என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆயுத பூஜை விடுமுறையையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகையை வியாபாரிகளும், தொழிலாளர்களும் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடுவது வழக்கம். வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆயுத பூஜை என்பதால் அரசு விடுமுறையாகும். மறுநாள் சனிக்கிழமை விஜயதசமியும் அதனை தொடர்ந்து 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையும் வருவதால் 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது.
தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து நாளையும் மறுநாள் வியாழக்கிழமையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 2092 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். நாளை (புதன்கிழமை) அவற்றுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் மேற்கொள்வதால் அன்று 2000 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை பயணத்திற்கு 13 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 10-ந் தேதி பயணம் செய்ய மொத்தம் 31 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். இதில் சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
364 அரசு விரைவு பஸ்களுக்கும் 40 பிற போக்குவரத்துக் கழக பஸ்களுக்கும் முன்பதிவு நடக்கிறது. நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 3 மணி நேரத்திற்கு மட்டுமே கட்டணம் செல்லுபடியாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல.
நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளி நாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.
செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.
- மனித சங்கிலி போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கள் முன்னாள் அமைச்சர் கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் இன்று காலை 10.30 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.
சென்னையில் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சிக்குட்பபட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. ராயபுரம் எம்.சி. ரோடு சுழல் மெத்தை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் பங்கேற்று கை கோர்த்து நின்றனர்.
வில்லிவாக்கம், கொளத்தூர் உள்பட 7 இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு பங்கேற்றார். இங்கும் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே திரளான தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பகுதியில் மொத்தம் 14 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
அண்ணாநகர் மண்டல அலுவலகம் அருகில் பகுதி செயலாளர் தசரதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திரண்ட அ.தி.மு.க. வினர் நீண்ட தூரம் மனித சங்கிலியில் கைகோர்த்து நின்றனர்.
சென்னை வால்டாக்ஸ் ரோடு மண்டல அலுவலகம் அருகில் நடைபெற்ற மனித சங்கிலியில் மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக் ள்ளிட்டோரும் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
மதுரவாயலில் பகுதி செயலாளர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத் தில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் பங்கேற்றார். திருமங்கலத்தில் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் நடந்த மனித சங்கிலியில் வெங்கடேஷ் பாபு கலந்து கொண்டார்.
தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 13 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 128-வது வார்டுக் குட்பட்ட விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் விருகை ரவி தொண் டர்களுடன் கலந்து கொண்டார்.
127-வது வார்டுக்கு உட்பட்ட கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலை 129-வது வார்டு அருணாசலம் ரோடு 136-வது வார்டு பிடிராஜன் சாலை, 137-வது வார்டு வெங்கட்ராமன் சாலை, 138-வது வார்டு அண்ணா மெயின் ரோடு, 139 ஜாபர்கான் பேட்டை ஜோன்ஸ் ரோடு, 140-வது வார்டு கோடம்பாக்கம் ரோடு மேட்டுப்பாளையம், 142 அண்ணாசாலை அம்மா பூங்கா அருகில் 168-வது வார்டு ஈக்காடுதாங்கல் அம்பாள் நகர், 169 சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவில் அருகில் 170-வது வார்டு கோட்டூர்புரம், 172-வது வார்டு ரேஸ்கோர்ஸ் ரோடு ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சைதை சுகுமார், ஷேட்அலி, சி.கே.முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை புறநகர் மாவட் டத்தில் சோழிங்க நல்லூர், ஆலந்தூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மாவட்ட தலைமை அலுவலகம் அருகேயும் கந்தன்சாவடியில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் தொகுதி முழுவதும் 30 இடங்களில் ஆலந்தூர் தொகுதிக் குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்க ளில் நடந்தது. ஆலந்தூர் கிழக்கு பகுதியில் பகுதி செயலாளர் பரணி பிரசாத் தலைமையில் லேபர் கிணறு தெரு, நங்கநல்லூர் 4-வது பிரதானசாலை, ஆதம்பாக்கம் சக்தி நகர், நங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர். சாலை துர்கா பவன் அருகிலும், மீனம் பாக்கம் வ.உ.சி. நகர் ஆகிய இடங்களிலும் நடந்தது.
அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்ட செயலாளர்களும் இன்று தங்களது பகுதியில் மனித சங்கிலி போராட் டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள். அனைத்து மாநகராட்சி பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்.
- சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15,000 மலையாளி இன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இனமக்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதி சான்று பெற்றுள்ளனர்.
ஆனால் ஈரோடு மாவ ட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு அவ்வாறு சான்று வழங்க மறுக்கின்றனர். இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு சலுகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் மலை குத்தியாலத்தூர் ஊராட்சி கரளியம், கல் கடம்பூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, இருட்டிபாளையம், கிட்டாம்பாளையம், அத்தியூர் உள்பட 21 கிராமங்களில் பந்தல் அமைத்து கோரிக்கைகள் அடங்கிய பதவிகளை பிடித்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் 21 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
கர்நாடகம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,100-க்கும் ஒரு சவரன் ரூ.56,800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
06-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
05-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
04-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
03-10-2024 ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-10-2024- ஒரு கிராம் ரூ. 103
06-10-2024- ஒரு பவுன் ரூ. 103
05-10-2024- ஒரு பவுன் ரூ. 103
04-10-2024- ஒரு பவுன் ரூ. 103
03-10-2024 ஒரு பவுன் ரூ. 101
- நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
- என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன்.
சென்னை :
நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீமான், இருக்குற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வரும்... திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான். அது ஒரு பெரிய சிக்கல் இல்லை. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறி உள்ளார்.
- பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
- ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் 3 குளங்கள் உள்ளது.
சென்னை:
ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.
மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் கேட்டிருந்தது. இதனால் வரும் 14-ந்தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடக்க உள்ளது.
இந்த நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் 3 குளங்கள் இங்கு இருக்கும் நிலையில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 4 குளங்களை வெட்டும் பணி தொடங்கி உள்ளது.
Dear #Chennaiites,
— Greater Chennai Corporation (@chennaicorp) October 7, 2024
At Madras Race Club in Guindy, three existing ponds currently store rainwater with a total capacity of 30 million liters, which is insufficient. Now, #GCC is creating four new ponds with a capacity of nearly 100 million liters.
(1/2) pic.twitter.com/RZSkwedDpQ
- தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்
2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
- நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
- சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர், நாமக்கல், நாகை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- சாம்சங் தொழிலாளர்கள் 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
- சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போராட்டக்குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது
இந்நிலையில், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உடன்பாட்டால் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் 25 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது
- தங்கலான் படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
- தங்கலான் படத்தில் வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது
இந்நிலையில், தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், புத்த மதத்தை புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால், படம் ஒடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






