர் நாளை (மார்ச் 22) ஒட்டி வருகிற 29-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருள் பட்டியலை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. அவற்றில் முதலாவதாக உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்" என்பது அளிக்கப்பட்டுள்ளது.

    உலக தண்ணீர் நாள் கிராமசபை கூட்டம் தமிழ்நாட்டின் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யக்கோரும் தீர்மானத்தினை உங்கள் ஊர் கிராமசபையில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். இந்திய அரசு, தமிழ்நாடு அரசு போன்றே மற்றுமொரு அதிகாரமிக்க அமைப்பு கிராம ஊராட்சி அரசு ஆகும். சட்டமன்ற, பாராளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும் உண்டு. எனவே, தமிழ்நாட்டின் நீர் வளங்களை காப்பாற்றும் நோக்கில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து நீர்நிலைகளைக் காப்போம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளமாக அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
    • தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துஉள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.22 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1073 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1235 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×