என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார்.
- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா நேற்று சென்னை வந்தார். தங்கசாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதன் பிறகு அவர் டெல்லி புறப்படும் முன்பு தோழமைக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காகவே வெளியூரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார். நட்டாவை சந்திக்க அவர் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை நட்டா அழைக்கவில்லை.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து பேசினால் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அடுத்தடுத்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை நட்டா சந்திக்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.
- தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஒவ்வொரு பூத்துக்கும் தலா 2 பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்தை பெற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.
குறிப்பாக 20 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்தது. அப்போது மூத்த நிர்வாகிகள் பேசுகையில், "தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் அடிமட்ட பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பூத்துக்கும் தலா 2 பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று பூத் நிர்வாகிகளை சந்தித்து பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் மூலம் கிராம மக்களிடம் பாரதிய ஜனதாவுக்கு முழுமையான ஆதரவு திரட்ட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
- பல்லடத்தில் பிரதமர் மோடி பிரமாண்டமான கூட்டத்தில் பேசுவார் என்றும் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- கூட்டத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை:
பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்லடத்தில் அவர் பிரமாண்டமான கூட்டத்தில் பேசுவார் என்றும் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பல்லடம் பொதுக்கூட்டம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 25-ந்தேதிக்கு பதில் 27-ந்தேதி பிரதமர் மோடி பல்லடம் வருவார் என்று கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பா.ஜ.க. வட்டார தகவல்கள் தெரிவித்தன.
- வழக்கமாக வட மாநில தலைவர்கள் வணக்கம் என்று மட்டுமே தமிழில் சொல்வது உண்டு.
- கவர்னர் தொடக்க உரை சரளமாக தமிழில் அமைந்தது.
தமிழில் பேசி அசத்திய கவர்னர் ஆர்.என்.ரவிகவர்னர் ஆர்.என்.ரவி இன்று சட்டசபையில் தனது உரையை தொடங்கும் முன்பு மிக சரளமாக தமிழில் பேசினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வழக்கமாக வட மாநில தலைவர்கள் வணக்கம் என்று மட்டுமே தமிழில் சொல்வது உண்டு. ஆனால் இன்று கவர்னர் தொடக்க உரை சரளமாக தமிழில் அமைந்தது.
அவர் பேசுகையில், "மதிப்புக்குரிய சட்டமன்ற தலைவர் அவர்களே, மதிப்புக்குரிய முதலமைச்சர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களே, சட்டமன்ற அலுவலர்களே, நண்பர்களே, தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம்" என்று கூறினார்.
- சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த காட்டியது பெருமை அளிக்கிறது.
- காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.
2022-2023-ம் ஆண்டில் 7.2 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொருத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம் பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
முதலமைச்சரின் கனவுத்திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.
வரலாற்றிலேயே முதல்முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.
2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.
மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித்திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.
மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.
3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.
ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் அவை மரபை கடைபிடிப்பார் என நம்புகிறோம்.
* சட்டசபை தலைவர் நடுநிலையாக செயல்படவேண்டும், ஆனால் அவரே ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.
* தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
* கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் கவர்னர் புறக்கணித்துள்ளார்.
* இது கவர்னருக்கும், அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனை.
* அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
* கவர்னர் உரையில் எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய போகிறது என்பதை சுருக்கமாக சொல்வதுதான் மரபு.
* கவர்னர் உரை உப்பு சப்பில்லாத உரை.
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம். திமுக அரசு அவசர அவசரமாக கிளாம்பாக்க்ம பேருந்து நிலையத்தை திறந்ததால் அடிப்படை வசதிகள் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.
- வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள அப்துல்ரசித் வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.
இத்தகவலின் படி சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு தலைமையில் வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.
அங்கிருந்த முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.
- பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
- மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த கிராம கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 1அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே டேஞ்சர் எனவும், நாட்டச் நோட்டிபை போலீஸ் என எழுதப்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.
- 15-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை வழங்குகிறார்.
- 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கியது. கவர்னர் பல்வேறு காரணங்களை கூறி, ஆளுநர் உரையை படிக்க மறுத்து அவரது இருக்கையில் அமர்ந்தார். பின்னர் சபாநாயகர் தமிழில் ஆளுநர் உரையை படித்தார்.
சட்டமன்ற கூட்டம் முடிந்த உடன் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின், வருகிற 15-ந்தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி பதிலுரை வழங்குவார் எனக் குறிப்பிட்டார்.
மேலும், வருகிற 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 22-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
- சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
- தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.
சென்னை:
சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.
* கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று சபாநாயகர் கூறினார்.
* சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
* பாஜக வெளிநடப்பு செய்திருக்கலாம், ஆனால் அவை மாண்புக்கான அமர்ந்திருந்தோம்.
* கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.
* அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார்.
* கோட்சே என்று பேசி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றி உள்ளார்
* தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.
* சபாநாயகர் தேவையில்லாத விஷயங்களை பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெறியேறினார் என்று அவர் கூறினார்.
- வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
- உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்த படியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவின் போது ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 681 காளைகளும், 480 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.
வாடிவாசல் முன்பு காளைகள் மற்றும் வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்காக தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தது. இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டி ருந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் போட்டி தொடங்கியது.
வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் ஆக்ரோசமாக களத்தில் நின்று விளையாடின. வீரர்களும் அதற்கு நிகராக காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்க முயன்றனர்.
ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பல சுற்றுகளாக மாலை வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைகளுக்கும் டாடா ஏசி வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மின்விசிறி, அண்டா, பீரோ, தங்க காசு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.
உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது.
- மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம். 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக,
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து 3 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீடு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேல் முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை மாற்றக்கோரிய ராஜேஸ் தாசின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்காக ஜன.12-ந்தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு உத்தரவிட்டார். மேலும் ஜன.18-ந்தேதி இறுதி விசாரணையை துவங்கி 24-ந்தேதிக்குள் முடிக்க விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.






