என் மலர்tooltip icon

    டெல்லி

    • இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டெல்லியில் ஒரு ஓட்டலில் பரிமாறப்பட்ட தோசையில் 8 கரப்பான்பூச்சிகள் இருந்ததாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இஷானி என்ற அந்த பெண் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு கடந்த 7-ந்தேதி சென்றுள்ளார். அங்கு பிளைன் தோசை ஆர்டர் செய்த அவருக்கு சிறிது நேரத்தில் தோசை பரிமாறி உள்ளனர். அதில், பல கரும்புள்ளிகள் இருப்பதையும், அவை கரப்பான் பூச்சிகள் என்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இஷானியும், அவரது தோழியும் தோசையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை வீடியோ எடுத்துள்ளனர்.

    இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவை எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து இஷானி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் ஓட்டல்களில் தங்களுக்கு நேர்ந்த உணவு அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


    • கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
    • இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    3-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    அந்த அணியில் பேட்டிங்கில் மெக் லானிங் (4 அரைசதம் உள்பட 308 ரன்கள்), ஷபாலி வர்மா (265 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (235 ரன்), அலிஸ் கேப்சியும் (230 ரன்), பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் மரிஜானா காப் (11 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெஸ் ஜோசசென் (11 விக்கெட்), ராதா யாதவ் (10 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டேவும் (தலா 8 விக்கெட்) அசத்தி வருகிறார்கள்.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடம் பிடித்தது. எலிமினேட்டர் சுற்றில் 5 ரன் வித்தியாத்தில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் நடப்பு தொடரில் அதிக ரன் குவித்தவரான ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி (2 அரைசதத்துடன் 312 ரன்கள்) ஜொலித்து வருகிறார். கேப்டன் மந்தனா (269 ரன்), ரிச்சா கோஷ் (240 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆஷா சோபனா (10 விக்கெட்), ஸ்ரேயங்கா பட்டீல், சோபி மோலினெக்ஸ் (தலா 9 விக்கெட்) வலுசேர்க்கிறார்கள்.

    கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

    • செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
    • கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை முறியடித்தது.

    புதுடெல்லி:

    அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வந்து அந்த கப்பல்களை கடத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் மால்டா நாட்டில் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்தக் கப்பலை அவர்கள் தங்களது கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கடற்கரையிலிருந்து 2,800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உடனே இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் முயற்சியில் கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டன.

    சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இந்திய ஹெலிகாப்டர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கப்பலை மீட்கும் பணி சுமார் 40 மணி நேரம் நிகழ்ந்தது. சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. சுற்றி வளைக்கப்பட்டதால் கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையில் சரணடைந்தனர். கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    கப்பல் ஊழியர்கள் 17 பேரை மீட்டனர். இவர்கள் 100-நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். எம்.வி.ரூயென் கப்பல் தற்போது முழுமையாக இந்திய கடற்படை வசம் உள்ளது.

    இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டோ விவேக் மத்லால் கூறுகையில், கடந்த 40 மணி நேரத்தில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் உள்ளிட்டவைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட னர். 17 ஊழியர்கள் எந்த வித காயமுமின்றி மீட்கப்பட்ட னர். கப்பலில் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

    • 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.


    நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படவில்லை.

    ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாராளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அனந்த்நாக் தொகுதியில் மே 7 -ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதியில் மே 13-ம் தேதியும், பாரமுல்லா தொகுதியில் மே 20-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் 42.58 லட்சம் பெண்கள் மற்றும் 161 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 86.93 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.

    • சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன்
    • பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

    பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

    பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, "சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அவர் பதிலளித்துள்ளார்.

    பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிஆர்எஸ் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவை வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய 11 மாநில சட்டசபை தேர்தல்களில் 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்தோம்.
    • போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, இமாசல பிரதேசம், குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி உள்ளோம்.

    கடந்த இரு ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தியுள்ளோம். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,400 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.

    சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். போலி செய்தி பரப்பக் கூடாது. போலியான தகவல்கள் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக் கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

    மேலும் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா இங்கே. 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி உள்ளோம். நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் செல்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
    • வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.

    இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது.

    இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து நேற்று காலை பதவியேற்று கொண்டனர். முன்னதாக அவர்களை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வரவேற்றார்.

    இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையில் அது தொடர்பாக புதிய இரு தேர்தல் கமிஷனர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற தேர்தல் இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

    அத்துடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று மதியம் 3 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அதில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டத்திலேயே ஒரே கட்டமாக தமிழ்நாடில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    2ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும்.

    3ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் மேம் 7ம் தேதி நடைபெறுகிறது.

    4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது.

    5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடைபெறுகிறது.

    6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது.

    மக்களவை தேர்தல் முடிவு ஜூன் 4ம் அறிவிக்கப்படுகிறது.

    மேலும், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி முதல் தொடங்குகிறது.

    வேட்புமனு கடைசி நாள் மார்ச் 27ம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி அன்று நடைபெறுகிறது.

    வேட்பு மனு வாபஸ் மார்ச் 30ம் தேதி நடைபெறுகிறது.

    • அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்.
    • ஒருவரது பொது வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது.

    புதுடெல்லி:

    17-வது பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி முடிவடைகிறது.

    இதனால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு கட்சிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தி கருத்துகளை கேட்டறிந்தார். மாநில தேர்தல் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இறுதி கட்ட ஆலோசனை நடந்தது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து ஏற்கனவே முடிவு செய்த நிலையில் அது தொடர்பாக 2 தேர்தல் கமிஷனர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் தேதி அட்டவணை தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு ஒப்புதல் அளித்தனர்.


    இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, மதம் இனம், மொழி உள்ளிட்ட மனக்கசப்பு ஏற்படுத்தும் விஷயங்களை, மக்களை பிளவுபடுத்தும் விஷயங்களை பேசக்கூடாது. அதனால் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவரது பொது வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது.

    ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவு தரக்கூடாது. சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வீட்டின் முன்னால் பிரசார கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது. அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.

    கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த இடங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தக்கூடாது.

    ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பரிசு வழங்குவது தேர்தல் நடத்தை விதிப்படி குற்றமாகும். வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வேட்பாளர்கள் பணம் கொடுக்க கூடாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வாக்காளர்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. தனிப்பட்ட நபரின் நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.

    ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் கிழிக்கவோ, அகற்றவோ கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீசிடம் தகவல் அளிக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.

    ஊர்வலத்துக்கு அனுமதி பெற்றிருந்தால் அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக்கூடாது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களின் உருவ பொம்மைகளை எரிக்க கூடாது.

    அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்படும்.

    அரசு கட்டிடங்களில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்படும். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவியை ஒப்படைக்க வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும். அனைத்து மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நிலைக்குழுக்கள், பணியாற்றுவதற்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும்.

    அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்பான சின்னங்கள், வாசகங்கள் மறைக்கப்படும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அழிக்கப்படும். அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றப்படும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். தனி நபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் குறைதீர்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படும்.

    பறக்கும் படை சோதனையின் போது குறிப்பிட்ட அளவு பணத்துக்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். வங்கி பணபரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்.

    இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

    இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. இதில் 96 கோடி பேர் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் ஆவர், இவர்களில் ஆண் வாக்காளர்கள் 49 கோடி பேர். பெண் வாக்காளர்கள் 47 கோடி பேர் ஆவர். இவர்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம்.
    • மக்களவை தேர்தலுக்கு 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் தேர்தலை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தலை நேர்மையாக நடத்துவோம்.

    மக்களவை தேர்தலை நடத்த குழு அளவில் தயாராக உள்ளோம். ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தேர்வு போன்று தான்.

    அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மக்கள் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தோம்.

    அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்கான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவது என்பது மிகப் பெரிய சவால்.

    மக்களவை தேர்தலுக்கு 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1.82 கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 20.5 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர்.

    16 குடியரசு தலைவர், துணை தலைவர் தேர்தல்களை நடத்தி உள்ளோம். 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம்.

    வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் அரசியல் கட்சியினரிடமும் ஆலோசனை நடத்தினோம்.

    1000 ஆண் வாக்காளர்களுக்கு, 947 பெண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 49.7 கோடி ஆண் வாக்களர்கள் உள்ளனர்.

    100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    மக்களவை தேர்தலில் 55 லட்சம் மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தேர்தல் தொடர்பான விவரங்களை வாக்காளர்கள் செயலி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

    2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தங்களின் வேட்பாளர் குறித்து விபரங்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் தெரியப்படுத்த வேண்டும்.

    KYC செயலியில் வேட்பாளர் பற்றிய பிரமாண பத்திரங்கள கிடைக்கும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்படும்.

    எல்லைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். புகார் அளிக்க மக்கள் செயலிகளை பயன்படுத்தலாம்.

    தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

    அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில தேர்தல்களில் 3,400 கோடி பணம் சிக்கியது.

    சூரிய மறைவுக்கு பிறகு வங்கி வாகனங்களில் பண நடமாட்டம் கூடாது. தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்க கூடாது.

    தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×