என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • 15-வது நூற்றாண்டில் ஆட்சி செய்ய மன்னர் அகமது நிஜாம் ஷா நினைவாக பெயர் சூட்டப்படிருந்தது.
    • ஏற்கனவே இரண்டு நகரங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இவர் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சௌண்டி என்ற இடத்தில் நடைபெற்ற 18-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அஹில்யாதேவி ஹோல்கரின் 298-வது பிறந்த நாள் தின விழாவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, ''நம்முடைய அரசு சத்ரபதி சிவாஜி மற்றும் அஹில்யாதேவி ஹோல்கர் ஆகியோர் அமைத்த ஆட்சியின் இலட்சியத்தை மனதில் கொண்டு அரசு செயல்படுகிறது. எனவே, உங்கள் அனைவரின் விருப்பத்தின்படி, அகமதுநகர் என இருந்த மாவட்டத்தின் பெயரை அஹில்யாதேவி ஹோல்கர் என மாற்ற முடிவு செய்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

    ஏற்கனவே, துணை முதல்வரான தேவேந்திர பட்நாவிஸ், அகமதுநகர் என்றிருக்கும் நகரின் பெயரை அஹில்யாநகர் என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் ஷிண்டே இதை அறிவித்துள்ளார்.

    15-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அகமது நிஜாம் ஷா நினைவாக அகமதுநகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அகமது நகர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரான புனேயில் இருந்து சுமார் 120 கி.மீட்டர் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

    இந்தூர் மாநிலத்தை 18-வது நூற்றாண்டில் அஹில்யாதேவி ஹோல்கர் ஆட்சி செய்துள்ளார். அதன்காரணமாக தற்போது ஷிண்டே அரசு பெயர் மாற்றுக்கிறது.

    ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநில அரசு ஔரங்காபாத், ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நாடு தழுவிய வேலையின்மை விகிதம் தற்போது 7.45 சதவீதமாக உள்ளது.
    • ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மும்பை :

    ரிசர்வ் வங்கி சமீபத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மும்பை வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியும், கொள்கையும் அனைத்து அலைகளையும் தாங்கி நிற்கும் படகை உருவாக்க வேண்டும். அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

    கொடுமை என்னவென்றால் அரசு தனது தவறுகளை சரிசெய்து அனைத்து மக்களுக்குமான ஆட்சியை செய்ய முயற்சி எடுக்கவில்லை.

    ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தியது மற்றும் அதை திரும்ப பெற்றது இந்திய பணத்தின் மீதான நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2022-23-ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் வளர்ச்சி சதவீதம் முறையே 13.2, 6.3 மற்றும் 4.4 என சரிவை நோக்கி செல்கிறது. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த சராசரி 9 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டுவது தற்போதைய நிலையில் வெகு தொலையில் உள்ளது.

    அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், தொடர் பணவீக்கத்தால் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தடுமாற்றத்தில் இருக்கும் நலத்திட்டப்பணிகள் குறித்து மிக கடுமையான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. நாடு தழுவிய வேலையின்மை விகிதம் தற்போது 7.45 சதவீதமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் நுகர்வு குறைந்துள்ளது.

    அதுமட்டும் இன்றி பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அரசின் அச்சுறுத்தல் மற்றும் வழக்குகள் மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இயற்கை நீதிக்கு பதிலாக தற்போது புல்டோசர் நீதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

    ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகம் மற்றும் வாபஸ் நடவடிக்கை நமது பணத்தின் நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மை மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

    அவரின் கருத்து குறித்து மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் ப.சிதம்பரத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    பண மதிப்பிழப்பு, மத்திய வங்கியின் முடிவு போன்றவை குறித்து அனுமானத்தை வெளியிடுவது முன்னாள் நிதி மந்திரிக்கு அழகு அல்ல. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தது. அந்த ஆட்சிகாலத்தில் பெரும்பகுதி ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்துள்ளார். நாங்கள் பாராளுமன்றத்தில் அவரிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளோம். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. நாம் அனைவரும் நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும். அவர் தான் வகித்த பொறுப்புக்கு ஏற்றவாறு கருத்துகளை வெளியிடுவது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம்.
    • இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில்.

    மும்பை :

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாராட்டி திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

    இந்தி நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நமது அரசியல் அமைப்பை நிலைநிறுத்தும், மகத்தான நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒருதாய் மக்களின் பன்முகத்தன்மையை பாதுகாப்பவர்களுக்கு என்ன ஒரு அற்புதமான வீடு!. மகிமையான இந்தியா என்ற பழைய கனவுடன் புதிய இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம். ஜெய் ஹிந்த். எனது பாராளுமன்றம், எனது பெருமை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் அவர் அதே பதிவில் ஆடியோ மூலம், "உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம். ஜனநாயகத்தின் ஆன்மா புதிய வீட்டில் வலுவாக இருக்கவும், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை பல யுகங்களுக்கு தொடர்ந்து வளர்க்கவும் எனது உருக்கமான பிரார்த்தனைகள்" என கூறியுள்ளார்.

    நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்தின் புகழ்பெற்ற புதிய கட்டிடத்தை பார்த்து பெருமை அடைகிறேன். இது என்றும் இந்தியாவின் வளர்ச்சி கதையில் சின்னமாக இருக்க வேண்டும். டெல்லியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இருப்பதை கவனித்து இருக்கிறேன். இன்று இந்த புத்தம் புதிய பிரமாண்ட கட்டிடத்தை பார்க்கும் போது என் இருதயம் பெருமிதம் கொள்கிறது. இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். இது புதிய இந்தியாவின் சின்னம். இந்தியா கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் மட்டும் முன்னோடியாக இல்லாமல், வளர்ச்சி மூலம் உலகத்திலும் முன்னோக்கி செல்கிறது. இந்த நாளை சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இந்தியா வரும் ஆண்டுகளில் மேலும் வளர கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து பெருமிதமாக கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக்கான், அக்ஷய் குமார் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அவர் டுவிட்டரில் 2 பேரின் கருத்தையும் பாராட்டி பதில் அளித்து உள்ளார்.

    • மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர்கள் சட்டம் ஒழுங்கை மீறியதாக போலீசார் கைது செய்தனர்.

    மும்பை :

    இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் முன்னாள் தலைவர் பிரிஷ் பூஷன் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை போலீசார் சட்டம் ஒழுங்கை மீறியதாக கைது செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகம் தான் வீரர்கள் மீது இந்த அத்துமீறலை மேற்கொள்ள அனுமதி வழங்கியதா?. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்படி இழிவாக நடத்தப்படுவதை கண்டு நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். விளையாட்டுகளின் மூலம் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் நீதிக்காக இதுபோன்ற போராட்டங்களை நடத்த நிர்ப்பந்திக்கப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. அனைவராலும் பாராட்டப்பட்ட வெற்றியாளர்கள் திடீரென தங்களுக்கு நீதி கேட்கும்போது வில்லன்களாகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறுகையில், "மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அவர்களே, எங்கள் பெண் மல்யுத்த வீரர்கள், அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பாருங்கள். நீங்கள் இந்தியாவின் பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி, இவர்களை பாதுகாப்பதும், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதும் உங்களின் கடமையல்லவா. இதை விட்டுவிட்டு ராகுல் காந்தி தொடர்பான பிரச்சினைகளில் மட்டுமே நீங்கள் பேசுவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
    • அதன்பின் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் தான் விளையாடும் கடைசி தொடர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ராயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர். மும்பை மற்றும் சென்னை என்று 2 சிறந்த அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள்.

    இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,329 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 28.29 ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 127.29 ஆக உள்ளது. அவருடைய அதிகபட்ச ரன்களாக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்துள்ளார்.

    • சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் உயர்வு இந்தியாவின் உயர்வுதான்.
    • நோய்வாய்ப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எங்களிடம் மருந்து இல்லை.

    மும்பை :

    பிரதமர் மோடி சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அடுத்த மாதம் அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜப்பானில் ஹிரோசிமாவில் சமீபத்தில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம் இருந்து ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.

    மேலும் பிரதமர் மோடிக்காக வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்துக்கு பாஸ்களை வழங்க முடியாமல் திணறுவதாக கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய பிரதமர் நரேந்திர மோடியை பாஸ் என்று அழைக்கிறார். பப்புவா நியூ கினியா மற்றும் பிஜி போன்ற நாடுகள் அவருக்கு மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளை வழங்குகின்றன.

    எங்கள் தலைவர் தற்போது உலக தலைவராகி விட்டார். இதற்காக சிலர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி இருந்தாலும், அவர்கள் வேதனையில் மனம் குமுறுவதாக தெரிகிறது.

    எப்படி பார்த்தாலும் பிரதமர் மோடி உலக தலைவராகிவிட்டார். ஆனால் நோய்வாய்ப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எங்களிடம் மருந்து இல்லை.

    சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் உயர்வு இந்தியாவின் உயர்வுதான். ஆனால் நாட்டில் சிலர் இதை பார்க்க தவறி விடுகிறார்கள்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒருமுறை சரத்பவாருக்கு எதிராக உச்சரித்த வார்த்தைகளை என்னால் இங்கு கூற முடியாது. அதேபோல உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இப்போது அவர் பேசிய வீடியோக்கள் தற்போது மீண்டும் பரப்பப்படுகின்றன.

    பிரதமர் மோடியை எதிர்க்க மட்டுமே அவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். ஆனால் மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற ஜனநாயகத்தை காக்க போராட வேண்டிய நேரம் இது.
    • டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

    மும்பை :

    டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.

    இதையடுத்து அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் உள்ள சிவில் சர்வீசஸ் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா அல்லாத கட்சி தலைவர்களை சந்தித்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், 2 நாள் பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் மும்பை வந்தனர். நேற்று முன்தினம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேயை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    அப்போது மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு தனது கட்சி துணை நிற்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சரத்பவார் உறுதியளித்தார். இதையடுத்து சரத்பவாருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

    பின்னர் சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், "டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக போராடும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எங்களது கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா அல்லாத அனைத்து கட்சிகளும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை. பாராளுமன்ற ஜனநாயகத்தை காக்க போராட வேண்டிய நேரம் இது" என்றார்.

    • எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
    • இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை என பட்னாவிஸ் கூறி உள்ளார்.

    மும்பை:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை. புதிய பாராளுமன்ற கட்டிடம் நாட்டின் பெருமை. திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கூறுபவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை. மோடி மீதான வெறுப்பு காய்ச்சலால் எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டமைக்கப்பட்டு நாட்டின் பலத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிரியரின் முயற்சியால் பழங்குடியின குழந்தைகள் பலர் ஆரம்ப கல்வி பெற்றனர்.
    • ஆசிரியர் கிராம மக்களின் குடும்பத்தில் ஒருவர் ஆனார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகா காஸ்பாடா பழங்குடியின கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அஜித் கோனத் (வயது35). புனேயில் பிறந்து வளர்ந்த இவர் 14 ஆண்டுகளுக்கு முன் காஸ்பாடா ஜில்லா பரிஷத் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நகர் பகுதியில் வளர்ந்த அவருக்கு கிராம வாழ்க்கை புதிதாக இருந்தது.

    குறிப்பாக அங்குள்ள மக்கள் கல்வியில் பின்தங்கி இருந்ததை பார்த்து மிகவும் வருத்தப்பட்டார். எனவே அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த வரை சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி செய்தார். ஆசிரியரின் முயற்சியால் பழங்குடியின குழந்தைகள் பலர் ஆரம்ப கல்வி பெற்றனர். கல்வியோடு இல்லாமல் ஆசிரியர் அஜித் கோனத் மாணவர்களை கலை, விளையாட்டிலும் ஊக்கப்படுத்தினார். அவர் மாணவர்களை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்து சென்றார். இதன் காரணமாக கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி மக்களின் மனதிலும் ஆசிரியர் இடம் பிடித்தார். மேலும் ஆசிரியர் கிராம மக்களின் குடும்பத்தில் ஒருவர் ஆனார்.

    இந்தநிலையில் சமீபத்தில் ஆசிரியர் அஜித் கோனத் கிராமத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் காஸ்பாடா கிராமத்தில் இருந்து பிரியா விடை பெற்றார். அப்போது 14 ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு கல்வி செல்வம் அளித்த ஆசிரியரை ஊரே திரண்டு வழி அனுப்பி வைத்தனர். ஆசிரியரை பாராட்டி 'எங்கள் ஆதர்ஷ ஆசிரியர், எங்களின் பெருமை' என பேனர் வைத்தனர். மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர் தூவியும் நன்றி தெரிவித்தனர்.

    ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைவாத்தியமும் இசைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கிராம மக்களின் அன்பை நினைத்து ஆசிரியர் கண்ணீர் விட்டு அழுதார்.

    பணியிட மாற்றலாகி செல்லும் ஆசிரியருக்கு ஒட்டு மொத்த கிராமமே திரண்டு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மும்பை :

    மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் முல்லுண்டு பகுதியில் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை மஜ்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 34 வயது பெண்ணை ஒரு ஆண்டு தேவ்னாரில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் ஒழுக்ககேடாக எதையும் செய்யவில்லை என கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.பாட்டீல், "பெண்ணை ஒரு ஆண்டு காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார்.

    மேலும் உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

    சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே தவறு செய்தார் என்பதற்காக, அவர் மீண்டும் அதே தவறை செய்து இருப்பார் என போலீசார் பிடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர். அவர் வேலை செய்ய உரிமை இருக்கிறது. சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல. பொது இடங்களில் பாலியல் தொழில் செய்து, அதனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் தான் குற்றம் என கூற முடியும்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பொது இடத்தில் பாலியல் தொழில் செய்தார் என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்த சூழலில் ஏற்கனவே நடந்ததை வைத்து பெண்ணை பிடித்து காப்பகத்தில் அடைத்து வைத்து இருப்பது சரியல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய் வேண்டும். பெண்ணை அவரது விருப்பத்துக்கு மாறாக காப்பகத்தில் அடைத்து வைப்பது, அவர் நாடு முழுவதும் சென்று வரும் உரிமைக்கு தடையாக இருக்கும். சட்டப்படியும், பெண்ணின் வயதின்படியும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண்ணை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • புதிய உறுப்பினர்களை சேர்த்தால், தற்போதைய அமைச்சர்களுக்கு அது நிவாரணமாக இருக்கும்.
    • இரு அவைகளையும் கையாள்வது தற்போதைய பலத்துடன் மிகவும் கடினமாக உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் வரும் ஜூன் 2 ம் தேதி நடைபெறும் என சிவசேனா தலைவர் பாரத் கோகவலே நேற்று தெரிவித்தார். தனக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    புதிய உறுப்பினர்களை சேர்த்தால், தற்போதைய அமைச்சர்களுக்கு அது நிவாரணமாக இருக்கும் என்றும் கூட்டத்தொடரின் போது  தற்போதைய பலத்துடன் இரு அவைகளையும் கையாள்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் கூறினார்..

    மற்றொரு சிவசேனா எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக்கும் செய்தியாளர்களிடம் கூறுகையில், " இப்போது அனைத்து தடைகளும் அகற்றப்பட்டதால் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்" என்றார்.

    • மகாராஷ்டிராவில் அரசு பஸ்சும்- கண்டெய்னர் லாரியும் மோதி கொண்டன.
    • காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் மும்பை நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசு பஸ்சும்- கண்டெய்னர் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

    10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×