என் மலர்
கர்நாடகா
- பெங்களூருவில் போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமா கைது.
- போலீஸ் சோதனையின் போது, ஆந்திரா, கர்நாடக திரை உலகினர் பங்கேற்றது தெரியவந்தது.
பெங்களூரு புறநகர் பகுதியில் சிங்கேனா அக்ரஹாராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் கடந்த மே 20 மாலை 'சன்செட் டு சன்ரைஸ் விக்டரி' என்ற தலைப்பில் நடந்த ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.
இந்த பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவலறிந்து அங்கு சென்ற கர்நாடக காவல்துறையினர், எம்.டி.எம்.ஏ, கோகைன், ஹைட்ரோ கஞ்சா மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுகிறது
இந்நிலையில் போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நபரிடமும் நுழைவுக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரவது கேட்டால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ரேவ் பார்ட்டிகளை பொறுத்துக் கொள்ளாது என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.
இந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக, தெலுங்கு நடிகை ஹேமாவிடம் கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த ரேவ் பார்ட்டிக்கு செல்லவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட போதை பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நடிகை ஹேமாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளளுமன்ற தொகுதிகள் உள்ளன.
- அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக கடந்த ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
அதாவது முதல்கட்ட தேர்தல் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்பட தென் கர்நாடகத்தில் அமைந்திருக்கும் 14 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தல் சிவமொக்கா உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கும் நடந்தது. இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 474 வேட்பாளர்கள் உள்ளனர்.
இதில் முக்கியமான தலைவர்களான முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும், ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவியிலும், குமாரசாமி மண்டியாவிலும், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரிலும் போட்டியில் உள்ளனர். இவர்கள் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள்.
மைசூரு தொகுதியில் மன்னர் யதுவீர் உடையார் பா.ஜனதா சார்பில் களத்தில் உள்ளார். பா.ஜனதா தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
ஆபாச வீடியோ வெளியாகி அரசியலில் புயலை கிளப்பிய பிரஜ்வல் ரேவண்ணா பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கர்நாடகத்தில் 28 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
பெங்களூரு வடக்கு தொகுதி-விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள புனித ஜோசப் இன்டியன் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு மத்தி-மவுண்ட் கார்மல் பி.யூ.கல்லூரி, பெங்களூரு தெற்கு-ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ.கல்லூரி, சிக்பள்ளாப்பூர்-தேவனஹள்ளி நாகராஜா என்ஜினீயரிங் கல்லூரி, கோலார்-கோலார் அரசு முதல் நிலை கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதுபோல் துமகூரு, மண்டியா, மைசூரு , சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், சிக்கோடி தொகுதி, பெலகாவி, விஜயாப்புரா, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே , சிவமொக்கா, உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா , சித்ரதுர்கா ஆகிய தொகுதி களுக்கு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.
யாதகிரி மாவட்டம் சுராப்புரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் யாதகிரி அரசு பி.யூ.கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறு வதால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட உள்ளது.
- காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புபில் தகவல்.
- எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம்.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதற்கான தேர்தல் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
வரும் 4ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில், நேற்று கருத்துக் கணிப்பு வெளியானது.
இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறின.
ஆனால், எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம் என உறுதியாக இருந்தேன். 135ல் வென்றோம்.
அதே போல இப்போதும் சொல்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும்" என்றார்.
- நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
- பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதற்கிடையே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
இன்று 2-வது நாளாக பெங்களூரு, குடகு, ஹாசன் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. யஷ்வந்த்பூர், வசந்தநகர், சாந்தி நகர், ஹெப்பாலா, சதாசிவநகர், ராஜாஜிநகர், விஜயநகர், பனசங்கர், மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது .
பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள நெலமங்களா பகுதியிலும், பீன்யா, தாசரஹள்ளி, பாகல்குண்டே, ஷெட்டி ஹள்ளி மல்லசந்திரா உள்ளிட்ட பல இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் மொத்தம் 28 தாலுகாக்களில் மலைகளில் இருந்து பாறைகள் பெயர்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இது தொடர்பாக பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறையில் 32 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணியாளர்கள் உடனடியாக 18 இடங்களில் மரங்களை அகற்றினர்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் 6 மாவட்டங்களில் பருவமழை பேரிடர்களை தடுக்க வருவாய் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறையின், பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
- வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
- பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பி வந்ததும் அவரை கைது செய்து கடந்த 31-ந்தேதி முதல் 6 நாட்கள் வரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு அரண்மனைசாலையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு அவரிடம் பலாத்கார வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் எழுப்பினர். அப்போது அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்கிறேன் என அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இன்று 3-வது நாளாக போலீசார் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா? என கேள்வி கேட்டனர். அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா புகார் அளித்த பெண் யாரென்று எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்ததில்லை. நான் பெங்களூர், ஹாசன், டெல்லியில் இருக்கிறேன். அவர் யாரென்று தெரியவில்லை என்றார்.
உங்களது மற்ற செல்போன்கள் எங்கே? என கேட்டபோது நான் பயன்படுத்தும் செல்போன் இப்போது உங்களிடம் உள்ளது. அதை தவிர வேறு செல்போன் இல்லை. மற்றொரு செல்போன் தொலைந்து போயிருக்கலாம். நான் அந்த செல்போனை பயன்படு த்தவில்லை.
மேலும் அரசியல் சதி காரணமாக என் மீது பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் எந்த தவறும் செய்யவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு பலாத்கார புகாருக்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் பிரஜ்வல் கோரிக்கை விடுத்தார்.
மேலும் சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை வெளியிட்டு அரசியல் கட்சியினர் விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோக்களின் பின்னணியில் இருக்கும் கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலை தெரியவரும் என பிரஜ்வல் கூறியதாக தெரிகிறது.
அவர் கூறியபடி கார்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பெண்கள் பலத்காரம் செய்யப்பட்ட ஹாசன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று ஆதராங்களை திரட்ட உள்ளனர்.
முதல் நாள் விசாரணையில் எதிர்ப்பார்த்தபடி பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாட்கள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் குற்றம் நடந்த இடமான ஹாசனுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- தொலைந்து செல்போன் மூலம் வீடியோக்களை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றன.
- IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். ஹசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியானது. பல பெண்களுடன் பிரஜ்வல் இருப்பது போன்ற ஏராளமான வீடியோ கிளிப் அதில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்களை வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் 3 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர்.
இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாணைக்குழு அமைத்தது. இதற்கிடையே பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.
கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நேற்று அதிகாலை பெங்களூரு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் அவரை வருகிற 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பிரஜ்வலை ஆண்மை பரிசோதனைக்கு உட்பட்டதாக தகவல் வெளியானது.
பெண்கள் உடன் இருக்கும் வீடியோவை அவரது செல்போன் மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என சிஐடி நம்புகிறது. இதனால் அவரது செல்போனை கண்டுபிடித்தால் மேலும் பல தகவல்களை பெற முடியும் என நினைக்கிறது.
ஆனால் பிரஜ்வல் செல்போன் கடந்த வருடமே தொலைந்து விட்டதாம். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்ததுள்ளார்.
இதனால் புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்தில் செல்போன் குறித்த தகவலை எஸ்ஐடி கேட்டுள்ளது. அவர்கள் செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க முயற்சி செய்ய தீர்மானித்துள்ளது.
ஒருவேளை போன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், போனை பிரஜ்வால் அழித்து இருக்கலாம் என்று நம்பும் நிலை ஏற்படும். அப்படி இருந்தால், ஆதாரங்களை சேதப்படுத்துதல் என்ற கூடுதல் குற்றச்சாட்டை பிரஜ்வல் மீது பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை சிறப்பு புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா தனக்கு சோர்வாக இருப்பதாகவும், தூங்க வேண்டும் என கூறி சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் அதிகாரிகள் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் உள்ள 2 செல்போன்களை கேட்டுள்ளனர். ஆனால் தன்னிடம் இருந்த ஒரு செல்போனை மட்டும் கொடுத்துள்ளார். இன்னொரு செல்போன் பற்றி அதிகாரிகள் கேட்ட போது, அது எனது உதவியாளர் செல்போன் என கூறியுள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள், ஒலேநரசிப்புரா போலீசில் பாலியல் புகார் அளித்த பெண் பற்றி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த பெண் யார் என்று எனக்கு தெரியாது. எங்கள் வீட்டில் நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்றார்.
இவ்வாறு பிரஜ்வல் ரேவண்ணா அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
- நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) தற்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.
ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அதன் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை உள்ளிளட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். இதையடுத்து கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. நோட்டீஸ் அனுப்பியும் ஜெர்மனியில் இருந்து அவர் திரும்பி வரவில்லை.
இதனால் அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்ைட ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெர்மனி முனிச் நகரிலிருந்து புறப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, குடியேற்ற அதிகாரிகள் உதவியுடன் பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.
இதையடுத்து சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு பிறகு பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பிரஜ்வல் ரேவண்ணா பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் 4-வது மாடியில் உள்ள 42-வது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு (ஏசிஎம்எம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி கே.என்சிவகுமாரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.க்கு வருகிற 6-ந்தேதி வரை 6 நாட்கள் எஸ்ஐடி காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து அவரை சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார், பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யிடம் பாலியல் வழக்கு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர். போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீசு அனுப்பியும் நீங்கள் ஏன் கண்டுகொள்ள வில்லை?, விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என யாராவது சொன்னார்கள்? பெண்களை கடத்தி பாலியல் பலத்காரம் செய்தீர்களா?, ஆபாச வீடியோ எடுத்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார்? பாலியல் பலாத்காரம் பென்டிரைவில் பதிவேற்றம் செய்தது யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தெரிவக்க பிரஜ்வல் ரேவண்ணா நேரத்தை கடத்தி வருகிறார். அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்களை மதிக்காமல் மிரட்டி பலாத்காரம் செய்த பிரஜ்வலுக்கு பெண் சக்தியையும், அதிகாரத்தையும், உணர்த்தும் விதத்தில் பெண் அதிகாரிகளை வைத்தே அவரை கைது செய்துள்ளோம்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் சொல்லும் பதிலை பொறுத்து ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படும். விசாரணை முடிந்ததும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. கடந்த 4-ந்தேதி இரவில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆள் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.
- கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி அவற்றை வீடியோ பதிவு செய்து மிரட்டிய வழக்கில் கர்நாடகாவின் ஹசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சி எம்.பி-பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது கர்நாடகா போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளிவந்ததுமே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய போலீஸார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்த மைசூரு, கே.ஆர்.நகரை சேர்ந்த பெண் கடத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பெண் கடத்தல் வழக்கில், எச்.டி. ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தயாரான பவானி ரேவண்ணாவும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- கர்நாடகா மற்றும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக விசாரணைக்கு ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்திருந்தார்.
- இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்தடைந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். கர்நாடகா மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்தியா திரும்பி விசாரணையை எதிர்கொள்வேன் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு வந்து இறங்கியதும் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- இந்த சடங்குகள் எனக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா அரசுக்கு எதிராக நடத்தப்படுகிறது.
- 21 சிகப்பு நிற ஆடுகள், மூன்ற எருமை மாடுகள், 21 கருப்பு ஆடுகள், ஐந்து பன்றிகள் ஆகிவற்றை இந்த செய்வினை சடங்கிற்காக பலி கொடுத்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அகோரியை வைத்து தனக்கு எதிராக சிறப்பு பில்லி சூனியம் வைப்பதற்கான சிறப்பு பூஜை நடத்தப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் என டி.கே. சிவக்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
கேரள மாநிலம் ராஜராஜேஸ்வரி கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் அகோரிகள் மூலம் பில்லி சூனியம் வைப்பதற்கான சிறப்பு சடங்குகள் செய்யப்படுகிறது.
இந்த சடங்குகள் எனக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா அரசுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுததான். இந்த சடங்கு ராஜ கன்டகா மற்றும மரண மோகன ஸ்டம்பானா என அழைக்கப்படுகிறது.
அகோரிகள் 21 சிகப்பு நிற ஆடுகள், மூன்ற எருமை மாடுகள், 21 கருப்பு ஆடுகள், ஐந்து பன்றிகள் ஆகிவற்றை இந்த செய்வினை சடங்கிற்காக பலி கொடுத்துள்ளனர்.
இந்த சடங்குகளை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து அவர்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் நான் கவலைப்பட மாட்டேன். அது அவர்களுடைய நம்பிக்கை முறை. தீங்கு விளைவிக்கும் அவர்களின் முயற்சிகள் மற்றும் சோதனைகள் இருந்தபோதிலும், நான் நம்பும் சக்தி என்னைக் காப்பாற்றும். நான் ஒவ்வொரு நாளும் மக்கள் பணி செய்ய செல்லும்போது கடவுளை பிரார்த்தனை செய்வேன்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இவர் சொல்லுவதை பார்க்கும்போது மாந்திரீக சினிமா படக்கதை போன்று உள்ளது.
- உணவகத்தின் உணவு தயாரிப்பு நடைமுறைகளில் இருந்த பல சிக்கல்களை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவர் மன்னிப்பு கேட்கிறாரா? இல்லை எச்சரிக்கை விடுக்கிறரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உணவகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று மீண்டும் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில், 100 கிலோ காலாவதியான உளுத்தம் பருப்பு, 10 கிலோ காலாவதியான தயிர், 8 லிட்டர் காலாவதியான பால் உட்பட உணவகத்தின் உணவு தயாரிப்பு நடைமுறைகளில் இருந்த பல சிக்கல்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, ராமேஸ்வரம் கஃபேயின் இணை நிறுவனர் ராகவேந்திர ராவ் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நாங்கள் சிறிய தவறுகளை செய்துள்ளோம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேவையான மாற்றங்களை செய்கிறோம். மேலும் சிறந்த தயாரிப்பை வழங்க, சிறந்த பொருட்களை எப்போதும் பயன்படுத்துகிறோம். நாங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம் என்பதை ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ராமேஸ்வரம் கஃபேயின் இணை நிறுவனர் ராகவேந்திர ராவ்-வின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவர் மன்னிப்பு கேட்கிறாரா? இல்லை எச்சரிக்கை விடுக்கிறரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு பயனர், இது மன்னிப்பு கேட்பது போல் இல்லை. நான் ராமேஸ்வரம் கஃபே-யின் ஆதரவாளராகவும், வாடிக்கையாளராகவும் இருந்தேன். ஆனால் அவர்கள் தோசைக்கு கிட்டத்தட்ட ரூ.200 வசூலித்தனர். மோசமான, காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பதை தவிர வேறில்லை என கூறியுள்ளார். மற்றொருவர், இது மன்னிப்பா அல்லது எச்சரிக்கையா? பாடி லாங்குவேஜ் வேறு விதமாக இருக்கிறது. இதைப் பார்த்த பிறகு அங்கு செல்லவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
Video message from #RameshwaramCafe owner, after the news came out that the food inspection team found out expired products in their Madhapur branch kitchen.
— Vamsi Kaka (@vamsikaka) May 26, 2024
What are your thoughts?? #FoodSafety pic.twitter.com/r5E1rGRlib






