என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சிறுமி மஞ்சுளாவின் உடலை தேடி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிஜனபள்ளி மண்டலம், மங்கனூருவை சேர்ந்தவர் சரபண்டா. இவரது மனைவி லலிதா.

    தம்பதியின் குழந்தைகள் மகாலட்சுமி (வயது 5). சரிதா (4), மஞ்சுளா (3) மற்றும் மரு கொண்டையா (7 மாத குழந்தை).

    கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரபண்டா மனைவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த லலிதா நேற்று காலை பிஜன பள்ளி போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த லலிதா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு தனது குழந்தைகளை அழைத்துச் சென்றார். பின்னர் கல்வ குர்தி என்ற இடத்தில் செல்லும் பாசன கால்வாய் சென்றார்.

    அங்கு தனது குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கால்வாயில் தள்ளினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதுகுறித்து போலீசார் மட்டும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    லலிதா அங்கிருந்து தப்பிச் சென்றார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பாசன கால்வாயில் இருந்து மருகொண்டா மகாலட்சுமி, சரிதா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். சிறுமி மஞ்சுளாவின் பிணத்தை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் முதலில் வருவது (இந்த மாதம்) வருடாந்திர பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை நடப்பது நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆகும். நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.

    நாளை (திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணியில் இருந்து 5.30 மணி வரை தங்கத் திருச்சி உற்சவம், மாலை 6.15 மணியில் இருந்து 6.30 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரியசேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    19-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சின்ன சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதி உலா.

    20-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா.

    21-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா.

    22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை பல்லக்கு உற்சவத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை தொடங்குகிறது.

    23-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை தங்கத்தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை யானை வாகன வீதிஉலா.

    24-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதி உலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா.

    25-ந்தேதி காலை 6.55 மணியளவில் தேர்த்திருவிழா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா.

    26-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணி வரை பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி உற்சவம், காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை திருமஞ்சனம் மற்றும் சக்கர ஸ்நானம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள ஒரே ஒரு தளத்தில் மட்டும் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    வார இறுதி நாட்களான வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனால் பக்தர்கள் நாள் முழுவதும் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    ஆனால் நேற்றும், இன்றும் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு குறைந்துள்ளது. வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள ஒரே ஒரு தளத்தில் மட்டும் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர்.

    ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் நேர ஒதுக்கீட்டு முறையில் இலவச தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். கூட்டம் குறைந்து பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 62,357 பேர் தரிசனம் செய்தனர். 23,570 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    • ஆந்திராவின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என பேசினார்.
    • நாளை சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண், பிரபல சினிமா நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் சந்தித்தனர்.

    இந் நிலையில் ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் சிறைத்துறை அதிகாரிகளிலும் அனுமதி கேட்டு மனு அளித்து உள்ளார்.

    அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆந்திரா சென்று ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆந்திராவின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என பேசினார்.

    இதேபோல் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்ட பிறகு அவரது மகன் லோகேஷுக்கு போன் செய்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

    இதற்கு அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்தார். ரோஜாவுக்கு தெலுங்குதேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நாளை சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று காலை ஜெயிலுக்கு சென்றார். அதிகாரிகள் கணவரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுத்தனர்.

    வாரத்தில் 3 நாட்கள் மனைவி கணவரை சந்திக்கலாம் என விதி உள்ளது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் வேண்டும் என்று எனக்கு அனுமதி மறுத்தனர் என புவனேஸ்வரி தெரிவித்தார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களும் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
    • கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார்.

    பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு வருவதாக புராணங்கள் கூறுகிறது.

    இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர்.

    பிரமோற்சவ நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், வாகன சேவைகள் நடைபெற உள்ளன. அப்போது 9 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

    கருட சேவை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிவார்கள். அப்போது பக்தர்கள் நெரிசல் இன்றி எளிதில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    கருட சேவையின் போது 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

    திருப்பதி பிரமோற்சவ விழாவை வெட்டி ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    • டபுள் டக்கர் பஸ்சை இயக்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும்.
    • பஸ் நிர்வகிப்பது மற்றும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ 2 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மின்சார ஏ.சி. வாங்கப்பட்டு உள்ளது.

    மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், பொதுமக்களுக்கு அதிக சத்தம் ஏற்படுத்தி இடையூறு வராத வகையில் இந்த பஸ் வாங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிர்வகிப்பது மற்றும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.

    டபுள் டக்கர் பஸ்சை இயக்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும். ஆனால் திருப்பதியில் டபுள் டக்கர் பஸ் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என கூறப்படுகிறது.

    சீனிவாச சேது பாலம் மாஸ்டர் பிளான் சாலைகளில் மட்டுமே இந்த பஸ் இயக்க முடியும்.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி காளஹஸ்தி இடையே செல்லும் டவுன் பஸ்களை திருப்பதி நகருக்குள் திருப்பிவிட பல்வேறு முயற்சிகள் நடந்தது ஆனால் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.

    திருப்பதி நகர பகுதிக்குள் சாதாரண பஸ்களையே இயக்க முடியாத நிலையில் டபுள் டக்கர் பஸ் எப்படி இயக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் டபுள் டக்கர் பஸ்ஸை ஆந்திரா போக்குவரத்து கழகத்திடம் 2,3 நாட்களில் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

    • தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.
    • தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் புதிய டீக்கடை ஒன்றை திறந்து உள்ளது.

    இந்த டீக்கடையில் டீ மாஸ்டர், பணியாளர்கள் கிடையாது.

    கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்தால் போதும் தங்களுக்கு விருப்பமான டீயை வாங்கி குடிக்கலாம்.

    மேலும் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.

    நவீன தொழில்நுட்பத்திலான டீக்கடையை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கமலாகர், மேயர் சுனில் ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் கூறுகையில், தற்போது டீ மாஸ்டர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    மேலும் டீ மாஸ்டர்கள் அதிக அளவில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.

    தற்போது ஆந்திரா தெலுங்கானாவில் ஒரே சமயத்தில் 600 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

    • சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினியின் கருத்துக்கு ஆந்திர மந்திரியும், நடிகையுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • மக்கள் நலனுக்கு சிறை சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சரியாக இருக்கும்.

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் திட்டப் பணிகளில் 371 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு மீது 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த சி.ஐ.டி. போலீசார் கடந்த 9-ந் தேதியன்று சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜ மகேந்திரவரம் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஆந்திராவில் பதட்டம் நிலவியது.

    இதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதுபோல சந்திரபாபு நாயுடுவும் தனக்கு ஜாமின் வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதுகுறித்து நீதிமன்றம் வருகிற 19-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷை தொலைபேசி யில் தொடர்பு கண்டு பேசினார்.

    அவரிடம் ரஜினி பேசும் போது, 'எனது நண்பர் சந்திரபாபு நாயுடு மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் சிறந்த போராளி. இந்த பொய் வழக்குகளும் சட்ட விரோத கைதுகளும் அவரை ஒன்றும் செய்யாது. நீங்கள் தைரியமாக இருங்கள். எனது அருமை நண்பர் தவறு செய்திருக்க மாட்டார். அவரது நற்செயல்களும் தன்னலம் அற்ற பொது சேவையும் அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினியின் கருத்துக்கு ஆந்திர மந்திரியும், நடிகையுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் ரஜினியின் மரியாதைதான் குறையும்.

    மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என எண்ணியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலனுக்கு சிறை சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சரியாக இருக்கும்.

    ஆனால் திருடர்களுக்கு ரஜினி ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரபாபு நாயுடு நல்லவர் என்று அவர் சொன்னால் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால் மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார். என்.டி.ஆர். நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு ஆந்திராவில் எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என சரமாரியாக ரஜினியை கண்டித்து ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த சம்பவம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் சினிமா துறையில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
    • மேம்பாலம் கட்ட ஒரு கோடி ஒதுக்கீடு செய்தும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் மீஞ்சி புட் மண்டலம், தும்மிடி புட் மலை கிராமத்தில் 550 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லை.

    இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி பானு (வயது 10). இவர் கடந்த 11-ந் தேதி உடல்நல குறைவால் இறந்தார்.

    மலை கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றைக் கடந்து சிறுமியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 4 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

    3 நாட்களாக வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். நேற்று ஓரளவு ஆற்றில் வெள்ளம் குறைந்தது. சிறுமின் உடலை சுமந்து சென்று ஆற்று வெள்ளத்தை கடந்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிறுமி உடலை அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் :-

    தும்முடி புட்-லட்சுமிபுரம் இடையே செல்லும் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

    கடந்த தேர்தலின்போது தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளவர் ஆட்சிக்கு வந்தவுடன் மேம்பாலம் கட்டி தருவதாக உறுதி அளித்தார் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேம்பாலம் கட்ட ஒரு கோடி ஒதுக்கீடு செய்தும் பாலம் கட்டும் பணி கிடப்பில் போட்டுள்ளனர்.

    முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை குறித்த நேரத்திற்கு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாததால் உயிர் இழப்புக்கள் ஏற்படுகிறது என்றனர்.

    • வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது.
    • நடைபாதை அருகே சிறுத்தை சுற்றி திரியும் இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் நடந்து சென்றார். லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

    இதையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. வன விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பக்தர்களுக்கு கம்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நடைபாதைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் 3 சிறுத்தைகளும், அலிபிரி நடைபாதையில் 2 சிறுத்தைகளும் சுற்றித் திரிவது தெரிய வந்தது.

    நடைபாதை அருகே சிறுத்தை சுற்றி திரியும் இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

    வன விலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாப்பது குறித்து நேற்று திருப்பதி தேவஸ்தானத்தில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் டோரடூனை சேர்ந்த இந்திய வனவிலங்கு நிறுவனம், இயற்கைகளுக்கான உலகளாவிய நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள புலிகள் பாதுகாப்பு சங்கம், மாநில வனத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு சில இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் வன விலங்குகளிடம் இருந்து பக்தர்களை முழுமையாக பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அவரது கட்சி நிர்வாகிகள் முக்கிய நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜெயிலில் அவரது உயிருக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

    இதனால் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலுக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்க அனுமதிக்க வேண்டுமென சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சிறப்பு கோட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அவரது கட்சி நிர்வாகிகள் முக்கிய நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

    தெலுங்கு தேசம் கட்சியை சார்பில் நேற்று பந்த் நடந்தது. இதனையடுத்து எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேலாக வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

    • தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    • 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி இன்று காலை நடந்தது.

    பரிமளம் என்னும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் சன்னதி, கொடிமரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன.

    கோவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதேபோல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

    வரும் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் சமேதராக ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்கள் பழங்கள் கொண்டு அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவிலில் வெளிப்புறத்தில் வண்ண வண்ண மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 66,199 பேர் தரிசனம் செய்தனர். 29,351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×