என் மலர்
இந்தியா

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு
- ஒடிசாவின் சந்திப்பூரில் இரண்டு பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை செய்தது.
- அவை திட்டமிடப்பட்ட பாதையைப் பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன.
புவனேஸ்வர்:
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறு தயாரிக்கப்படும் ஆயுதங்களும், ஏவுகணைகளும், டி.ஆர்.டி.ஓ.வால் சோதனை செய்யப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
இதற்கிடையே, போர்க்கள பயன்பாட்டிற்காக பிரளய் என்ற குறுகிய தூர ஏவுகணை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரளய், அதன் உயர் துல்லியம் மற்றும் அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற, ஒரு திடமான உந்துசக்தி கொண்ட ஏவுகணையாகும். பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும்.
இந்நிலையில், ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து டி.ஆர்.டி.ஓ. இரண்டு பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்தது.
இரு ஏவுகணைகளும் திட்டமிடப்பட்ட பாதையைப் பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன.
இந்த வெற்றி ஏவுகணையின் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது என ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.






