என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.
- பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
சென்னை:
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்று இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்முகத்துடன் வரவேற்றார். பிரத மருக்கு சால்வை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் "தடம் பெட்டகத்தை" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசளித்தார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாகும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் இதன் தலைவர் ஆவார். 54.1 கி.மீ மொத்த நீளத்துடன் இரண்டு வழித்தடங்களுடன் கூடிய சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் I-ஐ ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் செயல்படுத்தியுள்ளது.
பொதுப் போக்குவரத் தினை உயர்த்திட வேண்டிய தேவையைக் கண்டறிந்து, தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒப்புதல் அளித்து, 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கவும், இருத ரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கும், ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. ஒன்றிய அரசின் பங்களிப்பு வரப்பெறாத காரணத்தி னால் பணிகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட வேகக் குறைவு, நடப்பு நிதி யாண்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இந்த ஆண்டின் மொத்த திட்டச் செலவினம் ரூ.8000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு நிலைகளில் பணி நிறை வடையும் தேதிகள் ஒரு ஆண்டளவிற்கு தாமத மாகி, இறுதியாக கட்டி முடிக்கும் தேதியை டிசம்பர் 2027-லிருந்து டிசம்பர் 2028 ஆக தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது, மிகுதியான காலம் மற்றும் செலவின அதிகரிப்பை ஏற்படுத்தி விடும்,
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நிதி வழங்கியுள்ளதை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது.
ஆகையால் இந்தப் பொருள் குறித்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன், கட்டம்-I ற்கு வழங்கப்பட்டது போன்றும், பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளவாறும் விரைவில் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சமக்ரசிக்க்ஷா திட்டமானது 2018-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது பள்ளி முன்பருவக்கல்வி முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையில் விரிவான முன்னெடுப்புகளை மேற்கொள்ளத்தக்க வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடானது, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் திட்ட ஏற்பளிப்புக்குழுவால் ஏற்பளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்பளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடானது ஒன்றிய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்திலான பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரசிக்க்ஷா திட்டம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லையெனில் ஒன்றிய அரசானது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முக்கியத்துவத்தை குறைப்பதாகவே அமைந்திடும்.
எனவே, தமிழ்நாட்டின் நியாயமான இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வரையறுக்கப்பட்டுள்ள மும்மொழிக் கோட்பாட்டினை வலியுறுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மும்மொழிக் கோட்பாடு சார்ந்து ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்பு ரீதியான பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உட்பிரிவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படின், தமிழ்நாடு மாநிலமும் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக அமையும்.
எனவே, தமிழ்நாட்டில் கல்வி பயிலும் 43,94,906 மாணவர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது சார்ந்த இறுதி முடிவுகள் எட்டப்படும் வரை காத்திராமல், ஏற்கனவே சமக்ரசிக்க்ஷா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திட்ட பணிகளுக்கான நிதியினை உடன் விடுவித்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு 1076 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையையும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பை தொழிலாக கொண்டுள்ள மிகப்பெரும் கடலோர சமுதாயத்தையும் கொண்டு உள்ளது. சமீபகாலமாக அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் மீன்பிடி கலன்களுடன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட 191 மீன்பிடி படகுகளின் தற்போதைய நிலை இதுவரை அறியப்படாமல் உள்ளதால் அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் அடங்கிய குழு படகுகளை ஆய்வு செய்ய அனுமதியினை பெற்றுத் தருமாறும் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மைகாலத்தில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை நாட்டுடமையாக்கப்படும் கொள்கையால், லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஏழை மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்றங்கள் மிக மிக அதிகப்படியான அபராதத் தொகையினை விதித்து அரசாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக அறியப்படுகிறது. எனவே, 2016-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இக்கூட்டத்தினையும் உடனடியாக கூட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முக்கிய பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 145 மீனவர்களையும், அவர்க ளது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் நட வடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மேற்படி கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிரதமர் அலுவலக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதன் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மறைந்த மூத்த மார்க்்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை 5.35 மணியளவில் விமானத்தில் புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்புகிறார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று தங்குகிறார்.
- தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர். ஸ்ரீராமின் முழுபெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்ற கே.ஆர். ஸ்ரீராம், 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.
- சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது
- சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோர்க்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது.

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.
- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
- பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவரும், தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என முழங்கியதோடு, அவற்றையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு தமிழுக்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சி.பா.ஆதித்தனாரின் அரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.03 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 62.31 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.03 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 694 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 62.31 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- நிர்வாகிகள் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும்.
திருப்பூர்:
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் முக்கிய நிர்வாகிகள் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொது ச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாவட்ட நிர்வாகிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மாநாட்டிற்கு அணிந்து செல்லும் வகையில் வேட்டி, சட்டைகள் தயாரிக்க திருப்பூர், ஈரோடு குமார பாளையம் பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் ஆர்டர்கள் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த பிரபல வேட்டி-சட்டை தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
திருப்பூரில் அனைத்து அரசியல் கட்சியினரும் அணியக்கூடிய வகையில் கட்சி பார்டர்களுடன் கூடிய வேட்டிகள் தயாரித்து கொடுத்து வருகிறோம். தற்போது நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டை யொட்டி திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மூலம் த.வெ.க. பார்டர் போட்ட வேட்டிகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆர்டர்களின்படி வேட்டிகள் தயாரிக்க உள்ளோம்.
மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் வேட்டிகளை தயாரித்து கொடுத்து விடுவோம். வரும் நாட்களில் கூடுதலாக ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதேப்போல் மாநாட்டிற்கான சால்வை, தொப்பி, பேட்ஜ் உள்ளிட்டவையும் திருப்பூர், ஈரோடு குமாரபாளையத்தில் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக திருப்பூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் எந்தெந்த வடிவில் தயாரிக்க வேண்டும் என்பதற்காக அதற்கான மாடல்களை ஜவுளி நிறுவனங்களிடம் த.வெ.க. நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.
அந்த வடிவமைப்பில் வேட்டி, சட்டை, தொப்பிகள், பேட்ஜ்கள் தயாரிக்கும் பணியை ஜவுளி நிறுவனத்தினர் தொடங்கி உள்ளனர்.
- இருவரிடமும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றுஅதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கண்டெய்னரில் 'குவார்ட்ஸ்' பவுடர் பாக்கெட்டுகளுடன் 112 கிலோ சூடோ பெட்ரின் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த போதைப் பொருட்களை சரக்கு கப்பல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்ததை கண்டுபிடித்து அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக துறைமுக ஏஜெண்டுகள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஏஜெண்டுகளின் பெயர் அபுதாகிர், அகமது பாஷா என்பது தெரிய வந்தது. இருவரிடமும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. துறைமுக ஏஜெண்டுகள் இருவர் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்துவதற்காக துறைமுகத்துக்கு போதைப் பொருட்களை அனுப்பி வைத்தவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள அதிகாரிகள் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கண்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் துறைமுக அதிகாரிகள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஆகஸ்டு மாத இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.
- 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தையும் கடந்து வரலாறு காணாத உச்சத்தை அப்போது பதிவு செய்தது.
அதன் பின்னர், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலையும் சரியத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் வந்துவிடும் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், கடந்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் இருந்து மீண்டும் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.
தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்த நிலையில், கடந்த 21-ந் தேதி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார்.
- பணம், ஆவணங்களை நேர்மையுடன் ஒப்படைத்த அன்சாரியை போலீசார் மற்றும் மக்கள் வெகுவாக பாராட்டினர்.
கரூர்:
கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (வயது 66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் அவருடைய பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார். இதனை அவ்வழியாக வந்த கரூரை சேர்ந்த வாலிபர் லியாகத் உசேன் அன்சாரி என்பவர் எடுத்து வந்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து திருவேங்கடத்தை போலீசார் தொடர்பு கொண்டனர். இதையடுத்து அவரது ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்களை லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட பணத்தை அரை மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொண்ட முதியவர் திருவேங்கடம் காவல்துறை மற்றும் பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த லியாகத் உசேன் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் சாலையில் கிடைத்த பணம், ஆவணங்களை நேர்மையுடன் ஒப்படைத்த லியாகத் உசேன் அன்சாரியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- முதல்நிலை போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது.
- குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்தவகையில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பணியிடங்களில் 507 காலிப்பணியிடங்கள் உள்ளன.
அதேபோல், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் ஆகிய குரூப்-2ஏ பணியிடங்களில் ஆயிரத்து 820 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்கான முதல்நிலை போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. தேர்வுக்கான, விடைக்குறிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதேபோல், குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வானது அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
- திடீரென்று மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது.
- மினி பஸ் கவிழ்ந்து பலியான நால்வரில் 2 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மம்சாபுரம் கிராமம். ஆரம்பம், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இருந்தபோதிலும், கல்லூரி படிப்பிற்கு மாணவ, மாணவிகள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகருக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
அதிலும் குறிப்பாக குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மம்சாபுரத்திற்கு இயக்கப்பட்ட போதிலும் ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் இயக்கப்படுவதால் அதனை நம்பியே மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் இருந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மம்சாபுரத்தில் இருந்து இன்று காலை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்தபோது திடீரென்று அந்த மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சல் போட்டார்கள். டிரைவர் பஸ்சை நிறுத்த போராடியும் முடியாமல் போனது. கடைசியில் அந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
விபத்து நடந்ததும், பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர். பஸ் கவிழ்ந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தோர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததோடு, விபத்து பகுதிக்கு திரண்டு வந்தனர்.
உடனடியாக மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்தன. அக்கம்பக்கத்தினர் பஸ்சுக்குள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இருந்தபோதிலும் இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்களான சதீஷ்குமார், வாசுராஜ், ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் நிதிஷ்குமார் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலர் 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து அறிந்த மம்சாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் கதறியவாறு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், மினி பஸ் அதிவேகத்தில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி காலை நேரங்களில் மம்சாபுரம் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
- தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து, வெயில் வாட்டி வதைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரளா, மாஹே, உள் மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






