என் மலர்
புதுச்சேரி
- உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.
- தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது55) வக்கீல். இவரது தாய் குப்புலட்சுமி. இவருக்கு சொந்தமான 22 ஆயிரம் சதுர அடி நிலம் புதுவையில் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்ரை சாலையில் உள்ளது.
இந்த நிலத்தை, உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.
இதுகுறித்து குப்புலட்சுமி நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். நில அபகரிப்பு பிரிவு தலைவரான தாசில்தார் ராஜேஷ் கண்ணன், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டார். அதில், குப்புலட்சுமியின் நிலத்தை, குணாதிலீபன் ஆக்கிரமித்திருப்பதை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன்பேரில் சப்-கலெக்டர் கந்தசாமி , நிலத்தை 15 நாளில் உரியவரிடம் ஒப்படைக்குமாறு குணாதிலீபனுக்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அளித்தார்.
ஆனால் நிலத்தை ஒப்படைக்காததால், தாசில் தார் ராஜேஷ்கண்ணன் போலீஸ் பாதுகாப்புடன், குணாதிலீபன் அமைத்திருந்த இரும்பு வேலியை அகற்றி, நிலத்தை மீட்டு குப்புலட்சுமியிடம் ஒப்படைத்தார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.
தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
- இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.
- கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாகதகவல் வந்தது.
- , ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், கோட்டுச்சேரி போலீசார், குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் அல்லிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழரசன் (வயது 63).தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார் தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் வந்தது,
- தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலம்பாள் நகரைச்சேர்ந்தவர் தமிழரசன் (வயது 63). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். தற்போது உடல்நிலை சரியிலாத காரணத்தால், வீட்டில் இருந்து வருகிறார். அனிதா அங்கன்வாடி உதவியா ளராக பணி செய்து வருகிறார். தமிழரசனுக்கு குடிபழக்கம் உள்ளது.
இந்நிலையில், அனிதா கடைக்கு சென்றபோது, உறவினர் ஒருவர், அனிதாவிற்கு போன் செய்து, தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறினார்.விரைந்து சென்ற அனிதா, உறவினர்கள் உதவியுடன், தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, அனிதா கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர்.
- சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதமாக, வழக்கத்தைவிட கூடுதலாக கஞ்சா விற்பனை நடந்தவண்ணம் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு வந்தனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, சிறு, சிறு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்துவந்தனர்.
ஆனால், இவர்களுக்கு மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர். இந்நிலையில், காரைக்காலை அடுத்த நிரவி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற விஷ்ணு பிரியனை கடந்த வாரம் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவரது நண்பர் ரஜினி சக்தியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த கோழி என்ற ரஞ்சித்(வயது29) , காரைக்கால் லத்தீப் நகரை சேர்ந்த மொஹம்மத் அபிரிடியுடன்(23) இணைந்து, சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால், இருவரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சென்றுவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில், தரங்கம்பாடி சென்று, அங்கு பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிமிடருந்து ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டு செங்கதிர்செல்வனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பூக்கடை சண்முகத்தை கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாய்பேட்டை 2-வது வன்னியர் தெருவை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் (வயது39). இவரது உறவினரான சம்பத் என்பவர் பா.ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இவரது தந்தை சபாபதி முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஆவார்.
சம்பவத்தன்று சபாபதி வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது தி.மு.க. நிர்வாகியான வில்லியனூரை சேர்ந்த பூக்கடை சண்முகம் சபாபதிக்கு சால்வை அணிவித்ததாக கூறபடுகிறது.
மேலும் சால்வை போடும் போட்டாவை சமூக வலைதளங்களிலும் பூக்கடை சண்முகம் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இதனை கண்ட சம்பத் தனது தந்தையை பூக்கடை சண்முகம் அவமானப்படுத்தி விட்டதாக கருதினார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத் இதனை தட்டிக்கேட்க செங்கதிர்செல்வனும் பூக்கடை சண்முகம் வீட்டுக்கு சென்றார்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் பூக்கடை சண்முகத்துக்கும், சம்பத்துக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில் பூக்கடை சண்முகம் தனது வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டு செங்கதிர்செல்வனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போய் செங்கதிர்செல்வன் கீழே விழுந்தார். அப்போது செங்கதிர் செல்வனையும், சம்பத்தையும் கொலை செய்து விடுவதாக பூக்கடை சண்முகம் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து செங்கதிர் செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பூக்கடை சண்முகத்தை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
- மாசிமக திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
- நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி விழாக்களில் தெரிவித்து வருகிறார்.
சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மாநில அந்தஸ்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தபோது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என அவர் அங்கலாய்த்தார்.
வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் அங்காடி வளாகத்தில் ஸ்மார் சிட்டி நகர கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.
அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த விபரங்களை ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள், சி.சி.டி.வி., நவீன சிக்னல் அனைத்தும் ஸ்மார்ட் பணிகளாக இருக்கப்போவதாக பெருமையுடன் கூறினர்.
ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
அதிகாரிகளை கடிந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:
நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மேலே சிலாப் போட வேண்டும் என 1½ ஆண்டாக கூறுகிறேன்.
அதை செய்ய முன்வரவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள்? அரசைத்தான் குறை கூறுவார்கள்.
அப்புறம் என்ன ஸ்மார்ட் பணி? அப்படி, இப்படியென சாலை அமைத்துள்ளோம். அரசு நினைக்கிற மாதிரி எதுவும் வரலை, வரும் ஆண்டிலாவது ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன். அதற்குள் எந்தெந்த செயலர் மாறுகிறார்களோ? வரும் செயலர்கள் எதை பார்த்து பயப்படுவார்களோ? என தெரியாது.
பொதுப்பணித்துறை உதவாக்கரையாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் பஸ்ஸ்டாண்டு அமைக்க எதுவும் செய்யவில்லை. நிலத்தை சமப்படுத்தி மண் அடித்தால் போதும். பஸ்கள் நிற்கும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இங்கு 4 பில்லர் அமைத்து ஷெட் போட்டு பஸ்ஸ்டாண்டு ஆரம்பிக்க பொதுப்பணித்துறைக்கு தெரியலை. இதுக்கு டெல்லி போய் என்.ஓ.சி., அது, இதுன்னு சொல்லி விடிய, விடிய டிஸ்கஷன் செய்யுறாங்க.
நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது. அவர்கள் திட்டமதிப்பீட்டிற்கும், நம் திட்ட மதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.
இதை சரிசெய்யும் வரை நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். சாதாரண வேலையை செய்ய முடியாம ஜவ்வா இழுக்கின்றனர். எரிச்சலாக உள்ளது. ஒரு முடிவு கூட பண்ண முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் லபோ திபோன்னு பேச போறாங்க.
இவ்வாறு ரங்கசாமி கூறினார்.
இதை அங்கிருந்த அதிகாரிகள் எந்தவித கருத்தையும் கூறாமல் கப்சிப் என அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
- தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம்சதீஷ்(வயது28) தேடி வந்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது. இது குறித்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்யும்படி, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காரைக்காலில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகள், சில்லறை கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்தாலும், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்யும் நபர்களை பிடிக்கவில்லை.
இந்நிலையில், காரைக்காலில் உள்ள பல சில்லறை நபர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபராக, நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது28) என்பவரை காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சதீஷ்க்கு, அவரது சித்தப்பா சுரேஷ்(48) என்பவர் கஞ்சா வழங்கிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரைக்கால் சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார், கம்பம் விரைந்து சென்று, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 1300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். இருவரும் தமிழகம் மற்றும் காரைக்காலைச்சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் பிப் 28-ந் தேதி ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேதராப்பட்டு:
ஆரோவில் உதய தினத்தையொட்டி நடந்த போன் பயர் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு கூட்டு தியானம் செய்தனர்.
புதுவை அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மீரா அல்பாசா தலைமையில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் பிப் 28-ந் தேதி ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் இன்று ஆரோவில் 55-ம் ஆண்டு உதய தினத்தையொட்டி அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.
இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
- கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது.
புதுச்சேரி:
சென்னை, எண்ணூர் துறைமுகத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவது மற்றும் டெலிவரி செய்வதில், இடப்பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது.
இதை சரி செய்யும் விதமாக அங்கிருந்து, 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த பணிக்காக குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின், 106 கண்டெய்னர்களை, ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதுவைக்கு கடந்த 11-ம் தேதி வந்தது.
கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல், சென்னையிலிருந்து கண்டெய்னர்களை ஏற்றி வர, இன்று சென்னைக்கு செல்கிறது.
இந்த கப்பல் வாரத்தில் 2 நாட்கள் சென்னையில் இருந்து கண்டெய்னர்களை கொண்டு வந்து டெலிவரி செய்வது மற்றும் புதுவையில் இருந்து அவற்றை சென்னைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளது.
அதனையொட்டி, கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது. இன்று முதல் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது.
- நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது.
- சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச நகருக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்கா கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஜூலியன் என்பவர் புதுவை கடற்கரை சாலையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவரது கையில் வைத்திருந்த பேனரில், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களிடம் 10 நிமிடம் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற செய்து வேலை வழங்கி உணவு அளியுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு புறத்தில் நாம் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 100 பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது. சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுதொடர்பாக கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக நூதன பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவரை பொதுமக்கள் பாராட்டினர்.






