search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை பற்றி சர்ச்சை கருத்து கூறிய மகாராஷ்டிரா கவர்னர் மன்னிப்பு கோரினார்
    X

    மும்பை பற்றி சர்ச்சை கருத்து கூறிய மகாராஷ்டிரா கவர்னர் மன்னிப்பு கோரினார்

    • சில சமூகத்தின் பெருமைகளை பற்றி பேசுகையில் இவ்வாறு கூறி விட்டேன்.
    • நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றி உள்ளனர்.

    மும்பை :

    மும்பை அந்தேரி பகுதியில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த சவுக் (சாலை சந்திப்பு) பெயர் பலகை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியது பெரும் புயலை கிளப்பியது.

    அவர் பேசுகையில் "நான் இங்கு உள்ளவர்களிடம் கூறுகிறேன், மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால், உங்கள் கையில் பணமே இருக்காது. மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகராக இருக்காது" என்றார்.

    இது மராட்டிய மக்களையும், மும்பை நகரையும் அவமதிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குறிப்பாக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கவர்னர் தனது பேச்சுக்கு மராட்டிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    கவர்னரின் கருத்தை ஏற்க முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கூறினர்.

    ஆனால் தனது பேச்சு திரித்து கூறப்பட்டு இருப்பதாக கவர்னர் விளக்கம் அளித்து இருந்தார்.

    ஆனால் கவர்னர் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தனது சர்ச்சை பேச்சுக்காக நேற்று மராட்டிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக மராட்டிய மக்களிடம் இருந்து அதிகளவில் அன்பு கிடைத்தது. ஆனால் அந்த நாளில் (அந்தேரி நிகழ்ச்சியில்) தற்செயலாக இந்த தவறு நடந்துவிட்டது. சில சமூகத்தின் பெருமைகளை பற்றி பேசுகையில் இவ்வாறு கூறி விட்டேன். இது மாநில மக்களை இவ்வளவு புண்படுத்தும் என்று நினைத்து பார்க்கவில்லை.

    இதற்காக மராட்டிய மக்கள் பெருந்தன்மையை காட்டி என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். மராட்டிய மக்கள் பல புனிதர்களின் போதனைகளை பின்பற்றி நடப்பவர்கள் என்பதால், இந்த மாநிலத்தின் பணிவான சேவகனை மன்னிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    மராட்டியம் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றி உள்ளனர். மாநிலங்களை உள்ளடக்கிய மாபெரும் பாரம்பரியம் நமது நாட்டை இந்த முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×