என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு.
    • தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கின்றன.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கேரியர் என்ற உலகின் முன்னணி குளிரூட்டி நிறுவனம் அதன் உற்பத்தி மையத்தை சென்னை புறகரில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது சென்னைக்கு மிக அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திர அரசுடன் விரைவில் கையெழுத்திடவுள்ளது.

    அதேபோல், தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் தென்னிந்தியாவில் ரூ. 5000 கோடி மதிப்பில் அதன் முதல் உற்பத்தி மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை விட ஆந்திரத்தில்தான் முதலீட்டு சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறி அங்கு முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. அதனால், அதற்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் 6 நிறுவனங்களும் ரூ.2000 கோடி மதிப்பிலான தங்களின் உற்பத்தி ஆலைகளை ஸ்ரீசிட்டியில் அமைக்க முடிவு செய்துள்ளன.

    தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஆந்திரத்தில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால்தான் இந்த நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள் அதற்கான அரசின் அனுமதியையும், ஒப்புதலையும் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அவை உண்மை என்பதை தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய இரு முதன்மை நிறுவனங்களும், 6 துணை நிறுவனங்களும் ஆந்திராவுக்கு சென்றிருப்பது காட்டுகிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பதுதான் இதற்குக் காரணம் ஆகும்.

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலீடுகள் குவிவதைப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய திராவிட மாடல் அரசு மறுக்கிறது.

    எனவே, பயனற்ற செய்வதை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க.வைப்பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.
    • தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம்.

    * அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.

    * தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    * தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றார்.

    இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார். 

    • அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.
    • வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    • 1991-ம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தற்போது வரை 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வந்துள்ளனர்.

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா? என்று சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது வரை 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியே வந்துள்ளனர். ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பதில் அளித்தார்.

    • வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இதையொட்டி அவரது அதிரடி அரசியல் திட்டங்கள் பரபரப்பாகி வருகிறது.

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சி முதல் மாநாட்டில் ஆட்சியில் பங்கு மற்றும் ஊழல் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மீதும் அவர் பேசிய அதிரடி கருத்துகள் அரசியல் அரங்கையே அதிர வைத்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன், பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. கூட்டணியும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனும், தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடனும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிட்டன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணி 39.72 சதவீதமும் பெற்ற நிலையில் 5.66 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிவு ஏற்பட்டது. அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உடனும், பா.ஜ.க., ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

    எனவே வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியின் அரசியல் பார்வை விஜய் கட்சியை உன்னிப்பாக உற்று நோக்கி வந்தது.

    வருகிற தேர்தலில் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் அரசியல் செயல்பாடு அமைந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் திடீர் திருப்புமுனையாக அமைந்ததுடன் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகி இருக்கிறது. எனவே தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    4 முனை போட்டி யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி கனியை பறிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் தனது கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.

    அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதையடுத்து 17 வயது சிறுமி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை.
    • வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை. பாதகமாகத்தான் உள்ளது. விதிமுறைகளை தளர்த்த நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. புதிய ஒப்பந்தத்தின் விதிமுறையால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தில் எங்களால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாது. அதனால் நாளை (27-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 4 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயங்காது. எரிவாயு ஏற்றும் 10 இடங்களில் லோடுகளை ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிற மண்டலத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம. அவர்களும் போராட தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.
    • அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழகத்தின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவரும், அனைவராலும் 'கானா' என்று பாசத்தோடு அழைப்பவருமான ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடன் மிகவும் நெருங்கிப் பழகியவரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா பேரன்பைப் பெற்றவருமான அன்பு அண்ணன் கருப்பசாமி பாண்டியன், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர், கழக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர்.

    1998-ல் திருநெல்வேலியில் கழக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. அன்பு அண்ணன் கருப்பசாமி பாண்டியன் இழந்து வாடும். அவரது மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான வி.கே.பி. சங்கர், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும்.
    • திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் வகையில், மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் 'மகளிர் மதிப்பு திட்டம்' என்ற சிறுசேமிப்புத் திட்டம் கடந்த 2023 மார்ச் 31-ந்தேதி தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தில், பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்ணின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையிலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர் மூலமும் இந்த சேமிப்பு திட்டத்தைத் தொடங்கலாம். குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும். இதன்படி, இத்திட்டம் இம்மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில், இத்திட்டத்தில் இதுவரை சேராதவர்கள் உடனடியாக சேர்ந்து பயன்பெறுமாறு அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது: -

    மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு தொடங்கியுள்ள மகளிர் மதிப்பு திட்டம் பெண்களுக்கு ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து ஓராண்டு நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதித் தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்கள், பாதுகாவலர்கள் மரணம் அடைந்தாலோ தீவிர மருத்துவ காரணங்கள் இருந்தாலோ இந்தக் கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்குத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளலாம். ஆனால், அவ்வாறு முடித்துக் கொள்ளும் பட்சத்தில் வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும். வரும் 31-ந் தேதியுடன் இத்திட்டம் முடிவடைய உள்ளதால், பெண்கள், பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்குக் https://www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். இத்திட்டம் தொடங்கப்பட்ட தில் இருந்து இதுவரை சென்னை நகர மண்டல அஞ்சலத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் 94,900 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.843 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.

    • பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது.
    • ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்பவர்கள் பயோமெட்ரிக் முறைப்படி தங்கள் கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ரேசன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் ரேகை வைக்க வேண்டும்.

    ஏற்கனவே கைரேகைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களின் ரேகை அதனுடன் ஒத்திருந்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

    ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலர் புதுப்பிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

    ரேசன் கடை ஊழியர்கள் கைரேகை பொருந்தாதவர்களிடம் நீங்கள் இன்னும் ஆதார் கார்டில் உங்கள் கைரேகையை அப்டேட் செய்யவில்லை. எனவே பொருட்கள் வாங்க முடியாது என்கிறார்கள்.

    ஆனால் விபரம் புரியாத சாதாரண மக்கள் 'சார். என்னிடம் ஆதார்கார்டும் இருக்கிறது. அதில் என் கைரேகை தான் இருக்கிறது' என்று சொல்கிறார்கள்.

    அதற்கு ரேசன் ஊழியர்களும் நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை கேட்டதும் எதுவும் புரியாமல் சினிமாவில் வடிவேலு 'அப்ரண்டி ஷிப்' என்பதை 'அப்ரசண்டிகள்' என்பதை போல் ஏதோ அப்ரடிக்காம்... ஒண்ணும் புரியலை என்றபடி பரிதாபமாக திரும்பி செல்கிறார்கள்.

    விருகம்பாக்கம் மின் மயானம் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருள் வாங்க சென்றவர் அவரது ரேகை ஒத்துப்போகவில்லை என்றதும் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து சென்றுள்ளார். அவரது ரேகையும் ஒத்துப்போகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றார்கள். தினசரி வேலைக்கு செல்லும் அவர்கள் கூறியதாவது:-

    ஆதார் கார்டில் கைரேகையை அப்டேட் செய்ய கோயம்பேட்டில் இருக்கும் ஆதார் தலைமை அலுவலகம் அல்லது போஸ்ட் ஆபீஸ்களுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.

    கோயம்பேட்டுக்கு சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருந்தாலும் முடியாமல் செல்பவர்களும் உண்டு. வேலைக்கு லீவு போட முடியாது என்பதால் தனியார் நெட்சென்டர்களுக்கு சென்று முன்கூட்டி நேரம் முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கு ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அனைவரது ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய ரூ.1000 செலவாகும்.

    எங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி தான் நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மாதத்திற்குரிய பொருட்கள் எதையும் வாங்க முடியவில்லை.

    பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது. இதற்காக அரசு தரும் மானிய தொகையை ஆதார் கார்டு அப்டேட் செய்ய செலவழிக்க வேண்டி இருப்பதாக அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

    * தமிழகம், புதுவை காரைக்காலில் 28-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். ஏப்ரல் 1-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.

    * தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    * சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும்.
    • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    எப்போதுமே உண்மையாக இருந்தால் நிச்சயம் இறையருள் கிடைக்கும். அதற்கு பல உதாரணங்களை கூறலாம். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

    இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க. கட்சிதான் ஆட்சியில் அமரும்.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. அதனை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி. அதனால் தான் இன்று ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. அதற்கு காரணமான பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு நாயகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஓ.பி.எஸ். பேசினார்.

    ×