என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
    • வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம் சாட்டினார்.

    இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என ஆட்சேபம் தெரிவித்து, தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனும் பி.என்.எஸ்.எஸ். அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    • இருதரப்புக்கும் இடையே மோதலை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
    • உதயகுமாரின் இந்த செயல்பாட்டால் பொது அமைதிக்கும் கட்சியின் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார் அத்துமீறி அவதூறாக பேசி சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தருமபுரி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடந்த 24-ந்தேதியன்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பின் போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையைப் பெற்று ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை நேரிலேயே வந்து முற்றுகையிட்டு அவர் எங்கும் நடமாட முடியாத ஒரு நிகழ்வை தமிழகத்தில் அவர் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்க தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இதில் இருதரப்புக்கும் இடையே மோதலை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.

    உதயகுமாரின் இந்த செயல்பாட்டால் பொது அமைதிக்கும் கட்சியின் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி செயல்பட்டு வரும் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு மனுவில் தெரிவித்தனர்.

    • வனப்பகுதியில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது.
    • மனுவை பெற்றுக்கொண்டு சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தி உறுதி அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சி கோட்டூர் மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையான சாலை வசதி இல்லாமல், அத்தியாவசிய தேவைகளுக்கு கழுதை மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

    மேலும் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை. சாலை வசதி இல்லாததால் மேற்படிப்புக்கு மலை கிராமத்தில் இருந்து அப்பகுதி குழந்தைகள் செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி நின்று விடுகின்றனர்.

    வனப்பகுதியில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை வசதி கேட்டு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து மனு கொடுக்க வந்திருந்தனர்.

    அப்பொழுது போலீசார் 5 பேர் மட்டுமே மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளே செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

    ஆனால் எல்லோரையும் விட வேண்டுன் என மலை கிராம மக்கள் தெரிவித்து, வாக்குவாதம் செய்து, நுழைவாயிலில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து 10 பேர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்டு சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தி உறுதி அளித்தார்.

    கிராம கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மாணவி யோக ஸ்ரீ, பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி அரங்கை திகைக்க வைத்திருக்கிறார்.
    • பள்ளிக் கல்விதுறை மூன்றாண்டுகளாக விதைத்த விதைகள் சிறப்பான பலனை தரத் தொடங்கியிருக்கின்றன.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்காக என்ன செய்யும்?

    கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோக ஸ்ரீ. பால்வார்பட்டி கிராமத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் ஒன்பதாவது படிக்கும் மகள்.

    சிறுவயதிலேயே பாடும் திறமை இருப்பதை அம்மாணவியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியை கண்டறிந்து இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து தன்னுடைய ஆதரவில் ஊக்கப்படுத்தி தனியார் தொலைக்காட்சி 'சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்ல்' மேடை ஏற்றி இருக்கிறார். பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி அரங்கை திகைக்க வைத்திருக்கிறார்.

    அவ்வளவு பெரிய மேடையை எத்துணை இலகுவாக முதிர்ச்சியாக கையாண்டார் யோக ஸ்ரீ.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்விதுறை ஆண்டுதோறும் நடத்தும் கலைப் போட்டிகளில் கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்று அங்கு வந்திருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆச்சரியப்படைத்தி இருக்கிறார் யோக ஸ்ரீ.

    பள்ளிக் கல்விதுறை மூன்றாண்டுகளாக விதைத்த விதைகள் சிறப்பான பலனை தரத் தொடங்கியிருக்கின்றன.

    மணவாடி அரசுப் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்.

    மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவைகள் அரசுப்பள்ளிகள் என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    7-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,

    புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது.
    • நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரல் சிக்கி இருந்த அந்தப்பொருளை அகற்றினர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத பெண் குழந்தைக்கு இருமல், மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 28-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

    4 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது.

    மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 1-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இடது நுரையீரலில் மூச்சு குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளது ஸ்கேன் பரிசோதனை மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

    8 மாதமே ஆன சிறிய குழந்தைக்கு நுரையீரலில் சிக்கியுள்ள இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்றுவதற்கு பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சை செய்வதும், அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது.

    ஆகவே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்தப்பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    அவர்கள் சிறிய அளவிலான பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரல் சிக்கி இருந்த அந்தப்பொருளை அகற்றினர்.

    அகற்றிய பின் பார்த்தபோது அவை குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட் என உறுதி செய்யப்பட்டது. இச்சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ராஜேஷ்குமார், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஸ்ரீனிவாசகுமார், கருப்பசாமி, மயக்க மருந்து நிபுணர்கள் சிவக்குமார், பிரமோத் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சுந்தரேஷ் குமார் கூறுகையில், சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும்போது அவற்றை விழுங்கவோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள், குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருட்களை குழந்தைகளுக்கு விளையாட அனுமதிக்க கூடாது. குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சிறு பொருட்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால் உடனே மருத்துவமனை அணுகி மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உயிருக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கூறினார்.

    • திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சில ஈடுபட்டு வருகின்றனர்.
    • எங்களுக்கான கூட்டணியை சிதைக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை.

    கே.கே.நகர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை குறித்து முன்பு கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பது தெரிவித்துள்ளோம். தற்போது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.

    ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

    இப்போது கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் 7 ஆண்டுகளாக தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். 2 கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு.

    நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கவனம் இருக்கிறது. இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை.

    ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சில ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி.

    எங்களுக்கான கூட்டணியை சிதைக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை.

    2026-ம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.

    புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து ஓராண்டு ஆகிறது. இதில் பங்கேற்க ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள்.

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு முன்பாக விஜய்யை அழைக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    திராவிடத்தைப் பற்றி ஏற்கனவே கருத்து சொல்லி உள்ளேன். பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது. அப்போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதன நம்மை விழுங்கி இருக்கும். இந்தி தமிழை விழுங்கி இருக்கும்.

    திராவிட கருத்தியல் இல்லாமல் இருந்தால் சமஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் பாதுகாப்பு காரணம் திராவிட கருத்தியல் தான். ஆனால் திராவிட எதிர்ப்பை திராவிட அரசியல் எதிர்ப்பாக மாற்றுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்க வேண்டும்.
    • பலர் குடைகளை பிடித்தப்படி போராட்டத்தில் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கலெக்டர் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கியது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் 1-ந் தேதி கலெக்டர் பணியிட மாறுதல் வழங்கினார். அந்த ஆணை அடுத்த ஒருவாரத்தில் ரத்து செய்யப்பட்டது.

    மேலும் அவர்களுக்கான மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. எனவே பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்துக்கே மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    கூடுதல் பொறுப்பு பார்த்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

    இதில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    மேலும் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். அவர்களுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருப்பூரில் வெயிலும், மழையுமாக இருந்தது. எனவே பலர் குடைகளை பிடித்தப்படி போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது.
    • பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 84 அடி கொள்ளவு கொண்ட ராமநதி அணை மற்றும் 85 அடி கொண்ட கடனா அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் ராமநதி அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½அடி உயர்ந்து 59 அடியை எட்டியது. கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அந்த அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை பகுதியில் மழை எதுவும் பதிவாகவில்லை. அந்த அணையில் 48.23 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.

    ஆய்குடியில் பிற்பகலில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. இரவு முழுவதும் தொடர் நீர்வரத்தால் தடை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மழை குறைவால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கழுகுமலை, கடம்பூர், கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணிக்கணக்கில் கனமழை கொட்டியது. விளாத்திகுளத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது.

    அந்த பகுதிகளில் உள்ள குளங்களுக்கும் நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கழுகுமலை, விளாத்திகுளம் மற்றும் கடம்பூரில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.

    திருச்செந்தூர், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றன. திருச்செந்தூரில் 24 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கோவில்பட்டி, எட்டயபுரம், வைப்பாறு, சூரன்குடி, காடல்குடி, வேடநத்தம் பகுதிகளிலும் பெய்த மழையால் பூமி குளர்ச்சியானது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஓட்டப்பிடாரம், மணியாச்சி ஆகிய இடங்களில் லேசான சாரல் அடித்தது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்வதால், நெல், பயிறு வகைகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு 29 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடுமுடியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 28 மில்லிமீட்டரும், நம்பியாறில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. புறநகர் பகுதிகளில் மழை பெரிதாக பெய்யவில்லை. மாநகர் பகுதியில் மட்டும் சில மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை பிசான பருவ நெல் சாகுபடி பணிக்காக பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    அந்த அணை நீர்மட்டம் நேற்று 93.50 அடியாக இருந்த நிலையில் தற்போது 92.80 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1148 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    • வானில் மேகமூட்டத்துடன் குளிர் காற்றும் தொடர்ந்து வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
    • குன்னூர் மேல்பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கிறது.

    நேற்று காலையில் இருந்து மாலை 6 மணிவரை பெரிய அளவில் மழை இல்லை. சாரல் மழை மட்டுமே பெய்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக குன்னூரில் மட்டும் 11 செ.மீ. கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குன்னூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் கரைபுரண்டோடியது. மேலும் வானில் மேகமூட்டத்துடன் குளிர் காற்றும் தொடர்ந்து வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    இதற்கிடையே நேற்று இரவு 10 மணிமுதல் இன்று காலைவரை குன்னூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு ஒட்டுமொத்த பகுதிகளும் இருளில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    குன்னூர் அருகே உள்ள சின்னாளக்கொம்பை, குரங்குமேடு ஆகிய பகுதியிலுள்ள வீடுகள் கனமழையால் சேதம் அடைந்தன. மேலும் மழைவெள்ளமும் வீட்டுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.

    இதேபோல மேல் பாரதிநகர், கெரடாலீஸ், மகாலிங்க காலனி, காந்திபுரம், சித்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் பெரும்பாலான பகுதிகளில் தடுப்புச்சுவர் இடிந்ததால் அங்குள்ள குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு குடியிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி ராட்சத தடுப்புசுவர் திடீரென சரிந்து விழுந்ததில், அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்வதால் ஏற்படும் பாதிப்புகளை வருவாய், நெடுஞ்சாலை மற்றும் போலீசார் அகற்றி வருகின்றனர்.மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 9 பேர் வெஸ்லி சர்ச்சில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    குன்னூர் மேல்பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், குன்னூர் தாலுகாவில் பொதுமக்களுக்காக 150 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாகவும் தாசில்தார் கனிசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    குன்னூர் பகுதியில் தொடர்ந்து மேகமூடத்துடன் சாரல்மழை நீடித்து வருவதால் வாகனஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென போலீசாரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):- கேத்தி-21 மி.மீ., பரளியார்-30 மி.மீ., குன்னூர் ரூரல்-45 மி.மீ., எடப்பள்ளி-55 மி.மீ, பில்லிமலை-4.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.
    • கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கோவை:

    தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து காரில் விளாங்குறிச்சிக்கு சென்றார்.

    அங்குள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில், ரூ.114.16 கோடியில் 8 தளங்களுடன் புதிதாக தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

     

    இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்திற்கு சென்று, அங்கு கள ஆய்வின் ஒரு பகுதியாக, வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நிலவிடுப்பு உத்தரவு ஆணையை வழங்குகிறார்.

     

    • 7-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
    • இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நாளை மறுநாள் (7-ந்தேதி) புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே வருகிற 7-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது புயல் சின்னமாக வலுவடைந்து தமிழக கரையை நெருங்கலாம்.

    தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பில்லூர் அணை பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதற்கு

    அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 11 செ.மீ. மழையும், பல இடங்களில் 10 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும். வருகிற 8-ந்தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யலாம்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் கனமழை பெய்யலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×