என் மலர்
குஜராத்
- 41,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி.
- கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து முயற்சி.
சூரத்:
நாட்டின் 75வது சுதந்திர கொண்டாட்ட பெருவிழாவின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளாவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் சூரத் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் , கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது.
இதன் விளைவாக, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவ்வாறு, மாவட்டம் முழுவதும் 41,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சூரத்தில் இன்று இயற்கை விவசாயிகள் பங்கேற்கும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அதுதொடர்பான அனைத்து பிரதிநிதிகளின் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் குஜராத் ஆளுநர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் இன்று காலை காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.
- குஜராத்தில் அடுத்த நான்கு நாட்கள் மேலும் தீவிரமாக மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு பாகிஸ்தான் நிலவும் குறைந்த காற்றழுத்தம் மற்றும் தொடர்புடைய சூறாவளி சுழற்சி காரணமாக, தென்மேற்கு பருவமழை தற்போது குஜராத் மாநிலம் முழுவதும் தீவிரமாக உள்ளது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் அடுத்த நான்கு நாட்கள் மேலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Gujarat: Locals rescue people after their school bus overturned as it got stuck in a turbulent flow of water triggered by heavy rainfall in Kalavad in Jamnagar district pic.twitter.com/k3gEiooWUh
— ANI (@ANI) July 7, 2022
இதற்கிடையே ஜாம்நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தினுள் இருந்தவர்களை அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு பின் கயிறு கட்டி மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் மஸ்கா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுகிறது.
- ஆன்லைன் வசதி மூலம் பல காகிதப் பரிவர்த்தனைகளை இந்தியா நீக்கியுள்ளது.
காந்தி நகர்:
புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல் இந்தியா ஜெனிசிஸ் மற்றும் இந்தியா ஸ்டேக். குளோபல் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார் என்னுடைய திட்டம் மற்றும் என்னுடைய அடையாளம் என்ற இணைய தளத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுவதாக பெருமையுடன் நாம் கூறமுடியும் என்று அவர் தெரிவித்தார். இதில் குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளதாக பிரதமர் பாராட்டினார்.
பிறப்பு சான்றிதழ் பெறுவது, ரசீது தொகை செலுத்துதல், மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை ஆன் லைன் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் இந்த சேவைகள் சாதாரண மக்களும் மிகவும் எளிதில் அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை மூலம் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பிற்குமேல் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தியா இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
- இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது.
போர்பந்தர்:
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை தாங்கினார். ராணுவம் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்துள்ளது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் 4 ஹெலிகாப்டர்கள் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு ஆகிய துறைகளில் கடலோர காவல்படை சுயசார்பை அடைந்ததை இது எடுத்துக்காட்டுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- குற்ற வழக்குகளில் தடயவியல் விசாரணையை கட்டாயமாக்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுகிறது.
- ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்லூரியை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும்.
கெவாடியா:
குஜராத் மாநிலம் கெவாடியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா தலைமை தாங்கினார்.
தடய அறிவியல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல்பூர்வ புலனாய்வு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை கையாளும் இத்தருணத்தில் அவர்களுக்கு ஒருபடி மேலாக புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டும். குற்றங்களை கண்டறிய தொழில்நுட்பம் மற்றும் ஆதாரம் அடிப்படையிலான புலனாய்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
ஆறு ஆண்டுகளுக்கும் கூடுதலான சிறைத்தண்டனையுடன் கூடிய அனைத்து குற்ற வழக்குகளிலும் தடயவியல் விசாரணையை கட்டாயமாக்கும் நோக்கில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தடய அறிவியல் துறையில் பயிற்சி அளிப்பதற்காக தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்லூரியை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் புகை சூழ்ந்தது.
- 13 பச்சிளங்குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 75 பேர் மீட்டு மொட்டை மாடிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பரிமல் கார்டன் பகுதியில் ஒரு 4 மாடி கட்டிடம் உள்ளது. இதன் 4-வது தளத்தில் ஒரு குழந்தைகள் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 20 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தால் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் புகை சூழ்ந்தது.
இந்நிலையில் அங்கிருந்து 13 பச்சிளங்குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 75 பேர் மீட்டு மொட்டை மாடிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள எலும்புமூட்டு சிகிச்சைப் பிரிவில் தீப்பற்றியதாகவும், அது முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
- அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பனஸ்கந்தா:
குஜராத் மாநிலத்தில் புதிய மாற்றமாக தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.
குஜராத் அரசின் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநிலம் முழுவதும் 2018-19 ஆண்டில் 33,822மாணவர்களும், 2019-20 ஆண்டில் 31,382 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு இடமாறியுள்ளனர்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் 2,969 தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், இந்த ஆண்டு, ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளின் தரம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுவது, உணவு, டிஜிட்டல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள், பெற்றோரை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றுவதற்கு தூண்டியது என்று, உத்தம்புரா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலேஷ் தக்கர் கூறியுள்ளார்.
அகமதாபாத் நகரில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில், 40,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021-22 கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் உள்ள 32,000க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 61,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹராமி நல்லாவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பாகிஸ்தான் அத்துமீறி நுழைவதும், இந்திய பாதுகாப்பு படைகளை பார்த்ததும் தப்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கட்ச் கடற்பகுதியில் உள்ள ஹராமி நல்லா பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் சிலர் 9 படகுகளில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அங்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வருவதை பார்த்ததும் 3 படகுகளை விட்டுவிட்டு பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் தப்பி சென்றனர்.
அவர்களை தேடும் பணியில் இந்திய படையினர் ஈடுபட்டனர். இதில் 2 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்கள் பாகிஸ்தானின் ஜீரோ பாயிண்ட் கிராமத்தை சேர்ந்த சதா ஹூசன், அலி பக்ஷா என்பது தெரிய வந்தது.
பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்ய துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகி விட்டதாகவும், இரண்டு பேருக்கும் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹராமி நல்லாவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதிக்குள் பாகிஸ்தான் அத்துமீறி நுழைவதும், இந்திய பாதுகாப்பு படைகளை பார்த்ததும் தப்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
- ருஷிகேஷ் படேல் சாதாரண அறிகுறிகள் உணர்ந்ததை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல்.
குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், அவர் தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ருஷிகேஷ் படேல் சாதாரண அறிகுறிகள் உணர்ந்ததை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், படேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து படேல் கூறுகையில், " நான் தற்போது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறனே். என்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களையும் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
- எனது அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்த அனைத்து தடைகளையும் அகற்றி உள்ளது.
- பெண்கள் தற்போது அவர்கள் விரும்பிய துறைகளை தேர்வு செய்ய முடியும்.
வடோதரா:
இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பிரதமர், நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
குஜராத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மத்திய அரசும்,மாநில அரசும் இரட்டை இஞ்ஜின் போல்செயல்பட்டு வருகிறது. தற்போது ராணுவம் முதல் சுரங்க தொழில்கள் என அனைத்திலும் பெண்களின் நலத்தை கருத்தில் கொண்டே கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன.
21 நூற்றாண்டில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைவதற்கு பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும்.இதன்மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். எனது அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்த அனைத்து தடைகளையும் அகற்றி உள்ளது. இதனால் தற்போது அவர்கள் விரும்பிய துறைகளை தேர்வு செய்ய முடியும். இதற்கான அனைத்து கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
- பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1.38 லட்சம் வீடுகளை பிரதமர் இன்று அர்ப்பணிக்கிறார்.
வதோதரா:
பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1.38 லட்சம் வீடுகளை பிரதமர் இன்று அர்ப்பணிக்கிறார். பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இதனிடையே பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், இன்று தனது வாழ்வின் 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் தனது தாயாரான ஹீராபென்னின் பிறந்தநாளையொட்டி, காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.
இதனிடையே, ராய்சான் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு மோடியின் தாயார் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக காந்தி நகர் மேயர் ஹிதேஷ் மக்வானா தெரிவித்திருந்தார்.
- முதலில் விளையாடிய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 55 ரன்கள் குவித்தார்.
- தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக வான்டர் டுசன் 20 ரன்கள் அடித்தார்.
ராஜ்கோட்:
இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த நிலையில் 4-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கெய்க்வாட் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 27 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னுடன் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியினர் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
தொடக்க வீரர் டி காக் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் பவுமா 8 ரன்னுடன் வெளியேற, டுவைன் பிரிட்டோரியஸ் டக் அவுட்டானார். அதிகபட்சமாக வான்டர் டுசன் 20 ரன்கள் அடித்தார்.
16.5 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அவேஷ்கான் 4 விக்கெட்களையும், சாஹல் 2 விக்கெட்டும், ஹர்சல் படேல், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்
இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன.






