search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே மாதத்தில் 751 அரசாணைகள்: ஷிண்டே அரசு நடவடிக்கை
    X

    ஒரே மாதத்தில் 751 அரசாணைகள்: ஷிண்டே அரசு நடவடிக்கை

    • உத்தவ் தாக்கரே அரசு 4 நாட்களில் 182 அரசாணைகளை வெளியிட்டது.
    • ஷிண்டே அரசு இதுவரை மத்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை.

    மும்பை :

    மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் 30-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். அந்த நாளில் இருந்து சுமார் 751 அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    அரசாணை என்பது வளர்ச்சி தொடர்பான பணிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதல் ஆகும். ஷிண்டே அரசு இதுவரை மத்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை. முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் உள்ளனர்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இலாகா இல்லாத மந்திரியாக இருப்பதால் முடிவெடுக்க முதல்-மந்திரிக்கு மட்டுமே உரிமை உள்ளது.

    இந்த அரசாணைகளில் மெட்ரோ-3 வழித்தடத்திற்காக கூடுதல் கடன் வழங்கப்பட்டது. மறைந்த தலைவர் பாலாசாகேப் தேசாய் சிலை நிறுவ ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கும்.

    பாலாசாகேப் தேசாயின் பேரன் ஷம்புராஜ் தேசாய் தற்போது ஷிண்டே முகாமில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொது சுகாதாரத்துறைக்கு அதிகபட்சமாக 104 அரசாணைகளும், மருத்துவ கல்வி துறையில் 24 அரசாணைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு ஜூன் மாதம், ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு வெடித்தது. இந்த சம்பவத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு 4 நாட்களில் 182 அரசாணைகளை வெளியிட்டது.

    பா.ஜனதா தலைவரான பிரவீன் தரேகர் குறுகிய காலத்தில் இவ்வளவு உத்தரவுகளை பிறப்பிப்பது நெறிமுறையற்றது என விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×