என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆய்வினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
- மாநகராட்சி சார்பில் சாலை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுடன் இணைந்து மக்களின் கோரிக்கைகளை அறிந்து, மக்களுடன் பயணிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்றைக்கு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 44 மாமன்ற உறுப்பினர் வார்டுகளிலும், 83 வட்ட வாரியான வார்டுகளிலும் ஆய்வினை தொடங்கி உள்ளோம். இந்த ஆய்வினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ஆய்வின்போது அப்பகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாநகராட்சி துறை சார்ந்த செயலாளர்கள், மெட்ரோ துறை சார்ந்த அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உடன் வருகிறார்கள். ஒவ்வொரு தெரு வாரியாக, வீடு வாரியாக இந்த ஆய்வினை மேற்கொண்டு உள்ளோம்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கைகளை கண்டறிந்து, அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் காணப்படும் சிறுசிறு குறைகளை உடனே தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.

வருகின்ற வழியில் அங்கன்வாடியை பார்த்தோம். அங்கு என்னென்ன தேவைகள், குறைபாடுகள் என்பதை கேட்டு கண்டறிந்தோம். அந்த குறைபாடுகள் வரும் நாட்களில் தீர்க்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சிறுசிறு குறைகளை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டு, கண்டறிந்து அந்த குறைகளை அந்த துறையினருடன் இணைந்து குறைகளை தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.

2022-ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்தப்பட்டது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய மாநிலத்தில் வரி வசூலிப்பது குறைவாகவே உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரசு சார்பில் அதிகமாக உள்ளது.
மாநகராட்சி சார்பில் சாலை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழை காரணமாக சில பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறக்கூடிய சூழல் உள்ளது.
இப்போது வரை 5000 பகுதிகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைக்க முடியாத பகுதிகளில் புதிதாகவே சாலைகள் போடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது தான் மழைக்காலம் முடிந்துள்ளது. இந்த மாதம் முதல் தொடர்ந்து சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.
- டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
- தினமும் காலையில் 100 பேர் பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் வழங்கும் டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
தினமும் காலையில் 100 பேர் பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பை ரேசன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து ரேசன் கடைகளுக்கும் பரிசுத் தொகுப்புகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
பரிசுத் தொகுப்பு வினியோக அட்டவணை விவரத்தை காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து ரேசன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இதில் எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனையானது.
- கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,880-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,180-க்கும் விற்பனையாகிறது.

கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 99 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
31-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880
30-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
28-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-01-2025- ஒரு கிராம் ரூ. 98
31-12-2024- ஒரு கிராம் ரூ. 98
30-12-2024- ஒரு கிராம் ரூ. 100
29-12-2024- ஒரு கிராம் ரூ. 100
28-12-2024- ஒரு கிராம் ரூ. 100
- சௌமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்தனர்.
- பா.ம.க.வினர் போராட வந்தால் உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பா.ம.க. சார்பாக சவுமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. அறிவித்துள்ள நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ம.க.வினர் போராட வந்தால் உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- ‘ஸ்கரப் டைபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும்.
- ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
சென்னை:
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'ஸ்கரப் டைபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு 'ஸ்கரப் டைபஸ்' நோய் ஏற்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் 'ஸ்கரப் டைபஸ்' நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது.
விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறிய முடியும். 'ஸ்கரப் டைபஸ்' காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் ஆகிய நோய் எதிர்ப்பு மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

அதன் பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, இதுகுறித்து பொதுமக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் சென்னை திரும்ப தொடங்கினர்.
- 3 மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.
பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் சென்னை திரும்ப தொடங்கினர். இதேபோல பல்வேறு இடங்களுக்கு புத்தாண்டை கொண்டாடச் சென்றவர்களும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
இதனிடையே ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆம்புலன்ஸ் வேன் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
- படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வருசை கனி (வயது 65). உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நேற்று உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு சிசிக்சைக்காக அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி தனியார் ஆம்புலன்ஸ் வேன் மூலம் வருசை கனியின் மகள் அனீஸ் பாத்திமா (40) மற்றும் அவரது மருமகன் (இரண்டாவது மகளின் கணவர்) ஜகுபர் சாதிக் (47), உறவினர்கள் ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40), ஆயிஷா பேகம் (35) ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அந்த ஆம்புலன்ஸ் வேன் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் அருகே விறகு ஏற்றி வந்த லாரி ஒன்று டீசல் நிரப்பி விட்டு ராமநாதபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியது. இதில் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் வேன் மோதியது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வந்த நோயாளி வருசை கனி, அவரது மகள் அனீஸ் பாத்திமா, ஜகுபர் சாதிக் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் மருத்துவமனை 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆம்புலன்ஸ் அதிவேகமாக லாரியின் பின் பகுதியில் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்த ஜகுபர் சாதிக் வாகனத்தில் சிக்கிக்கொண்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி வாகனத்தில் இருந்து மீட்டனர். மேலும் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த திடீர் விபத்து ஏற்பட்டதால் ஆம்புலன்சுக்கு பின்னால் வந்த ஆம்னி சொகுசு பஸ் மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.
இதில் சொகுசு காரில் வந்த இருவர் லேசான காயத்துடன் தப்பினர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.
ராமநாதபுரம் அருகே சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலியானது மரைக்காயர் பட்டினம் கடற்கரை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது.
யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழக சுகாதாரத்துறை இர்பானுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பினாலும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
ஆளும் திமுகவுடன் இர்பான் நெருக்கமாக உள்ளதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்து இர்பான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது மட்டுமே, அதற்காக என்னை எப்படி அவர்கள் ஆதரிப்பார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், இந்த சம்பவங்களை பொருத்தவரையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் செயல்படுகிறது. தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
- புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று இரவு மரியாதை செலுத்தினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்பட பலர் உள்ளனர்.

முன்னதாக ஆங்கில புத்தாண்டு பிறப்பை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் பூங்காக்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகஙகள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் அதிகளவு மக்கள் சுற்றி பார்த்தனர். புத்தாண்டு விடுமுறை தினமான நேற்று ஒரே நாளில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
- ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
- காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
சென்னை:
ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.
அதன்படி ஜனவரி 2ம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்களுடன் பல விதமான மலர்கள் வைக்கப்படும். இதை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்ற போது மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு காரணமாகவே, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை இந்த ஆண்டும் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன், மலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல உருவங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன. 2022 முதல் சென்னையில் நடக்கும் மலர்க் கண்காட்சிக்காக ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருமணத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடி சான்றிதழ் வழங்கப்படும்.
- இந்த பதிவுகள் மூலம் மோசடி திருமணங்கள் முற்றிலும் தடுக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
பின்னர் 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணங்களை பதிவு செய்யலாம்.
இந்த திருத்தம் வந்தபிறகு கூட தமிழகத்தில் சொற்ப அளவிலான திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. வீடுகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் நடக்கும் திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதற்கான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்யலாம். ஆனால் பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். மற்றவர்கள் பதிவு செய்வதில்லை.
இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பது தெரியவந்தது. குறிப்பாக அரசு திருமண பதிவுக்கு கட்டணமாக ரூ.100-ம் மற்றும் கம்ப்யூட்டர் கட்டணமாக ரூ.100-ம் என மொத்தமே ரூ.200 தான் செலுத்த வேண்டும்.
ஆனால் பொதுமக்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது. அதன்படி தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக வரத்தேவையில்லை. அவர்கள் பத்திர எழுத்தர்கள் மூலமாக அல்லாமல் தாங்களே நேரடியாக வீட்டில் இருந்து பதிவு செய்யலாம். கட்டணத்தையும் அதில் செலுத்தி விடலாம்.
திருமணத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடி சான்றிதழ் வழங்கப்படும். இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும்.
இந்த ஆன்லைன் திருமணப்பதிவு மூலம் தமிழக அரசு, பொதுமக்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்று எண்ணுகிறது. அதாவது இந்த பதிவுகள் மூலம் மோசடி திருமணங்கள் முற்றிலும் தடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைப்படியும் முறையாக திருமணங்கள் பதிவு செய்யப்படும் என்று நினைக்கிறது.
தற்போது பத்திரப் பதிவுத்துறையில் ஸ்டார்-2 மென்பொருள் மூலம் பதிவு நடக்கிறது. எனவே அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்டார்-3 நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த மென்பொருளில் தான் திருமண பதிவுகளை பொதுமக்களே மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






