என் மலர்tooltip icon

    கேரளா

    • சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர்.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கட்டிலப்பூவம், மடக்கத்தாரா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பன்றிகள் திடீரென அடுத்தடுத்து இறந்தன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதித்து பன்றிகள் இறந்தது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து நோய் பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர். அங்கு கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதி தொற்று மண்டலமாகவும், 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பாதித்த பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சி விற்பனை, பன்றி இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.
    • 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

    கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோய்க்கு இறந்து விட்ட நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்துள்ளான்.

    கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத்-ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது பள்ளியின் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது முதல் அமீபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வாந்தி மற்றும் தலைவ லியால் அவதிப்பட்ட அவனை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிருதுல் பரிதாபமாக இறந்தான். கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆவணி மாத தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும்.
    • சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயம் சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்த வர்களே நடத்தி வரு கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.

    தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியாக கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு மகேஷ் மோகனரு ஆகி யோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள். இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளார்.

    அவருக்கு பதிலாக புதிய தந்திரியாக அவரது மகனான கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட உள்ளார். ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ந்தேதி சிங்க மாதம் தொடங்குகிறது.

    சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. அன்று சபரிமலை கோவில் தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் மாலை அவரது முன்னிலையிலேயே சபரிமலை அய்யப்பன் கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளார்.

    தந்திரி பொறுப்பில் இருந்து விலகினாலும், சபரிமலை விழாக்களில் கண்டரரு ராஜீவரு பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய தந்திரியாக பொறுப்பேற்க உள்ள கண்டரரு பிரம்மதத்தன் தனது எட்டாவது வயதில் பூஜைகள் பற்றி படிக்க தொடங்கி இருக்கிறார். சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜோவானா 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
    • தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அடிமாலி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா (வயது 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று முன்தினம் இரவு ஜோவானா, தனது வீட்டில் 'நூடுல்ஸ்' உணவு சாப்பிட்டு கொண்டிருந்தாள். அப்போது தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோவானா பரிதாபமாக இறந்தாள்.

    • சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.

    திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.

    பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்றார்.

    அப்போது அவர் தனது ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து பார்க்கும் போது ஆட்டோவில் பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்கள்.
    • புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளையும் நவீன மயமாக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய காவல் துறையை நவீனப்படுத்த அனைத்து மாநிலங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    அதன்படி கேரள மாநிலத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களும் `ஸ்மார்ட்' போலீஸ் நிலையங்களாக மாற்றப்பட உள்ளன. நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 போலீஸ் நிலையங்களை முன்னிலைப்படுத்தி இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு நவீனமாக்கும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதற்காக அந்த போலீஸ் நிலையங்கள் அனைத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் அங்கு நவீன தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற போலீசார் நியமிக்கப்படுகிறார்கள்.

    இங்கு பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்களை சமாளித்தல், செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில்நுட்பம்) உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு நெறிமுறைகள், முகத்தை அடையாளம் காணுதல் மற்றும் வீடியோ காட்சிகளை பகுப்பாய்வு செய்தல் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    • மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    • பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது கருவண்ணூர் கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் கடந்த 2010-ம் ஆண்டு கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வங்கியில் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அநத மோசடி தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி நடந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடன் பெற்று பணம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. பணம் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்கள்-குழு உறுப்பினர்கள் மற்றும் வங்கியை நிர்வகிக்கும் நபர்களின் அறிவுறுத்தலின்பேரில் வங்கி மேலாளரால் முகவர்கள் மூலம் ரொக்கமாக பலருக்கு கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மந்திரி சபையில் இருந்த தற்போதைய எம்.எல்.ஏ., கவுன்சிலர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

    வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

    இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவற்றில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குகளும், திருச்சூர் மாவட்ட குழுவின் நிலையான வைப்பு கணக்குகளும், மேலும் 3 வங்கிகளில் கட்சியின் சேமிப்பு கணக்குகளும் அடங்கும்.

    பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது. இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.29கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக பல நபர்களின் வங்கி கணக்குள் மற்றும் அசையா சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.87.85 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கருவண்ணூர் கூட்டுறவு வங்கி பணம் மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.
    • சுகாதா ரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் விசாரணையில் இறங்கி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத்பாசில். தமிழில் கமல்ஹாசனின் விக்ரம்-2, உதயநிதியின் மாமன்னன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    இவர் மலையாளத்தில் புதிதாக பைங்கிளி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி தாலுகா மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதில் தான் தற்போது பிரச்சனை வெடித்துள்ளது.

    படப்பிடிப்பின் போது அங்கிருந்த நோயாளிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், டாக்டர்கள் சிகிச்சையில் இருக்கும் போதே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், உடல்நல பாதிப்புடன் வந்தவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக செய்திகளும் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து கேரள மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணையில் இறங்கி உள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு, 7 நாட்களுக்குள் எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி, அங்கமாலி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையில் சம்பவம் குறித்து மாநில சுகாதா ரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் விசாரணையில் இறங்கி உள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநரிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்.
    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    மழை காலத்தில் மாணவ-மாணவிகள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இரவு முழுவதும் மழை பெய்து காலையிலும் அது தொடரும் என்ற பட்சத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும்.

    காலநிலைக்கு தகுந்தாற்போல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்கள். காலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யும் போது விடுமுறை அறிவிப்பும் காலையில் தான் வெளியிடப்படும்.

    விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மழை பெய்வதை பார்த்து இன்று பள்ளிக்கு விடுமுறையா? இல்லாயா? என்று கலெக்டரின் முகநூல் பக்கத்தில் மாணவ -மாணவிகள் நேரடியாக கேள்வி கேட்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது.

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்த வரும் நிலையில், சில மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், நிலைமைக்கு தகுந்தவாறு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் தான், பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் இன்றைக்கு பள்ளி விடுமுறையா? இல்லையா? என்று நேரடியாக கேள்வி கேட்டி ருக்கின்றனர். ஏராளமானோர் கலெக்டரிடம் அந்த கேள்வியை கேட்டனர்.

    மாணவ-மாணவிகள் அந்த கேள்விக்கு கலெக்டரும் பதில் தெரிவித்து பதிவு வெளியிட்டார். அவரது பதிவில் "விடுமுறை இல்லையே, பிள்ளைகள் சீக்கிரம் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார். பள்ளி மாணவர்களின் கேள்விக்கு கலெக்டர் அளித்திருக்கும் பதில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கலெக்டரின் இந்த பதிவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் "லைக்" செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே அங்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவியது. அதிலும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் என பல வகையான காய்ச்சல்கள் அதிகளவில் பரவியது. மேலும் அரியவகை காய்ச்சலான நைல் காய்ச்சலும் சிலரை பாதித்தது.

    இந்நிலையில் பருவமழை பெய்ய தொடங்கியதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவல் கேரளாவில் மேலும் அதிகரித்திருக்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த ஜூன் மாதத்தில் எலிக்காயச்சலால் 253 பேரும், டெங்கு காய்ச்சலால் 1,912 பேரும், மஞ்சள் காமாளையால் 500 பேரும், எச் 1 என் 1 தொற்றால் 275பேரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எலி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், மஞ்சள் காமாலைக்கு 5 பேரும், எச் 1 என் 1 தொற்றுக்கு 3 பேரும் இறந்துள்ளனர்.

    இந்த மாதத்தில் நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 684 பேர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 81 ஆயிரத்து 127 பேருக்கு காய்ச்சல் பாதித்துள்ளது. அதிலும் நேற்று ஒரு நாளில் 10 ஆயிரத்து 914 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 186 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை என பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதால் கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மழை தீவிரம் அடையும் போது நோய்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன.
    • சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எர்ணாகுளம் - டாடா நகர் விரைவு ரயில் இன்று காலை கேரளா மாநிலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பிரதான பகுதியில் இருந்து பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன. இந்த சம்பவமானது காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் எஞ்ஜில் இருந்து மூன்றாவது பெட்டி விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பிரிந்து நின்ற பெட்டிகளை சரி செய்து எஞ்சினுடன் இணைத்ததால் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த போது ரயில் மெதுவாக நகர்ந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்த காயமும் எற்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறினர். ரயில் எஞ்ஜினில் இருந்து பிரிந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×