என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்தது: விரைவில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள ஒரே ஒரு தளத்தில் மட்டும் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
வார இறுதி நாட்களான வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனால் பக்தர்கள் நாள் முழுவதும் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஆனால் நேற்றும், இன்றும் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு குறைந்துள்ளது. வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள ஒரே ஒரு தளத்தில் மட்டும் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர்.
ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் நேர ஒதுக்கீட்டு முறையில் இலவச தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். கூட்டம் குறைந்து பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 62,357 பேர் தரிசனம் செய்தனர். 23,570 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.






