என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது.

    மும்பை :

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது வாடிக்கையாகி விட்ட நிலையில், நாட்டின் நிதி தலைநகராக விளங்கும் மும்பையிலும் காற்றின் தரம் கடந்த சில நாட்களாக மோசமாகி வருகிறது.

    காற்றின் தரம் ஏ.கியூ.ஐ. என்ற அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது. அது 1 முதல் 100 வரையிலான ஏ.கியூ.ஐ. ஆக இருந்தால் நல்லது என்று அர்த்தம். 100 முதல் 200-க்குள் இருந்தால் பரவாயில்லை எனலாம். 200 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 300-க்கும் மேல் இருந்தால் மிகவும் மோசம் என்றும் அளவிடப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியது. அதாவது நகரில் நேற்று காற்றின் தரம் 309 ஏ.கியூ.ஐ. (மிகவும் மோசம்) என்ற அளவில் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் நேற்று டெல்லியில் காற்றின் தரம் 249 ஏ.கியூ.ஐ. (மோசம்) என்ற அளவில் தான் பதிவாகி இருந்தது. இதனால் காற்றின் தரத்தில் மும்பை மாநகரம் தலைநகர் டெல்லியை மிஞ்சி விட்டது.

    நேற்று முன்தினத்தை பொறுத்தவரை மும்பையில் 315 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் காற்றின் தரம் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் டெல்லியில் காற்றின் தரம் 262 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் தான் இருந்தது.

    இதனால் மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள், கடற்கரை சாலை பணிகள், எண்ணில் அடங்காத கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதுபோன்ற காரணங்களால் தான் நகரில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது. இதனால் காற்றில் சேரும் மாசு நகராமல் இருப்பதால், காற்று மாசு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு நகரில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் மும்பையில் காற்றின் தரம் மோசமாக இருப்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது:-

    கட்டுமான பணிகளால் காற்று மாசு அதிகரித்து இருப்பது என்பதை ஏற்க முடியாது. கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடக்கிறது. மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம், ஆர்.சி.எப், எச்.பி.சி.எல். போன்ற நிறுவனங்கள் அதிகளவில் கழிவுகளை வெளியேற்றுகின்றன. அதுதான் காற்று மாசு அதிகரிக்க காரணம். இந்த பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசி உள்ளோம்.

    மும்பையில் சில நாட்களில் ஜி20 மாநாடு கூட்டங்கள் நடக்க உள்ளன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர். எனவே காற்று மாசு பிரச்சினை குறித்து பெட்ரோலிய அமைச்சகத்துடன் பேசி உள்ளோம். இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உதவி கேட்டு சத்தம் போட்டும் யாரும் அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
    • விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரத்தில் தான் உள்ளது.

    மும்பை :

    அவுரங்காபாத்தை சேர்ந்தவர் சுனில் காலே (வயது31). ஜால்னா ரோட்டில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் டீ கேனுடன் கடை அருகில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜவகர்நகர் போலீசார் வாலிபர் மீது மோதிய வாகனத்தை அடையாளம் காண சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வாகனம் மோதி அடிபட்டு சுமார் ½ மணி நேரம் உதவி கிடைக்காமல் ரோட்டில் கிடந்தது தெரியவந்தது.

    கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, வாலிபர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அவர் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த லாரி நிற்காமல் சென்றுவிடுகிறது. லாரி மோதி பலத்த காயமடைந்த வாலிபர் ரோட்டில் விழுந்தார். அவர் உதவி கேட்டு சத்தம் போடுகிறார். ஆனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் யாரும் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முன்வரவில்லை. சாதாரணமாக வாலிபரை கடந்து சென்றனர். சிலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

    இந்தநிலையில் வாலிபர் வேலை பார்த்த டீக்கடை உரிமையாளருக்கு தகவல் கிடைக்கவே அவர் ஓடி வந்து, சுனில் காலேயை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்க்கையில் மனித நேயம் மரித்து போய் விட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

    இதுகுறித்து சுனில் காலேவின் தம்பி அமோல் கூறுகையில், " நான் எனது அண்ணன் மற்றும் பார்வையிழந்த தங்கையுடன் வசித்து வந்தேன். சம்பவத்தன்று நான் ஜல்னா சென்று இருந்தேன். காலை 10.30 மணிக்கு அண்ணன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்தது. வந்து பார்த்த போது அவர் உயிரிழந்துவிட்டார். எனது அண்ணனை உரிய நேரத்தில் கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரத்தில் தான் உள்ளது. யாராவது அவரை விபத்து நடந்தவுடன் ஆஸ்பத்திாியில் சேர்த்து இருந்தால் பிழைத்து இருப்பார்" என வேதனையுடன் தெரிவித்தார்.

    • 2023-ம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகள் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
    • சேப்பாக்கத்தில் மார்ச் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

    மும்பை:

    2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள்போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இலங்கைக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி : ஜனவரி 3, மும்பை

    2-வது டி20 போட்டி : ஜனவரி 5, புனே

    3-வது டி20 போட்டி : ஜனவரி 7, ராஜ்கோட் .

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 10, கவுகாத்தி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 12, கொல்கத்தா

    3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 15, திருவனந்தபுரம் .

    நியூசிலாந்துக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி: ஜனவரி 18 , ஹைதராபாத்

    2-வது டி20 போட்டி: ஜனவரி 21, ராய்பூர்

    3-வது டி20 போட்டி: ஜனவரி 24, இந்தூர்

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 27, ராஞ்சி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 29, லக்னோ

    3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, அகமதாபாத்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்:

    முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்

    2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21,டெல்லி

    3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா

    4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

    முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை

    2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்

    3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை .

    • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நிதி கொள்கைக்குழு கூட்டம் இன்று நடந்தது.
    • வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

    மும்பை:

    ரிசர்வ் வங்கி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதி கொள்கை குழு சீராய்வு கூட்டத்தை நடத்தி வட்டி விகிதம், உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்,

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நிதி கொள்கைக்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கபட்டது.

    இதில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:-

    வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இது உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் வட்டி உயர்த்தப்படுகிறது.

    உலக அளவில் நிச்சயமற்ற பொருளாதார நிலை நிலவி வருகிறது. உணவு பற்றாக்குறை, எரி பொருட்களின் விலை உயர்வு பாதிப்படைய செய்கிறது. நடப்பு ஆண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும்.

    இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகிறது. இருண்ட உலகத்தில் இருந்து பிரகாசமான இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளதை பார்க்க முடிகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்து உள்ளது. உலகளவில் மிக வேகமாக இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டு உள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான தவணை தொகை அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

    வாடிக்கையாளரின் டெபாசிட் தொகைக்கான வட்டியும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 5 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
    • இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    மும்பை:

    டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வத்தை ரசிகர்களிடயே அதிகரிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டது.

    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

    தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.

    பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது.

    இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

    இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன்பின் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.

    • மகாராஷ்டிர வாகனங்கள் மீது கர்நாடகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தி தெரிவித்தார்.

    மும்பை:

    கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி உள்ளது.

    கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஹிரேபாக்வாடி சுங்கச்சாவடி அருகில் கர்நாடக அமைப்பினர் மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி இரு மாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக அரசைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன.

    இந்நிலையில், கர்நாடகாவில் மகாராஷ்டிர வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு துணை முதல் மந்திரி பட்னாவிஸ், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை போனில் தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக துணை முதல்மந்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மையை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஹிரேபாக்வாடி தொடர்பாக பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தியை தெரிவித்தார். அதற்கு கர்நாடக முதல் மந்திரி சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் பட்னாவிசிடம் உறுதி அளித்தார் என தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3.14 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். 


    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    • மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கப், தட்டு, ஸ்ட்ரா, போர்க், ஸ்பூன் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    அதே நேரத்தில் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக மத்திய பிளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

    மாநில அரசின் இந்த முடிவு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை செயலாளர் சதீஷ் தாரடே தெரிவித்தாா்.

    • திருமணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரு மணமகன் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் 36 வயதான இரட்டை சகோதரிகளை மணமகன் திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களான இரட்டை சகோதரிகளின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இருவரும் தாயுடனே வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், மணமக்கள் மற்றும் மணமகன் குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த வினோத திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை மல்ஷிராஸ் தாலுகாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதையடுத்து, வீடியோவின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494வின் கீழ் அக்லுஜ் காவல் நிலையத்தில் மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கணவரோ அல்லது மனைவியோ உயிருடன் இருக்கும்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணமகன் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கவர்னர் இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதி.
    • மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்

    மும்பை :

    மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு மராட்டியத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும் கவர்னருக்கு எதிராக பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே, சாவித்திரிபாய் புலே ஆகியோரை அவமதித்து உள்ளார்.

    மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் துரோகத்தை, சத்ரபதி சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பித்து வந்ததுடன் ஒப்பிட்டு பேசுகிறார். இதுபோன்றவர்கள் தங்கள் பதவியில் தொடர்ந்து வருகின்றனர்.

    கவர்னர் இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதி. எனவே யாரை கவர்னராக நியமிக்க வேண்டும் என வரையறை இருக்க வேண்டும். அது தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மராட்டியத்தையும், அதன் அடையாளங்களையும் அவமதிப்பவர்களுக்கு எதிராக பொது மக்கள் ஒன்று சேர வேண்டும். இதுதொடர்பாக வரும் நாட்களில் அறிவிப்புகளை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியிருப்புக்குள் இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    குடியிருப்புக்குள் இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.
    • பெற்றோர் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

    மும்பை :

    மும்பை மாட்டுங்கா பகுதியில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே சிறுமியின் தாய் அவளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது சிறுமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டாள்.

    கடந்த திங்கட்கிழமை சிறுமியுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டு விழா நடன நிகழ்ச்சி ஒத்திகைக்காக வெளியே சென்று இருந்தனர். வகுப்பறையில் இந்த மாணவி தனியாக இருந்து உள்ளாள். இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியுடன் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அங்கு வந்து உள்ளனர்.

    அந்த மாணவர்கள் 2 பேரும் வகுப்பறையில் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறினர். மேலும் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டி சென்றுள்ளனர்.

    இதனால் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். உடல்நல பாதிப்பை தொடர்ந்து பெற்றோர் கேட்டபோது தான், தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளாள்.

    தங்களது மகள் கூறிய தகவல் பெற்றோரின் தலையில் இடியாக விழுந்தது. அவர்கள் நொறுங்கி போனார்கள்.

    பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட தங்களது மகளுடன் மாட்டுங்கா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த 2 மாணவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கூட்டு பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.

    மும்பையில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவி ஒருவர், உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×