search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சஞ்சய் ராவத்தை 4-ந்தேதி வரை அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
    X

    சஞ்சய் ராவத்தை 4-ந்தேதி வரை அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு உத்தரவு

    • சஞ்சய் ராவத் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக இருந்து வருகிறார்.
    • கடந்த மாதம் 1-ந்தேதி 10 மணி நேரம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மும்பை :

    சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்(வயது60). மாநிலங்களவை எம்.பி.யான இவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வலது கரமாக இருந்து வருகிறார்.

    2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனா, தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சஞ்சய் ராவத் என கூறப்படுகிறது.

    கடந்த மாதம் சிவசேனா 2 ஆக உடைந்த நிலையில், சஞ்சய் ராவத் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை கடுமையான வார்த்தைகளால் விமா்சித்து வந்தார்.

    இந்தநிலையில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்ததாக கூறப்படும் மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் அவர், தற்போது சிறையில் உள்ளார்.

    பிரவின் ராவத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பத்ரா சால் மோசடியில் சஞ்சய் ராவத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் கடந்த மாதம் 1-ந் தேதி சுமார் 10 மணி நேரம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன்பிறகு 2 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டியது இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சுமார் 10 மணி நேர சோதனையில் ரூ.11½ லட்சம் ரொக்கம், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதன் பிறகு சஞ்சய் ராவத்திடம் தென்மும்பையில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அவரை மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சஞ்சய் ராவத்தை 8 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. எனினும் சிறப்பு கோர்ட்டு அவரை வரும் 4-ந் தேதி வரை விசாரிக்க அனுமதி வழங்கியது.

    Next Story
    ×