search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எடுக்க தடை: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எடுக்க தடை: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    • ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியை உருவாக்கினார்.
    • பா.ஜனதாவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

    மும்பை :

    கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த மகாராஷ்டிரா அரசியல் சூறாவளியால் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது.

    சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியை உருவாக்கினார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. மேலும் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

    இந்தநிலையில் மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்து, இரு தரப்பினரும் வருகிற 8-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷிண்டே தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, "கட்சி தாவல் தடை சட்டம், கருத்து வேறுபாடுகளுக்கு எதிரான சட்டமாக இருக்க முடியாது. தகுதி நீக்கம் கண்டறியப்படும் வரை, சட்டத்திற்கு புறம்பான செயல் எதுவும் இல்லை" என்று வாதிட்டார்.

    உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வக்கில் கபில் சிபல், "40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் நடத்தை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்படும் நிலையில் உள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களை உண்மையான சிவசேனா என்று எப்படி உரிமை கோர முடியும்?.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் வேறு அரசியல் கட்சியுடன் இணைவதன் மூலம் மட்டுமே அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்" என்றார்.

    தேர்தல் ஆணையமும் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது.

    அனைத்து தரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மகாராஷ்டிரா அரசியல் குழப்பநிலை தொடர்புடைய மனுக்களை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றுவதா?, வேண்டாமா? என்பது குறித்த உத்தரவு வருகிற திங்கட்கிழமை பிறப்பிக்கப்படும்.

    அதுவரை தங்களையே உண்மையான சிவசேனா என அறிவிக்க கோரும் ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீது எந்தவித அவசர நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கக்கூடாது. ஏக்நாத் ஷிண்டேவின் மனுவுக்கு பதிலளிக்க உத்தவ் தாக்கரே தரப்பு அவகாசம் கோரினால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவு ஷிண்டே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    Next Story
    ×