என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
- கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு அருகே உள்ள ஈளாடா கிராமத்தில் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 9 முதல் 12 அடி ஆழமும் கொண்ட ஈளாடா தடுப்பணை உள்ளது.
மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பணையை நம்பி, அதன் அருகே உள்ள விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கொடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இயற்கை ஊற்றுகள் காய்ந்து வறண்டு காணப்படுகிறது.
இதனால் ஈளாடா அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், அணையில் தண்ணீர் குறைவதாலும் ஈளாடா, கோத்தகிரி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இப்போதே கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாகக் கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாலும், நீர் உந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களுக்கான மின்கட்டணம் மிக அதிகமாக இருப்பதாலும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
- தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.
விழுப்புரம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.
பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார்.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.
- விழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி நம் பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன் பின்னர் மதியம் 12.30 மணியளவில் கடக லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் நட்டனர்.
அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.
தெடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடிமர மண்டபம் வருகிறார். காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமர மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பேரி தாடனம் நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார்.
அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாக சாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
தொடர்ந்து மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் 1-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும். மாலை கருடவாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்ககுதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி நம் பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
- தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது.
- ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு பிறகும் நீடிக்கிறது. ஆனால் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் மதிய நேரத்தில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 109 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. மேலும் இந்திய அளவில் வெப்பநிலை பதிவில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயில் தாக்கம் மிகவும் அதிகளவில் வாட்டி வதைக்கும் வகையில் இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
வாகன ஓட்டிகளும் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். வெயில் காரணமாக வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும் அணிந்த படியும், குடை பிடித்து கொண்டும் சென்று வருகின்றனர்.

ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சாத்துக்குடி, மொலாம் பழம், தர்பூசணி ஆகிய பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ரோடுகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் ஈரோட்டில் பல பகுதிகளில் கடை மற்றும் வீடுகள் முன்பு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் ஈரோடு மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஈரோட்டில் அதிகபடியான வெயில் வாட்டி வருவதால் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடை வீதி பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் பந்தல்கள் அமைத்துள்ளனர். மேலும் ஈரோடு திருவேங்கடம் வீதியில் தென்னங்கீற்று பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.
இதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மற்றும் பல அரசு அலுவகங்களிலும் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கிறார்கள்.
மேலும் ஈரோட்டில் மூலப்பட்டறை வ.உ.சி.பார்க் ரோடு, கருங்கல்பாளையம், பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் முன்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கடை வைத்து இருப்பவர்கள் தண்ணீர் கேன் வைத்து உள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கு கேன்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறார்கள்.
- சம்பவம் தொடர்பாக கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் அதே புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டு சாணம் கலந்த குடிநீர் வந்ததாக தகவல் பரவியது.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெரிய சாமி, பால்பிரான் சிஸ் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். மேலும், அந்த குடிநீர் தொட்டி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. தொட்டியில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவு வந்த பிறகே என்ன மாதிரியான கழிவு கலக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களுக்கு நேற்று லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், அங்கு வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிலையில், குடிநீர் தொட்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கழுவி சுத்தம் செய்யப்படவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, சங்கம் விடுதி ஊராட்சி செயலாளருக்கு விளக்கம் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
- சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
- நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்- தாம்பரம், சென்னை சென்ட்ரல்- கேரள மாநிலம் கொச்சுவேலி, சென்ட்ரல்-நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை மே 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06012) மே 5-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) மே 6-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.
அதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06043) மே 1-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை (புதன்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06044) மே 2-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை (வியாழக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (06019) மே 5-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06020) மே 6-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (060231) மே 12-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06022) மே 13-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (திங்கட் கிழமை) நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும்.
- மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் இருந்து மே 3-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) கன்னியாகுமரிக்கு 15 நிமிடம் முன்கூட்டியே மதியம் 2.50 மணிக்கு வந்து சேரும்.
அதே போல், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 3-ந்தேதி புறப்பட்டு, அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேரும். அதே தேதியில் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு வந்து சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது.
- புதிதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உப்பளங்கள் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக தொடங்கியது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதனால் தூத்துக்குடியில் உப்பு விலை திடீரென உயர்ந்து உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் புதிதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
உப்பு விலை உயர்ந்து காணப்படுவதால், தூத்துக்குடியில் இருந்து உப்பு இறக்குமதி செய்த கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தற்போது குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளனர். இதனால், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
- மாணவர்கள் அதன் விவரங்களை, www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவேற்றம் செய்து அறியலாம்.
சென்னை:
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு வருகிற மே 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடைபெற்றது. தேர்வுக்கு, 23 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளார்கள். தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வு மையங்கள் தொடர்பாக, மாணவர்களின் இறுதி நேர பதற்றங்களை தவிர்க்கும் வகையில், தேர்வு மையம் அமையும் நகரம் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வுகள் முகமை முன்கூட்டியே வெளியிடும். அந்த வகையில், நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதன் விவரங்களை, www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவேற்றம் செய்து அறியலாம்.
தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. தேர்வு தொடர்பாக சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
- விமானத்தில் ஏற்ற கொண்டு வரப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
- டெல்லியில் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் இந்த பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மீனம்பாக்கம்:
கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொல்கத்தா உள்பட 4 விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்" என இந்தியில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து, டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதோடு, பயணிகள் மற்றும் விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து, பரிசோதிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்போது 5 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, விமானங்களில் பயணிக்க வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சோதனைகள் நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். விமானத்தில் ஏற்ற கொண்டு வரப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.
ஆனால் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எந்தவிதமான வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் டெல்லியில் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் இந்த பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் நடப்பதால், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள், விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச விமான பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவும், விமான நிலையத்துக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விபத்து.
- விபத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை.
- அவர் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்.
பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், #ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.
#TokyoOlympics-ல் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






