என் மலர்
ஒடிசா
- அக்னி 5 ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்கும் திறன் படைத்தது.
- அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.
புவனேஸ்வர்:
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (டி.ஆர்.டி ஓ.) சார்பில் அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளை கொண்டது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.
அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை வினாடிக்கு 29,000 கி.மீ. வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்நிலையில், ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை அனைத்து வகையிலும் வெற்றிகரமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அளவீடுகள் சிறப்பாக இருந்தன. ராஜதந்திர படைத்தலைமை மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ஒடிசாவில் SIR நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், பீகாரை தொடர்ந்து ஒடிசாவில் SIR (special intensive revision) நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் 24 வருடங்களுக்கு பிறகு சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
- ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை ஓடிசா சுரங்கத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.
- இந்தியா கடந்த ஆண்டில் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.
ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் தியோகர், சுந்தர்கர், நபரக்பூர், கியோன்ஜர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் தங்க கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மயூர்பன்ச் மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஒடிசா தங்க சுரங்கமாக மாற உள்ளது. இங்கு 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை ஒடிசா சுரங்கத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதமே சட்டசபையில் அறிவித்தார். இதனால் இங்கு தங்க சுரங்கம் தோண்டுவதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.
இந்தியா கடந்த ஆண்டில் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. நாட்டின் உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்கள் என்ற அளவிலேயே உள்ளது. ஒடிசாவில் தங்கம் எடுக்கப்பட்டால் இந்தியாவில் உள்நாட்டு தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், இறக்குமதியும் ஓரளவு குறையும்.
முதல் கட்டமாக ஒடிசாவின் தியோகர் பகுதியில் தங்க சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான பணிகளை ஒடிசா அரசு, ஒடிசாசுரங்க கார்பரேஷன், இந்திய தொல்லியல் துறை ஆகியவை விரைவுப்படுத்தி உள்ளன. இதன்மூலம் ஒடிசாவில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது
- அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
புவனேஸ்வர்:
பிஜூ ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முன்னாள் முதல் மந்திரியுமான இருந்தவர் நவீன் பட்நாயக் (78).
இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம்தான் மும்பையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
- இரவுப் பணிகளில் பெண்கள் பணிபுரிய அனுமதித்து விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
- இரவுப் பணிகளில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும்.
புவனேஸ்வரம்:
ஒடிசா மாநில அரசு அந்த மாநில தொழிலாளர் மற்றும் பணியாளர் மாநில காப்பீட்டுத் துறை, தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் இரவுப் பணிகளில் பெண்கள் பணிபுரிய அனுமதித்து விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
அதில் இரவுப் பணிகளில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும், அவர்களை அழைத்துச் சென்று இறக்கிவிட ஜிபிஎஸ்-கண்காணிப்பு அமைப்புடன் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.
- சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் கோரிக்கை
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் என்று ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " பலங்கா பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவக் குழுவின் 24 மணி நேர முயற்சிக்கு பின்பும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தள தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக், சிறுமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை 7 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஒடிசாவில் கடந்த மாதம் கல்லூரியில் ஒரு இளம் பெண் (பேராசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .
- பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
- பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
புவனேஷ்வர்:
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைககளைப் பரிசோதனை செய்யும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் ஏவுகணை இன்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
- வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
- இந்த சோதனையில் தங்கக்காசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் ஜஜ்புர் மாவட்டத்தில் துணை வனக் காப்பாளராக இருக்கும் ராமச்சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அவருக்குச் சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்தச் சோதனையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடக்கிறது.
மேலும் 4 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் கொண்ட 16 தங்கக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது ரெய்டு இதுவாகும்.
- கடத்திச் சென்று, ஒரு விடுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமி சர்தக் பணியாற்றும் ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தவர் ஆவார்.
ஒடிசாவில் சாலையில் சென்றுகொண்டுருந்த 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்வபம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 3 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், சிறுமியின் பெற்றோர் தற்போது காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
அன்றைய தினம், சர்தக் என்ற ஹாக்கி பயிற்சியாளர், சந்தீப் மற்றும் சாகர் ஆகிய தனது நண்பர்களுடன் சேர்ந்து, சிறுமியை சாலையிலிருந்து கடத்திச் சென்று, ஒரு விடுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமி சர்தக் பணியாற்றும் ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தவர் ஆவார்.
இந்நிலையில் புகாரை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஒடிசாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுமி தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவமும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மனநல பாதிப்புடன் இருந்த ஆஷா தற்கொலை செய்து கொண்டார்.
- அரசின் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லாது என்று கூறப்பட்டது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தினக்கூலித் தொழிலாளியாக இருப்பவர் மது பிந்தானி. பழங்குடியினரான இவர், உயிரிழந்த தனது 17 வயது மகளான ஆஷா பிந்தானியின் உடலை, ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால், பிரேத பரிசோதனைக்காக சுமார் 7 கி.மீ தூரத்திற்கு தள்ளுவண்டியில் எடுத்துச் சென்றுள்ளார்.
மனநல பாதிப்புடன் இருந்த ஆஷா, வியாழக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்காக உடலை பாலியபால் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
தனியார் சேவை ஆம்புலன்ஸ் ஒன்று உடலை ஏற்றிச் செல்ல ரூ.1,200 கேட்டது. அரசின் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லாது என்று கூறப்பட்டது.
பணம் இல்லாததால், மது உள்ளூர் மக்களிடம் உதவி கோரினார், ஆனால் யாரும் உதவவில்லை.
பின்னர், ஒரு ஆட்டோ ஓட்டுநர் முன்வந்து தனது தள்ளுவண்டியை பயன்படுத்த கொடுத்தார். மது தனது மகளின் உடலை அந்த தள்ளுவண்டியில் கொண்டு சென்றார். பிரேத பரிசோதனை முடிந்ததும், அதே வண்டியில் உடலை இறுதி சடங்குகளுக்காக மீண்டும் 7 கி.மீ பயணித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
மகளின் உடலை தந்தை தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- கல்லூரியில் இளம் பெண் தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள் இது நடந்துள்ளது.
- தற்போதைய அரசின் கீழ் குற்றவாளிகள் தைரியம் அடைந்துள்ளனர்.
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.
இந்நிலையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவரும் பிஜு ஜனதா தளம்தலைவருமான நவீன் பட்நாயக் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்நாயக் தனது எக்ஸ் பதிவில், "பூரி மாவட்டத்தின் பாலங்கா பகுதியில் ஒரு இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை முயற்சி கொடூரமானது. இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
FM கல்லூரியில் ஒரு இளம் பெண் (ஆசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குள்ளாகவும், கோபால்பூரில் நடந்த திகிலூட்டும் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாகவும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் ஒடிசா முழுவதும் தினசரி பதிவாகின்றன. இவை தனிப்பட்ட வன்முறை சம்பவங்கள் அல்ல. இந்த சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து நடப்பது, ஆளும் அரசின் அமைப்புரீதியான தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
தற்போதைய அரசின் கீழ் குற்றவாளிகள் தைரியம் அடைந்துள்ளனர், தண்டிக்கப்படுவது குறித்து கவலைப்படுவதில்லை என்பதைக் காட்டுகிறது.
அரசு செயலற்ற தன்மையால் ஒடிசா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசு செயல்படுமா? ஒடிசாவின் பெண்களும், சிறுமிகளும் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
- பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக மாணவி புகார் தெரிவித்திருந்தார்.
- இந்த புகார் குறித்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். மருத்துவமனையில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலால் மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் அம்மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசாவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.






