என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே என சிவசேனா கூறியுள்ளது.
    • சிவசேனா 25 ஆண்டுகளாக பா.ஜனதாவை தோளில் சுமந்து வந்தது.

    மும்பை :

    சிவசேனா 2 ஆக உடைந்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது. கட்சி உடைந்ததற்கு பா.ஜனதா தான் முக்கிய காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா உள்ளிட்ட குடும்ப கட்சிகள் அழிந்துவிடும் என பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேசியிருந்தார்.

    இந்தநிலையில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பிறகு ஒட்டு மொத்த உலகமே அப்போதைய அந்த மாநில முதல்-மந்திரி மோடிக்கு எதிராக நின்றது. ஆனால் இந்துத்வாவுக்காக மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே என சிவசேனா கூறியுள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

    குஜராத் கலவரத்தின் போது அவரது சொந்த கட்சியினரே அவருக்கு ராஜ தர்மத்தை பற்றி யோசனை கூறினர். அந்த நேரத்தில் 'ராஜ தர்மத்தை ஓரமாக வையுங்கள், மோடி மீது கைவைக்க கூடாது. அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க கூடாது' என கூறியவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே. குஜராத் கலவரத்திற்கு பிறகு பால் தாக்கரே தான் மோடிக்கு ஆதரவாக நின்றார்.

    தற்போது நீங்கள் (பா.ஜனதா) சிவசேனாவை அழிக்க விரும்புகிறீர்கள்?. சிவசேனா 25 ஆண்டுகளாக பா.ஜனதாவை தோளில் சுமந்து வந்தது. இன்று 2 கட்சிகளுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜனதா மராட்டியத்தில் பால்தாக்கரேவின் பெயரை பயன்படுத்தி வருகிறது.

    பா.ஜனதாவால் சிவசேனாவுடன் மோத முடியாது என்பதால், அவர்களை அமலாக்கத்துறை மூலம் பயம் காட்டி கட்சியை உடைத்து உள்ளனர். உங்களுக்கு அதிகம் பேர் கிடைக்கலாம். ஆனால் பால் தாக்கரேயின் சிவசேனா மீண்டும் வான் உயரத்தை அடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியை உருவாக்கினார்.
    • பா.ஜனதாவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

    மும்பை :

    கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த மகாராஷ்டிரா அரசியல் சூறாவளியால் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது.

    சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியை உருவாக்கினார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. மேலும் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

    இந்தநிலையில் மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்து, இரு தரப்பினரும் வருகிற 8-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷிண்டே தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, "கட்சி தாவல் தடை சட்டம், கருத்து வேறுபாடுகளுக்கு எதிரான சட்டமாக இருக்க முடியாது. தகுதி நீக்கம் கண்டறியப்படும் வரை, சட்டத்திற்கு புறம்பான செயல் எதுவும் இல்லை" என்று வாதிட்டார்.

    உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வக்கில் கபில் சிபல், "40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் நடத்தை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்படும் நிலையில் உள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களை உண்மையான சிவசேனா என்று எப்படி உரிமை கோர முடியும்?.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் வேறு அரசியல் கட்சியுடன் இணைவதன் மூலம் மட்டுமே அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்" என்றார்.

    தேர்தல் ஆணையமும் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது.

    அனைத்து தரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மகாராஷ்டிரா அரசியல் குழப்பநிலை தொடர்புடைய மனுக்களை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றுவதா?, வேண்டாமா? என்பது குறித்த உத்தரவு வருகிற திங்கட்கிழமை பிறப்பிக்கப்படும்.

    அதுவரை தங்களையே உண்மையான சிவசேனா என அறிவிக்க கோரும் ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீது எந்தவித அவசர நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கக்கூடாது. ஏக்நாத் ஷிண்டேவின் மனுவுக்கு பதிலளிக்க உத்தவ் தாக்கரே தரப்பு அவகாசம் கோரினால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவு ஷிண்டே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    • சஞ்சய் ராவத் மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் வங்கி கணக்கில் ரூ.1.08 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மும்பை :

    மும்பையில் 'பத்ரா சால்' என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ந் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். சஞ்சய் ராவத்தை போலீசார் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்ரா சால் முறைகேடு மூலம் ரூ.1 கோடியே 6 லட்சத்தை பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    இதையடுத்து அவரை 4-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. சஞ்சய் ராவத்தின் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், அலிபாக்கில் உள்ள சொத்துகளை சஞ்சய் ராவத் வாங்கியதில் கணிசமான பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், எனவே காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணைக்கு ஒத்துழைக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் சஞ்சய் ராவத் குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ.1.17 கோடியை அலிபாக் சொத்துக்களுக்காக பயன்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு விசாரணையில் வெளிவந்த ரூ.1.06 கோடியை அவர் கூடுதலாக பயன்படுத்தி உள்ளார்.

    சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் வங்கி கணக்கில் ரூ.1.08 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வர்ஷா ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருவரிடமும் ஒன்றாக விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மேலும் சில பணபரிமாற்றம் குறித்த தகவல் வெளிவந்து இருப்பது விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று குறிப்பிட்டார்.

    மேலும் சஞ்சய் ராவத்தின் அமலாக்கத்துறை காவலை வருகிற 8-ந் தேதி வரை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    முன்னதாக அமலாக்கத்துறை காவலின்போது தன்னை காற்றோட்டம் இல்லாத அறையில் வைத்து இருந்ததாக நீதிபதியிடம் சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஆனால் இதை மறுத்த அமலாக்கத்துறை வக்கீல், "ஏ.சி. வசதி இருந்ததால் அறையின் ஜன்னல் அடைக்கப்பட்டு இருந்தது" என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், எனது உடல்நல பிரச்சினையால் ஏ.சி. வசதியை என்னால் பயன்படுத்த முடியாது" என்றார்.

    இதையடுத்து காற்றோட்டமான அறை வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா இன்று விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று(வெள்ளிக்கிழமை) ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவிக்கும் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 மாதங்களில் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்த 18 லட்சத்து 37 ஆயிரம் சிக்கினர்.
    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 180 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மும்பை :

    மத்திய ரெயில்வேயில் பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம் செய்த 18 லட்சத்து 37 ஆயிரம் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.126.18 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஜூலை மாதம் மட்டும் ஓசிப்பயணம் செய்த 3.27 லட்சம் பேரிடம் இருந்து ரூ.20 கோடியே 66 லட்சம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 7½ லட்சம் பேர் பிடிபட்டு, அவர்களிடம் இருந்து ரூ.45.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது. எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 180 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

    • உத்தவ் தாக்கரே அரசு 4 நாட்களில் 182 அரசாணைகளை வெளியிட்டது.
    • ஷிண்டே அரசு இதுவரை மத்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை.

    மும்பை :

    மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் 30-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். அந்த நாளில் இருந்து சுமார் 751 அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    அரசாணை என்பது வளர்ச்சி தொடர்பான பணிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதல் ஆகும். ஷிண்டே அரசு இதுவரை மத்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை. முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் உள்ளனர்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இலாகா இல்லாத மந்திரியாக இருப்பதால் முடிவெடுக்க முதல்-மந்திரிக்கு மட்டுமே உரிமை உள்ளது.

    இந்த அரசாணைகளில் மெட்ரோ-3 வழித்தடத்திற்காக கூடுதல் கடன் வழங்கப்பட்டது. மறைந்த தலைவர் பாலாசாகேப் தேசாய் சிலை நிறுவ ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கும்.

    பாலாசாகேப் தேசாயின் பேரன் ஷம்புராஜ் தேசாய் தற்போது ஷிண்டே முகாமில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொது சுகாதாரத்துறைக்கு அதிகபட்சமாக 104 அரசாணைகளும், மருத்துவ கல்வி துறையில் 24 அரசாணைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு ஜூன் மாதம், ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு வெடித்தது. இந்த சம்பவத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு 4 நாட்களில் 182 அரசாணைகளை வெளியிட்டது.

    பா.ஜனதா தலைவரான பிரவீன் தரேகர் குறுகிய காலத்தில் இவ்வளவு உத்தரவுகளை பிறப்பிப்பது நெறிமுறையற்றது என விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 1966-ம் ஆண்டு நிறுவப்பட்ட சிவசேனா கட்சி பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது.
    • அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

    மும்பை :

    மறைந்த தலைவர் பால் தாக்கரேவால் 1966-ம் ஆண்டு நிறுவப்பட்ட சிவசேனா கட்சி பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது.

    சக்திவாய்ந்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

    ஆனால் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அதிருப்தி அணி பிரிவு சிவசேனாவுக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.

    மராட்டியத்தில் ஆட்சியில் இருந்து சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு காரணமாக கவிழ்ந்தது. இந்த அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

    மேலும் உண்மையான சிவசேனா நாங்கள் தான் என கூறிவரும் அதிருப்தி அணியினர் இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    மேலும் வரும் காலத்தில் பா.ஜனதா போன்ற சித்தாந்தம் உள்ள கட்சிகள் மட்டுமே பிழைக்கும், குடும்ப அரசியல் செய்யும் மற்ற கட்சிகள் அழிந்துவிடும் என்று பா.ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார்.

    இதை மேற்கோள் காட்டும் வகையில் நேற்று 'மாதோஸ்ரீ' இல்லத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    சிவசேனாவை பிளவுபடுத்த பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது கட்சியை முழுவதும் ஒழித்துக்கட்ட புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நடத்திய சோதனை கட்சியை அழிக்கும் அவர்களின் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

    சிவசேனா தொடர்பான வழக்கில் எனக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷிண்டேவும், பட்னாவிசும் மட்டுமே அரசை நடத்தி வருகின்றனர்.
    • பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர். பொறுப்பேற்று ஒரு மாதம் முடிந்தும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஷிண்டேவும், பட்னாவிசும் மட்டுமே அரசை நடத்தி வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

    குறிப்பாக மாநிலம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் மகாராஷ்டிராவில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் புனேயில் நிருபர்களிடம் கூறுகையில், "விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாத போதும், அரசு முழு திறனுடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்து பல்வேறு முடிவுகளை எடுத்து உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட அனுமதி வழங்கி உள்ளோம். மழை தண்ணீரை வறட்சி பாதித்த மரத்வாடா மண்டல பகுதிக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்." என்றார்.

    இதற்கிடையே இன்னும் 4 நாட்களில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

    இதுபற்றி அவர் தெரிவிக்கையில், "மழைக்கால சட்டசபை கூட்டத் தொடரை எதிர்கொள்ளும் வகையில் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாளில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும். இதை கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்றார். மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து திட்டமிட்டப்படி சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. மந்திரி சபை விரிவாக்கத்தை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • புதிய அரசில் குழப்பம் நிலவி வருகிறது.
    • மூத்த அதிகாரிகளே என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    மும்பை :

    மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் 30-ந் தேதி பதவி ஏற்றனர். எனினும் பதவி ஏற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்தநிலையில் ஷிண்டே, பட்னாவிஸ் அரசை 'ஏக் துஜே கேலியே' அரசு என பா.ஜனதா எம்.பி. ஒருவரே வர்ணித்ததாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " இன்று பா.ஜனதா எம்.பி. ஒருவருடன் பேசினேன். அப்போது அவர் ஷிண்டே - பட்னாவிஸ் அரசை, 'ஏக் துஜே கேலியே' அரசு என கூறினார். இதுபோல நான் ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. கடந்த மகாவிகாஸ் ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு மந்திரிகள் இருந்தனர். அவர்கள் மூலமாக நாங்கள் அந்த பகுதி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வந்தோம். தற்போது புதிய அரசில் குழப்பம் நிலவி வருகிறது. மூத்த அதிகாரிகளே என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்" என்றார்.

    'ஏக் துஜே கேலியே' இந்தியில் மெகாஹிட்டான காதல் படத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 4-வது இடத்தை தான் பிடித்தது.
    • எங்களது முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது.

    மும்பை :

    கட்சிக்கு எதிராக திரும்பிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சிவசேனா கட்சி தலைவர்கள் துரோகிகள் என கூறிவருகின்றனர்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று புனேயில் சாஸ்வத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 4-வது இடத்தை தான் பிடித்தது. 2019-ல் பா.ஜனதா, சிவசேனா ஆட்சி வந்து இருந்தால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இல்லாமல் போயிருக்கும். ஆனால் சிவசேனாவால் அவர்களுக்கு புதிய வாழ்க்கை கிடைத்தது. தற்போது எங்களை மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பார்க்கிறது. எங்களது முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது. உலகமே ஏக்நாத் ஷிண்டே, அவருடன் சேர்ந்த 50 பேர் யார் என கேட்டது.

    நாங்கள் துரோகிகளா?. நாங்கள் துரோகிகள் என்றால் சாமானிய மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்து இருப்பார்களா?. இந்த பொதுக்கூட்டத்துக்கு இவ்வளவு கூட்டம் திரண்டு இருக்குமா?. அப்படியெனில் பால்தாக்கரேவின் சிவசேனாவை காப்பாற்ற நாங்கள் எடுத்த நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது.
    • கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.

    சிவசேனாவின் குரலாக கருதப்படும் சஞ்சய் ராவத் எம்.பி. பத்ரா சால் வழக்கில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து உள்ளது. பத்ரா சால் மோசடி என்றால் என்ன?. இதில் சஞ்சய் ராவத் சிக்கியது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ளது சித்தார்த் நகர். இது பத்ரா சால் என பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 47 ஏக்கர் பரப்பில் 672 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். 2007-ம் ஆண்டு பத்ரா சாலை சீரமைக்க மகாடா நிறுவனம், எச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் கிளை நிறுவனமான குரு ஆஷிசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் எச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்கு கிடைக்க தொழில் அதிபர் பிரவின் ராவத் உதவி செய்தார். பிரவின் ராவத், சஞ்சய் ராவத்திற்கு நெருக்கமானவர் ஆவார். குரு ஆஷிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக ராகேஷ் வாதவன், சாரங் வாதவன் மற்றும் பிரவின் ராவத் இருந்தனர்.

    மகாடா குரு ஆஷிஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் முதலில் குடிசைப்பகுதியில் வசித்த 672 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் மகாடாவுக்கு 3 ஆயிரம் வீடும், 2.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் வீடு கட்டி விற்பனை செய்யலாம்.

    ஆனால் குரு ஆஷிஸ் நிறுவனம் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடு கட்டாமல், முதலில் விற்பனை செய்வதற்காக அடுக்குமாடி கட்டிட பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் வீடு கட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.138 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நிறுவனம் மகாடா கொடுத்த நிலத்தை முறைகேடாக பல்வேறு கட்டுமான அதிபர்களுக்கு ரூ.1,034 கோடிக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பத்ரா சால் குடிசைப்பகுதி மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பத்ரா சால் வழக்கில் ரூ.1,200 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் பத்ரா சால் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை பிரவின் ராவத்தை கைது செய்தது. விசாரணையில் அவர் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை எச்.டி.ஐ.எல். நிறுவனத்திடம் இருந்து ரூ.112 கோடியை பெற்றது தெரியவந்தது.

    இந்த பணத்தை பிரவின் ராவத் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 2010-ம் ஆண்டு பிரவின் ராவத்தின் மனைவி மாதுரி, சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு ரூ.83 லட்சம் வட்டியில்லா கடனாக கொடுத்து இருக்கிறார். இந்த பணத்தில் வர்ஷா தாதரில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

    இதேபோல மோசடி மூலம் கிடைத்த பணத்தில் மாதுரி ராவத், வர்ஷா ராவத், தொழில் அதிபர் சுஜித் பட்கரின் முன்னாள் மனைவி சுவப்னா பட்கா் ஆகியோர் பெயர்களில் அலிபாக், கிம் கடற்கரையில் 8 பிளாட் நிலம் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை தாதரில் உள்ள வர்ஷா ராவத்தின் வீடு, அலிபாக்கில் உள்ள நிலம் என ரூ.11 கோடி சொத்துக்களை முடக்கியது.

    இந்தநிலையில் தான் இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடமும் அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. மேலும் அவர் பத்ரா சால் மோசடி வழக்கில் நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைதான சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார். அவரது எழுத்துக்கள் சிவசேனா தொண்டர்களை கவரும் வகையில் ஆவேசமாக இருக்கும். சிவசேனாவின் குரலாகவே கருதப்படும் இவர் முறைகேடு வழக்கில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சில சமூகத்தின் பெருமைகளை பற்றி பேசுகையில் இவ்வாறு கூறி விட்டேன்.
    • நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றி உள்ளனர்.

    மும்பை :

    மும்பை அந்தேரி பகுதியில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த சவுக் (சாலை சந்திப்பு) பெயர் பலகை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியது பெரும் புயலை கிளப்பியது.

    அவர் பேசுகையில் "நான் இங்கு உள்ளவர்களிடம் கூறுகிறேன், மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால், உங்கள் கையில் பணமே இருக்காது. மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகராக இருக்காது" என்றார்.

    இது மராட்டிய மக்களையும், மும்பை நகரையும் அவமதிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குறிப்பாக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கவர்னர் தனது பேச்சுக்கு மராட்டிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    கவர்னரின் கருத்தை ஏற்க முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கூறினர்.

    ஆனால் தனது பேச்சு திரித்து கூறப்பட்டு இருப்பதாக கவர்னர் விளக்கம் அளித்து இருந்தார்.

    ஆனால் கவர்னர் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தனது சர்ச்சை பேச்சுக்காக நேற்று மராட்டிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக மராட்டிய மக்களிடம் இருந்து அதிகளவில் அன்பு கிடைத்தது. ஆனால் அந்த நாளில் (அந்தேரி நிகழ்ச்சியில்) தற்செயலாக இந்த தவறு நடந்துவிட்டது. சில சமூகத்தின் பெருமைகளை பற்றி பேசுகையில் இவ்வாறு கூறி விட்டேன். இது மாநில மக்களை இவ்வளவு புண்படுத்தும் என்று நினைத்து பார்க்கவில்லை.

    இதற்காக மராட்டிய மக்கள் பெருந்தன்மையை காட்டி என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். மராட்டிய மக்கள் பல புனிதர்களின் போதனைகளை பின்பற்றி நடப்பவர்கள் என்பதால், இந்த மாநிலத்தின் பணிவான சேவகனை மன்னிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    மராட்டியம் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றி உள்ளனர். மாநிலங்களை உள்ளடக்கிய மாபெரும் பாரம்பரியம் நமது நாட்டை இந்த முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சஞ்சய் ராவத் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக இருந்து வருகிறார்.
    • கடந்த மாதம் 1-ந்தேதி 10 மணி நேரம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மும்பை :

    சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்(வயது60). மாநிலங்களவை எம்.பி.யான இவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக இருந்து வருகிறார்.

    2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனா, தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சஞ்சய் ராவத் என கூறப்படுகிறது.

    கடந்த மாதம் சிவசேனா 2 ஆக உடைந்த நிலையில், சஞ்சய் ராவத் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை கடுமையான வார்த்தைகளால் விமா்சித்து வந்தார்.

    இந்தநிலையில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்ததாக கூறப்படும் மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் அவர், தற்போது சிறையில் உள்ளார்.

    பிரவின் ராவத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பத்ரா சால் மோசடியில் சஞ்சய் ராவத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் கடந்த மாதம் 1-ந் தேதி சுமார் 10 மணி நேரம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன்பிறகு 2 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டியது இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சுமார் 10 மணி நேர சோதனையில் ரூ.11½ லட்சம் ரொக்கம், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதன் பிறகு சஞ்சய் ராவத்திடம் தென்மும்பையில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அவரை மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சஞ்சய் ராவத்தை 8 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. எனினும் சிறப்பு கோர்ட்டு அவரை வரும் 4-ந் தேதி வரை விசாரிக்க அனுமதி வழங்கியது.

    ×