என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
- வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் வேளாண் துறையின் பல்வேறு கிளைகளில் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்துப் பணிகளையும் செய்யும்படி தி.மு.க. அரசு கட்டாயப்படுத்துகிறது. அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வல்லமை பெற்றிருக்கிறார்களோ, அவர்களை அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த செயலாகும். வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது.
எனவே, உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அவரவர் துறைகளில் பணி செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- "வானத்தைப் போல" மனம் படைத்து, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டோடு வாழ்ந்தவர் தே.மு.தி.க. தலைவர்.
- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களோடு இணைந்து பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"வானத்தைப் போல" மனம் படைத்து, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டோடு வாழ்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், "பத்ம பூஷன்" அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று, சென்னை, தேமுதிக அலுவலகத்தில் உள்ள "கேப்டன் ஆலயம்" நினைவிடத்தில் நடைபெற்ற 2-ம் ஆண்டு குருபூஜை நிகழ்வில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களோடு இணைந்து பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினேன்.
கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயர் துடைத்துள்ளோம்.
- நலம் பெற்றோரின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்!
#FullBodyHealthCheckUps, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்க நிலையிலேயே பல இலட்சம் மக்களின் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தரச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் உயிர் காத்துள்ளோம்! முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயர் துடைத்துள்ளோம்.
நலம் பெற்றோரின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
- மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தே.மு.தி.க. நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
- இசை அமைப்பாளர் தீனா மற்றும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் ஆலயம் நினைவிடத்தில் கேப்டனின் 2-ம் ஆண்டு குருபூஜை என்ற பெயரில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கோயம்பேட்டில் உள்ள மாநிலத்தேர்தல் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார்.
இந்த ஊர்வலத்தில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன்களான தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த விஜயகாந்த் சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்தார்.
தே.மு.தி.க. நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், நடிகை கஸ்தூரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, இசை அமைப்பாளர் தீனா மற்றும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலையில் இருந்தே தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்தனர். அவர்களோடு பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தினார்கள்.
- சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் இன்று முதல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பல்பாக்கி சி. கிருஷ்ணன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு!
- நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-
கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு!
ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று பெயர் சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர்.
- தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்
ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
- விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கே.கே.நகர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (29-ந்தேதி, திங்கட்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் வகையில் அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் திருச்சி விமான நிலையத்தில் இயக்குனர் ராஜூ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் திலீப் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் அதிநவீன ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பானது நாளை மறுநாள் (30-ந்தேதி) வரை தொடரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு ராணுவ விமானம் தரையிறங்கி ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
- விஜயகாந்த் நினைவிடத்தில் தே.மு.தி.க. தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- பேரணியில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. அவரது நினைவிடத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜையையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
காலை முதலே தே.மு.தி.க. தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை தே.மு.தி.க.வினர் பேரணியாக சென்றனர். அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியாக வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
- விஜயகாந்த் நினைவிடத்தில் தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
- காலை முதலே தே.மு.தி.க. தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. அவரது நினைவிடத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிலையில், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜையையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
காலை முதலே தே.மு.தி.க. தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வானிலையில் சற்று மாற்றம் அடைகிறது.
- தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இந்த மாதத்துடன் (டிசம்பர்) பருவமழை நிறைவு பெற உள்ளது. இந்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில் வடகிழக்கு பருவ மழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பெய்தது. 'தித்வா' புயல் காரணமாக டெல்டா, வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்தது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையில் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு சராசரி 43.7 செ.மீ. ஆகும். இதில் 42.8 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. இன்னும் ஒரிரு தினங்கள் இருப்பதால் மழைக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வானிலையில் சற்று மாற்றம் அடைகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தென் கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வருகிற 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 2-ந் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






