என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • 2024 பாராளுமன்ற தேர்தலில் அது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவலாக அமையும்.
    • ஜனதா தளம் கட்சியை உடைக்க பா.ஜனதா முயற்சி செய்தது.

    மும்பை :

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. எனினும் நிதிஷ்குமாருக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்தநிலையில் அவர் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்து ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்து உள்ளார்.

    இதுகுறித்து சிவசேனா சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி ஆர்.சி.பி. சிங்கிற்கு பின்னால் இருந்து ஜனதா தளம் கட்சியை உடைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. இதை உணர்ந்து கொண்ட நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

    நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி புயலை உருவாக்கி உள்ளார். இது சூறாவளியாக மாறினால், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவலாக அமையும். மேலும் இந்த புதிய கூட்டணியில் நிதிஷ்குமார், லாலுபிரசாத் இடையேயான பகை முடிவுக்கு வரும். சிவசேனாவுக்கு எதிராக கலகம் செய்த ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்கு முன்னால் மண்டியிட்டார். ஆனால் பா.ஜனதா இல்லாமல் வாழ முடியும் என நிதிஷ்குமார் அவருக்கு காட்டி உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • துணை கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மும்பை:

    இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

    ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. கடந்த மாதம் 30-ம் தேதி அறிவித்தது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் எனவும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதிப்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளதால் ஜிம்பாப்வே தொடரில் விளையாட உள்ளார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:

    கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.

    • மந்திரி சபை விரிவாக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நிதித்துறையை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    மும்பை :

    ஜூன் 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த தலா 9 பேர் என மொத்தம் 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதனால் ஷிண்டே, பட்னாவிசை சேர்த்து மந்திரி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    நீண்ட இழுபறிக்கு பிறகு நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.

    மந்திரி சபை விரிவாக்கத்தை தொடர்ந்து உடனடியாக இலாகா ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆனால் மந்திரி சபை விரிவாக்கத்தை போல மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதிலும் இழுபறி நீடித்து வருகிறது. முக்கிய இலாகாக்களை கைப்பற்ற இரு தரப்பினர் இடையே போட்டி வலுத்து உள்ளதால், இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்தது.

    இருப்பினும் இலாகா பகிர்வு தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய இலாகாவான உள்துறையை தன்வசம் வைத்து கொள்வார் என பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை கண்காணிக்க இந்த இலாகா அவருக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ் 2014 முதல் 2019 வரை முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்துறையை தன் வசமே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல மற்றொரு முக்கிய இலாகாவான நிதித்துறையை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எந்த இலாகாவை நிர்வகிப்பார் என தெளிவாக தெரியவில்லை. எனினும் அவர் நகர்ப்புற வளர்ச்சி, மாநில அரசு போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகிப்பார் என கூறப்படுகிறது. கடந்த மகா விகாஷ் அகாடி ஆடசியில் அவர் பொதுப்பணித்துறை, நகர வளர்ச்சி, மாநில போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகித்தார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவார் ஆகியோருக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. கடந்த பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் சந்திரகாந்த் பாட்டீல் வருவாய் மற்றும் கூட்டுறவு இலாகாக்களையும், சுதீர் முங்கண்டிவார் நிதி மற்றும் வனத்துறையையும் வகித்தனர்.

    பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு மந்திரியான விஜய்குமார் காவித்துக்கு பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் அந்த கட்சியை சேர்ந்த தலித் தலைவரான சுரேஷ் காடேக்கு சமூக நீதித்துறை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
    • வருகிற 12-ந்தேதி தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

    மும்பை

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கட்சியின் கூட்டணி அரசு பதவி ஏற்று சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.

    இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு வழியாக மந்திரி சபை விரிவாக்கம் நடந்து விட்டது. எங்களது அதிருப்தியாளர்கள் கங்கையில் நீராடி விட்டனர். ஆனால் அவர்கள் செய்த துரோகத்தின் பாவத்தை கழுவ முடியுமா?.

    மந்திரிகளுக்கு பதவி ஏற்பு விழாவில் ஒரு தெய்வீக செயலை செய்து வைத்தது போல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் முகம் பளிச்சிட்டது. மந்திரி சபை விரிவாக்கத்துக்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே 7 தடவை தலைநகர் சென்று டெல்லி முன் தலைகுனிந்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர்களது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. வருகிற 12-ந் தேதி தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதற்கு முன் மந்திரி சபை விரிவாக்கத்தின் அவசரம் ஏன்?.

    இதன் பொருள், நீதித்துறை மீது எந்த பயமும் இல்லை என்பது தான். தங்களது விருப்பத்தை நிறைவேற்ற எதையும் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீது நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா தனது பிராந்திய கூட்டணி கட்சிகளை படிப்படியாக அழித்து வருகிறது.
    • பா.ஜனதா போன்ற சித்தாத்தம் கொண்ட கட்சிகள் தான் இனி உயிர் வாழும்.

    மும்பை :

    பா.ஜனதா போன்ற சித்தாத்தம் கொண்ட கட்சிகள் தான் இனி உயிர் வாழும், குடும்ப கட்சிகள் அழிந்து போகும் என்று சமீபத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார். மேலும் பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், புதிய ஆட்சியை அமைத்த நிதிஷ்குமார் நாட்டின் அரசியல் அரங்கை பரபரப்பாக்கி உள்ளார்.

    இவற்றை மேற்கோள் காட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனே மாவட்டம் பாராமதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிராந்திய கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை, அவர்களது கட்சியை (பா.ஜனதா) போன்றவை மட்டும் நாட்டில் இருக்கும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் கூறியிருப்பதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. இதுவும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் அதிருப்தியாக இருக்கலாம். பா.ஜனதா தனது பிராந்திய கூட்டணி கட்சிகளை படிப்படியாக அழித்து வருகிறது.

    பா.ஜனதாவின் தனி சிறப்பு என்னவென்றால், அவர்கள் எந்த பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த பிராந்திய கட்சிகள் பா.ஜனதாவை விட குறைவான இடங்களில் தான் வெற்றி பெறுகிறது. பஞ்சாப்பில் பிரகாஷ் சிங் பாதலின் அகாலி தளத்துடன் பா.ஜனதா கூட்டணி வைத்திருந்தது. இன்று அகாலி தளம் ஏறக்குறைய முடிந்து விட்டது.

    மராட்டியத்தில் சிவசேனாவுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்திருந்தார்கள். இன்று சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, அந்த கட்சியை எப்படி பலவீனப்படுத்தலாம் என்று பா.ஜனதா முயற்சித்து வருகிறது.

    பீகாரில் இதே காட்சி இருந்தது. அங்கு பா.ஜனதாவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்தது. ஐக்கிய ஜனதாதளம் குறைவான இடங்களே பிடித்தது.

    நிதிஷ்குமாரை பா.ஜனதா தலைவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார். பா.ஜனதா நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அவர் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளார். அவரது மாநிலத்திற்கும், அவரது கட்சிக்கும் இது ஒரு சிறந்த முடிவு என்று நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர்.
    • இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது.

    மும்பை :

    மராட்டியத்தில் நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதை தேசியவாத காங்கிரசை சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. விமர்சித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மந்திரி சபையில் ஒரு பெண்ணுக்கு கூட இடம் வழங்கப்படாதது துரதிருஷ்டமானது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கிடைக்காது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது" என்றார்.

    இந்த விவகாரத்தில் சுப்ரியா சுலே, அவரை சில மாதங்களுக்கு சமையல் அறைக்கு சென்று சமைக்க வேண்டும் என கூறிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலையும் மறைமுக விமர்சித்தார்.

    • சஞ்சய் ரதோட் இளம்பெண் தற்கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கி மந்திரி பதவியை இழந்தவர்.
    • தானாஜி சாவந்த்திற்கு மாநிலம் முழுவதும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் உள்ளன.

    மும்பை

    ஷிண்டே தரப்பில் மந்திரி பதவி ஏற்ற சஞ்சய் ரதோட், உத்தவ் தாக்கரே ஆட்சியின்போது இளம்பெண் தற்கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கி மந்திரி பதவியை இழந்தவர். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டதற்கு ஆளும் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநில பா.ஜனதா துணை தலைவர் சித்ரா வாக் கண்டனம் தெரிவித்ததோடு, சஞ்சய் ரதோடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் அறிவித்து உள்ளார்.

    ஆனால் உத்தவ் தாக்கரே ஆட்சியின் போதே சஞ்சய் ரதோட் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால் அவருக்கு பதவி வழங்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நியாயப்படுத்தி உள்ளார்.

    இதேபோல ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியை உருவாக்கியபோது முதலில் ஆதரவு தெரிவித்த தானாஜி சவாந்துக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. தானாஜி சாவந்த் 2014 - 2019 வரையிலான பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஆவார். ஆனால் கடந்த முறை அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

    இதன் காரணமாக அவர் உஸ்மனாபாத்தில் கட்சி கூட்டங்களை புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பணக்கார எம்.எல்.ஏ. வாக கருத்தப்படும் இவர் 2019-ம் தேர்தலின் போது வேட்பு மனுவில் தனக்கு ரூ.206 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தானாஜி சாவந்த்திற்கு மாநிலம் முழுவதும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • பாஜகவில் இருந்து 9 பேர், சிவசேனா சார்பில் 9 பேர் பதவியேற்றனர்

    மும்பை:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை, அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவே கவிழ்த்துவிட்டு பாஜக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    ஆனால் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்ய தொடங்கினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக சார்பில் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதிர் முங்கந்திவார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். சிவசேனா சார்பில் 9 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    • கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
    • சிறையில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுப்பு.

    மும்பை

    மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சாலில் நடந்த குடிசை சீரமைப்பு பணியில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரவின் ராவத் என்ற தனக்கு நெருக்கமானவரிடம் இருந்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. குடும்பத்தினருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரியவந்தது.

    இதையடுத்து இந்த மோசடி வழக்கில் கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தது. கடந்த சனிக்கிழமை பத்ரா சால் மோசடி தொடர்பாக சஞ்சய் ராவத் மனைவியிடமும் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.

    இந்த விசாரணையில் பத்ரா சால் முறைகேடு மூலம் சஞ்சய் ராவத் ரூ.2 கோடியே 25 லட்சம் பெற்றதாகவும், அந்த பணத்தை அலிபாக்கில் சொத்து வாங்க பயன்படுத்தியதும் தெரியவந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

    இந்தநிலையில் நேற்று காவல் முடிந்து அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அப்போது சஞ்சய் ராவத்தை இனிமேல் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. அதேநேரத்தில் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே வருகிற 22-ந்தேதி வரை சஞ்சய் ராவத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மேலும் கோர்ட்டு சஞ்சய் ராவத்திற்கு இதய நோய் இருப்பதை சுட்டிக்காட்டி ஜெயிலில் அவர் வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து சாப்பிட அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது.

    கோர்ட்டு உத்தரவை அடுத்து மும்பை ஆர்தர்ரோடு சிறையில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டார்.

    • பத்ரா சால் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைதுசெய்துள்ளது.
    • சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.

    மும்பை:

    மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

    இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • ஒரு போஸ்டரில் இருந்த தொலைபேசியின் வாயிலாக சிறுமி தனது குடும்பத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
    • குழந்தை இல்லாததால் சிறுமிய கடத்தியதாக, கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு போஸ்டரின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை நகரில் அந்தேரி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி பூஜா. தனது 7 வயதில், 2013ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி காலையில் சகோதரருடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவரை அணுகிய ஹென்றி ஜோசப் டிசோசா என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடத்தி சென்று விட்டார். இதன்பின்பு, உடனடியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றுள்ளார். பூஜாவை விடுதி ஒன்றுக்கு அனுப்பியுள்ளார். சிறுமியின் பெயரை ஆன்னி டிசோசா என மாற்றியுள்ளார்.

    இதன்பின்னர், ஹென்றிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் மும்பைக்கு திரும்பி வந்துள்ளனர். ஹென்றியும், அவரது மனைவியும், பூஜாவை அனைத்து வீட்டு வேலைகளையும் வாங்கி உள்ளனர். சரிவர சிறுமியை கவனிக்காமல் விட்டு விட்டனர். 16 வயது எட்டிய பூஜாவுக்கும் தனது குடும்ப உறுப்பினர்களை பற்றிய நினைவே இல்லாமல் போயுள்ளது. இவ்வளவுக்கும் சில நூறு மீட்டர் தொலைவிலேயே சிறுமியின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். ஆனால், ஒரு நாள் குடிபோதையில் ஹென்றி, நீ எனது மகள் இல்லை என பூஜாவிடம் கூறியுள்ளார். இதனால், வருத்தமுற்ற பூஜா, தனது தோழி உதவியுடன் கடந்த காலம் பற்றி அறிய முயற்சித்து உள்ளார்.

    இணையதளத்தில், பூஜா மாயம் தொடர்பான தேடுதலில் ஈடுபட்டு உள்ளார். இதில் இறுதியாக, 2013ம் ஆண்டு காணாமல் போன பூஜா தொடர்பான போஸ்டர் ஒன்று கிடைத்து உள்ளது. அதில் 5 தொடர்பு எண்கள் இருந்துள்ளன. ஆனால், 4 எண்கள் வேலை செய்யவில்லை. எனினும், கடைசியாக இருந்த எண்ணை முயற்சித்ததில் அது, பூஜாவின் அண்டை வீட்டுக்காரரான ரபீக்கின் தொலைபேசி எண் என தெரிந்தது. அவரை தொடர்பு கொண்டு பேசி தன்னை பற்றி கூறியுள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த ரபீக் பின்பு வீடியோ காலில் வந்து, பூஜாவை அடையாளம் கண்டுள்ளார். பின்னர், பூஜாவின் தாயாரையும் பேச வைத்து உள்ளார்.

    பூஜாவின் தாயாரும் தனது மகளை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் போனிலேயே அழுதுள்ளனர். உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முயற்சியுடன் பூஜா மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். இந்த காலகட்டத்தில் பூஜாவின் தந்தை உயிரிழந்து விட்டார்.

    இதுபற்றி மூத்த காவல் அதிகாரி மிலிந்த் குர்தர் கூறும்போது, 'ஹென்றி கைது செய்யப்பட்டு உள்ளார். தனக்கும், மனைவிக்கும் குழந்தை இல்லாததற்காக பூஜாவை கடத்தியதாக அவர் கூறியுள்ளார். ஹென்றியின் மனைவியும் வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்' என்றார்.

    9 ஆண்டுகளுக்கு முன் தனது தாயாருடனும், சகோதரருடனும் பள்ளிக்கு சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு பிரிந்து சென்ற பூஜா, போஸ்டர் ஒன்றின் உதவியுடன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்போது பேசப்பட்டது.
    • பிரதமர் மோடியுடனான நட்பு உத்தவ் தாக்கரேக்கு மிக முக்கியமாக இருந்தது.

    மும்பை :

    மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனா, முதல்-மந்திரி பதவி பிரச்சினையில் கூட்டணியை முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

    இதற்கு மத்தியில் சிவசேனா மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக பேசப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் நீண்ட நேரம் பேசினார்.

    இந்த சந்திப்பு விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்போது பேசப்பட்டது.

    இந்தநிலையில் பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே சந்திப்பு பின்னணி குறித்து ஏக்நாத் ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அப்போதைய மந்திரி ஆதித்ய தாக்கரேயை நாராயண் ரானே இழுத்தது, சிவசேனாவினர் இடையே வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அடுத்த 15 நாளில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உத்தவ் தாக்கரே முடிவு செய்திருந்தார். ஏனெனில் உயர் பதவியை விட பிரதமர் மோடியுடனான நட்பு உத்தவ் தாக்கரேக்கு மிக முக்கியமாக இருந்தது. ஆனால் இது தொடர்பாக சிவசேனா தொண்டர்களிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்த அவருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டது.

    பிரதமருடன் சந்திப்பு நடந்த அடுத்த மாதமே பல பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது சிவசேனா, பா.ஜனதா இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியது. மேலும் நாராயண ரானேக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. இது உத்தவ் தாக்கரேயை அதிருப்தி அடைய செய்தது. இதுபோன்ற பிரச்சினைகளால் இரு கட்சிகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போனது.

    இந்த விவகாரங்கள் தான் ஷிண்டே தலைமையில் சிவசேனாவில் அதிருப்தி அணி உருவாக காரணமாக அமைந்து விட்டது.

    இவ்வாறு தீபக் கேசர்கர் கூறினார்.

    ஆனால் அவரின் கருத்தை சிவசேனா நிராகரித்து உள்ளது.

    இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷா காயண்டே கூறுகையில், "அவர் (தீபக் கேசர்கர் புதியதாக ஏதாவது ஒன்றை தினமும் தெரிவித்து வருகிறார். இவை சுய முரண்பாடுகள் கொண்ட அறிக்கைகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி" என்றார்.

    ×