என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.
    • சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து, நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு கவனம் செலுத்தும்.

    புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.

    புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சிறுதானிய உணவும் வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். படிக்கும் மாணவர்களுக்கு அது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பு மாணவர்களின் சோர்வை போக்கவே சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    • அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.
    • பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள் ளாறை அடுத்த சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் அங்காளம்மை (வயது 65). இவர் சில ஆடுகளை மேய்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருத்துறை பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு, தனது 5 சவரன் தங்க நகைகளோடு சென்று விட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்து, தங்க நகைகளை வழக்கமாக் வைக்கும் வீட்டு அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.

    தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம் போல், வீட்டை பூட்டி, சாவியை, வீட்டின் மின்சார மீட்டர் பாக்ஸ் மீது வைத்து விட்டு ஆடுகளை மேய்க்க சென்று விட்டார். அங்காளம்மை வீட்டு சாவியை மீட்டர் பாக்ஸ் மீது வைப்பது, கிராம மக்கள் சிலருக்கு தெரியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வரும் அங்காளம்மை, நகை உள்ள அறை பக்கம் செல்ல வில்லை. நேற்று முன்தினம் அறைக்கு சென்று பார்த்த போதும் பீரோ சாவி, பீரோவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, யாரும் தெரிய வில்லை என கூறியுள்ளனர். இதை அடுத்த, அங்கா ளம்மை திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு கதவு மற்றும் பீரோவை திறந்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு அருகே நல்லெழுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி (வயது 57). இவரது மனைவி லதா (44). வெங்கட்ரமணி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை வீட்டிலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநள்ளாறு அடுத்த செல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வெங்கட்ரமணி படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விபத்து குறித்து திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து போலீஸ் நிலையம் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளது. தகவல் தெரிவித்து அரை மணி நேரம் கழித்து போலீசாரும், 108 ஆம்புலன்சும் வந்ததால் விபத்தில் உயிரிழந்த லதா, காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    மேலும் காலதாமதமாக போலீசாரும், ஆம்புலன்சும் வந்தனர். ஆனால் ஆம்புலன்சில் உதவி செவிலியர் இல்லை. டிரைவர் மட்டுமே ஆம்புலன்சில் வந்து உயிருக்கு போராடிய வரை முதல் உதவி எதுவும் செய்யமுடியாமல் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி பெண் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
    • மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மீன்பிடி துறை முகத்தின் முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் எம்.பி.சி -யில் இருந்து இ.பி.சி -க்கு மாற்றியதை மீண்டும் எம்.பி.சி -க்கு மாற்ற வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்கவேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்களும் வருகின்ற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட் டது.

    இது தொடர்பாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் (வயது 53), அப்போதைய செட்டில் மெண்ட் அதிகாரியாக இருந்த மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 30-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் பதுங்கி இருந்த மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜியை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக இருந்த ரமேசை தேடி வந்தனர். இதற்கிடையே ரமேஷ் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
    • சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் மாதவன், தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

    திரைத்துறையில் மாதவனுக்கு இருக்கும் பரந்துபட்ட அனுபவம் தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வளமை சேர்த்து ஆராக்கியமான வளர்ச்சியை கொண்டு வரும் என்றும் இந்த நிறுவனத்தை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன்.

    மாதவன் இயக்கி நடித்த "ராக்கெட்ரி-த நம்பி எஃபெக்ட்" திரைப்படம் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

    • கணவர் மீது மனைவி போலீசில் புகார்
    • மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் காமன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பூம்பொழில் (வயது 37). இவருக்கும், சீர்காழி தென்பாதியைச்சேர்ந்த சிவா (40) என்பவருக்கும், கடந்த 2011-ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு நித்திக் சூரியா(12), பிரணவ் சூரியா(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதனால், பூம்பொழில் தனது தந்தை ஊமைத்துரை, தாய் அமுதா ஆகியோருடன் தனியே வசித்து வருகிறார். கணவர் சிவா, திரு.பட்டினம் வரதராஜப்பெருமாள் கோவில் தெருவில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், பூம்பொழிலுக்கு கடந்த 29-ந் தேதி பிறந்தநாள் வந்ததால், 2 மகன்களையும் தனது வீட்டில் கொண்டு வந்து விடும்படி, கணவர் சிவாவிடம் பூம்பொழில் கேட்டுள்ளார்.

    அதன்படி, மதியம் பள்ளி விட்டதும், இளைய மகன் பிரணவ் சூரியாவை சிவா பூம்பொழில் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார். மாலை மூத்த மகனுடன் சென்ற சிவா, இளைய மகனை அனுப்பும்படி கூறியுள்ளார். அப்போது மழை பெய்ததாலும், இளைய மகன் தன்னை விட்டு செல்ல மறுத்ததாலும், மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.இதனால் கோபம் அடைந்த சிவா, வீட்டுக்குள் நுழைந்து, பூம்பொழிலை தகாதவார்த்தைகளால் திட்டி, அடித்து கீழே தள்ளியுள்ளார். தடுக்க வந்த மாமனார், மாமியாரையும் சிவா தாக்கி விட்டு, 2 மகன்களுடன் தனது வீட்டுக்கு சென்று விட்டார். 

    இதில் காயம் அடைந்த பூம்பொழில் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் திரு.பட்டினம் அரசு ஆரம் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார், சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர்.

     புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நிலைய டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். செவிலிய அதிகாரி ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். சித்த மருத்துவர் மலர்விழி, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் ஞான பிரகாசி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னில வகித்தனர். தொடர்ந்து, மருத்துவ அதிகாரி அரவிந்த் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர் பேரணியில் கலந்து கொண்ட அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கண்தானத்தை ஊக்குவிக்கும் விதமாக பார்வை இழந்தோர் பார்த்து மகிழ கண்களை தானம் செய்யுங்கள் என்று தங்கள் கண்களை கருப்பு ரிப்பன்னால் கட்டிக்கொண்டு பார்வையற்றவர்கள் நடப்பது போல் நடந்து விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி, விவேதா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியில் கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.. முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    • கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சேதம் அடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேற்கண்ட சாலையை சரிசெய்ய வலியுறுத்தி, கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காரைக்கால்- கும்பகோணம் சாலையில் முன் அறிவிப்பு இன்றி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபரம் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து கூறுவதாக உறுதியளித்தும் சாலை மறியலை தொடர்ந்ததால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது குறித்து, அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவன் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடை யூறாக நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, செல்லூர் தமிழ்மணி (வயது20), சுபாஷ் (20), பாலசந்தர் (53), ஜான்மதியழகன் (28), யோகேஷ் (21), நிரஞ்சன் (19), மணிகண்டன் (20), வீ.மணிகண்டன் (20) சந்துரு (20), மனோகர் (20), ஐஸ்வரியா (40), சசி (41), ஜோதி (43), மர்லீஸ் (41), சுதா (41), வனிதா (41) உள்ளிட்ட 10 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 16 பேர் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார்.
    • புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லை பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கடந்த ஆண்டு ஜனவரி 30-ந் தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த கடலூர் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் சிலம்பரசன் (வயது 25) மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார்.

    பின்னர் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை ஈவு இரக்கமின்றி அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர், மூதாட்டி காதில் கிடந்த தங்க கம்மலையும் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. சிலம்பரசன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    மேலும் தங்க நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். 

    • கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்களாக மதுபார், ஓட்டல்களில் வாரி இறைத்து கணபதி செலவு செய்துள்ளார்.
    • பணத்தை பறிகொடுத்த சங்கருக்கு பெற்றோரின் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு செட்டில்மென்டாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டையில் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கருமாரியம்மன் கோவில் வீதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவரின் அருகில் கைப்பை கிடந்தது. அதை சோதித்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அந்த நபரை எழுப்பி விசாரித்தபோது, உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பெயிண்டர் கணபதி (வயது 32) என்பதும், பணத்தை பற்றி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாகவும் பதில் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டில் சங்கர்(34) என்பவர் வசித்து வருகிறார். எல்.ஐ.சி. ஏஜெண்டான அவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டு கதவை இரும்பு ராடால் உடைத்து ரூ.10 லட்சத்தை கணபதி கொள்ளையடித்துள்ளார். அந்த பணத்தைத்தான் கணபதி செலவு செய்து வந்துள்ளார்.

    கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்களாக மதுபார், ஓட்டல்களில் வாரி இறைத்து கணபதி செலவு செய்துள்ளார். மது பார்களுக்கு பணப்பையுடன் சென்ற அவர் தனக்கு பிறந்தநாள் எனக்கூறி, எல்லோருக்கும் பணத்தை சினிமாவில் வழங்குவது போல கட்டுக்கட்டாக வாரி வழங்கியுள்ளார். ஓட்டல்களுக்கு சென்று விதவிதமாக சாப்பிட்டுள்ளார்.

    2 நாட்களில் மட்டும் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்தை தண்ணீராக செலவு செய்துள்ளார் என தெரியவந்தது.

    பணத்தை பறிகொடுத்த சங்கருக்கு பெற்றோரின் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு செட்டில்மென்டாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தைத்தான் கணபதி திருடியுள்ளார். இதில் ரூ.4 லட்சத்து 71ஆயிரம் செலவு செய்தது போக எஞ்சிய ரூ.5. லட்சத்து 29 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். சங்கர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கணபதியை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
    • சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுரடி நிலம், ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. கோவில் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி புலனாய்வு குழு அமைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து 2 பிரிவாக நிலங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த அப்போதைய தாசில்தார் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதன்பின் 2 அதிகாரிகளும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். இருவரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை புதுவைக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமறைவாக உள்ள மற்றொரு அதிகாரி ரமேசை தேடி வருகின்றனர். தற்போது பாலாஜி மீன்வளத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். நில மோசடி வழக்கில் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×