search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் அதிகாரி கைது
    X

    புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் அதிகாரி கைது

    • போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
    • சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுரடி நிலம், ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. கோவில் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி புலனாய்வு குழு அமைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து 2 பிரிவாக நிலங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த அப்போதைய தாசில்தார் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதன்பின் 2 அதிகாரிகளும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். இருவரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை புதுவைக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமறைவாக உள்ள மற்றொரு அதிகாரி ரமேசை தேடி வருகின்றனர். தற்போது பாலாஜி மீன்வளத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். நில மோசடி வழக்கில் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×