என் மலர்
மகாராஷ்டிரா
- இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொண்டது.
- இதில் ஜெய்ப்பூர் அணி 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இருப்பினும், கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி இறுதியில் 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 2வது முறையாக புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் 130 சதவீத வரவேற்பு கிடைத்துள்ளது.
- புதிய வந்தே பாரத் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.
மும்பை :
கடந்த நவம்பர் மாதம் குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் 16 பெட்டிகளுடன் 1,128 பயணிகள் அமரும் வசதி கொண்டது. காந்திநகரில் இருந்து மும்பைக்கு 5½ மணி நேரத்தில் வந்து சேருகிறது.
மும்பையில் இருந்து காந்திநகருக்கு ஏ.சி. சேர் கார் இருக்கையில் பயணிக்க ரூ.1,275 கட்டணமாகவும், காந்திநகரில் இருந்து மும்பைக்கு ரூ.1,440 ஆகவும் கட்டணம் நிர்ணயக்கப்பட்டு உள்ளது.
அதேபோல மும்பையில் இருந்து காந்திநகருக்கு எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 455 ஆகவும், மறுமார்க்கமாக ரூ.2 ஆயிரத்து 650 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.
2 மாதங்களில் இந்த வந்தே பாரத் ரெயில் பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ரெயில் எண் 20901 மும்பை-காந்திநகர் வந்தே பாரத் ரெயில் டிக்கெட் மூலம் ரூ.4 கோடியே 49 லட்சமும், 20902 எண் கொண்ட காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் ரூ.4 கோடியே 72 லட்சமும் கிடைத்து உள்ளது. மொத்த வருவாய் ரூ.9 கோடியே 21 லட்சம் ஆகும்.
கடந்த அக்டோபர் மாதம் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ.8 கோடியே 25 லட்சம் வருவாய் ஈட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் 130 சதவீத வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த ரெயிலின் சேவையால் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கப்படும் மற்ற ரெயில்களின் சேவை பாதிக்கப்படவில்லை. புதிய வந்தே பாரத் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் மற்ற ரெயில்களும் 100 சதவீத பயணிகளுடன் இயங்குகிறது" என்றார்.
- புரோ கபடி லீக் அரையிறுதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வென்றது.
- முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 49-29 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேபோல், இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது அரையிறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியிடம் 39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன், புனேரி பால்டன் அணி மோதுகிறது.
- இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி தோல்வி.
- இரண்டாவது போட்டியில் யுபி யோத்தாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்.
மும்பை:
புரோ கபடி 9-வது லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடுகின்றன. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று மும்பையில் நடைபெற்றன.

இதில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி, 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
இரண்டாவதாக நடைபெற்ற பிளே ஆப் சுற்று போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
இதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- மாணவர்கள் ராய்காட் மாவட்டம் கோபோலி பகுதியில் உள்ள தண்ணீர் பூங்கா மற்றும் கேளிக்கை பூங்காவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
- கோபோலி பகுதியில் மும்பை-புனே விரைவு சாலையில் மலைப் பகுதியில் இறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடத் தொடங்கியது.
மும்பை:
தெற்கு மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் மயங்க் என்ற பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மயங்க் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 10-ம் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.
அதன்படி அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் ராய்காட் மாவட்டம் கோபோலி பகுதியில் உள்ள தண்ணீர் பூங்கா மற்றும் கேளிக்கை பூங்காவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
இதற்காக சுற்றுலா பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பஸ்சில் 48 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 52 பேர் பயணம் செய்தனர்.
அவர்கள் கோபோலி பகுதியில் உள்ள தண்ணீர் பூங்கா மற்றும் கேளிக்கை பூங்காவுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.
சுற்றுலாவை முடித்துக்கொண்ட அவர்கள் பின்னர் கோபோலி பகுதியில் இருந்து அதே பஸ்சில் செம்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இரவு 8 மணியளவில் கோபோலி பகுதியில் மும்பை-புனே விரைவு சாலையில் மலைப்பகுதியில் இறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடத் தொடங்கியது.
தறிகெட்டு ஓடிய பஸ் சாலையிலேயே தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் ஹித்திகா தீபக் கண்ணா, ராஜ் மகாத்ரே ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருக்கு தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும் உள்ளூர் பொதுமக்களும் அங்கு குவிந்தனர். உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் போலீசார், காயம் அடைந்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் லோனாவாலா, கோபோலி மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு.
- அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து பாஜகவினர் போராட்டம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா பூலே ஆகியோர் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அரசு மானியம் கோரவில்லை என்று தெரிவித்திருந்தார். தமது பேச்சின்போது பிச்சை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது சர்ச்சையானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் அமைச்சர் மீது ஒருவர், கருப்பு மையை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து மகாராஷ்டிரா பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் போராட்டக்காரர்களைக் கொண்டு தன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டதாக கூறி 3 அதிகாரிகள் உள்பட 10 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை அதிகாரி அங்குஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 187 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா கடைசி ஓவரில் 187 ரன் எடுத்ததால் சமனில் முடிந்தது.
மும்பை:
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனி 82 ரன்னும், மெக்ராத் 70 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடினார். அவர் 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 26 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 13 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சர் உள்பட 20 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
- முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
- அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை:
இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி சட்டோகிராமில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- 2017ம் ஆண்டு நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடியால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, 2017ம் ஆண்டு நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
1,575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. இதனிடையே, நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடியால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில முதல்வர், மாநில கவர்னர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை போன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நாக்பூர்-ஷீரடி இடையே முதல்கட்ட மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- நாக்பூர் மெட்ரோவின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
மராட்டிய மாநிலத்தின் 2-வது தலைநகரமான நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.
விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் நாக்பூர்-ஷீரடி இடையே முதல்கட்ட மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நாக்பூர் மெட்ரோவின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாக்பூர் மெட்ரோவின் ஃப்ரீடம் பார்க் நிலையத்தில் பிரதமர் தனது பயணச் சீட்டை வாங்கினார். பின்னர், நாக்பூர் மெட்ரோவில் ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
- பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை.
- பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.
மும்பை:
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய கல்வி சங்கம் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது
சங்கராச்சாரியார், ரிஷிகள் போன்ற துறவிகளின் போதனைகளால் இந்தியா தற்போதும் உயிர்ப்புடன் நிலைத்து நிற்கிறது. இந்திய நாகரிகம் பழமையானது மட்டுமல்ல, சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது, அது தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பல்கலைக்கழக நியமன விவகாரத்தில் கேரள அரசின் தலையீடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆரிப் முகமதுகான் கூறியுள்ளதாவது: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றமே சமீபத்தில் தெரிவித்து உள்ளது.
அப்படியிருக்க இந்த பிரச்சினையில் கேரள அரசு எப்படி தலையிட முடியும்? தங்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். பல்கலைக்கழகம் பொது பட்டியலில் உள்ளது. பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அப்படியிருக்கும் போது மாநில அரசு எப்படி ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியும்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மத்திய அரசின் முக்கிய மைல்கல் திட்டமாக இது இருக்கும் என கருதப்படுகிறது.
- ரத்த குறைபாடுகளைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைக்கிறார்.
பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய ஒற்றை சுகாதார நிறுவனம் அமைக்கப்படுகிறது.
மனிதர்களைத் தாக்கும் அறியப்படாத நோய்களைக் கண்டறிவதுடன், அதனைக் கட்டுப்படுத்துவதிலும், இந்த நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தும். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிறுவனம் சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் முக்கிய மைல்கல் திட்டமாக இருக்கும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ரத்த சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சரி செய்வது தொடர்பாக நாக்பூரில் அமைக்கப்படும் மத்திய ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அதிகமாக இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையிலும் இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவர், அத்துறையின் செயலாளர் டாக்டர் ராஜீவ் பால் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.






