search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய இருந்தார்: ஷிண்டே அணி தகவல்
    X

    முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய இருந்தார்: ஷிண்டே அணி தகவல்

    • பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்போது பேசப்பட்டது.
    • பிரதமர் மோடியுடனான நட்பு உத்தவ் தாக்கரேக்கு மிக முக்கியமாக இருந்தது.

    மும்பை :

    மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனா, முதல்-மந்திரி பதவி பிரச்சினையில் கூட்டணியை முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

    இதற்கு மத்தியில் சிவசேனா மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக பேசப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் நீண்ட நேரம் பேசினார்.

    இந்த சந்திப்பு விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்போது பேசப்பட்டது.

    இந்தநிலையில் பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே சந்திப்பு பின்னணி குறித்து ஏக்நாத் ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அப்போதைய மந்திரி ஆதித்ய தாக்கரேயை நாராயண் ரானே இழுத்தது, சிவசேனாவினர் இடையே வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அடுத்த 15 நாளில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உத்தவ் தாக்கரே முடிவு செய்திருந்தார். ஏனெனில் உயர் பதவியை விட பிரதமர் மோடியுடனான நட்பு உத்தவ் தாக்கரேக்கு மிக முக்கியமாக இருந்தது. ஆனால் இது தொடர்பாக சிவசேனா தொண்டர்களிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்த அவருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டது.

    பிரதமருடன் சந்திப்பு நடந்த அடுத்த மாதமே பல பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது சிவசேனா, பா.ஜனதா இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியது. மேலும் நாராயண ரானேக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. இது உத்தவ் தாக்கரேயை அதிருப்தி அடைய செய்தது. இதுபோன்ற பிரச்சினைகளால் இரு கட்சிகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போனது.

    இந்த விவகாரங்கள் தான் ஷிண்டே தலைமையில் சிவசேனாவில் அதிருப்தி அணி உருவாக காரணமாக அமைந்து விட்டது.

    இவ்வாறு தீபக் கேசர்கர் கூறினார்.

    ஆனால் அவரின் கருத்தை சிவசேனா நிராகரித்து உள்ளது.

    இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷா காயண்டே கூறுகையில், "அவர் (தீபக் கேசர்கர் புதியதாக ஏதாவது ஒன்றை தினமும் தெரிவித்து வருகிறார். இவை சுய முரண்பாடுகள் கொண்ட அறிக்கைகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி" என்றார்.

    Next Story
    ×