என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
    • நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன்களை வழங்குவதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு, திருப்பதியில் தினமும் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் சர்வ தரிசன (எஸ்.எஸ்.டி) டோக்கன்களை வழங்குவதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    எனவே, திருப்பதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 7, 8, 14, 15 ஆகிய தேதிகளில் இந்த டோக்கன்கள் வழங்கப்படாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    • திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • பிடிபட்ட 2 பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்சுமி நிவாசம் என்ற விருந்தினர் மாளிகை உள்ளது. தரிசனத்திற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் இந்த விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமி நிவாசம் விருந்தினர் மாளிகைக்குள் 8 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட விருந்தினர் மாளிகை ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தார்.

    அதே நேரத்தில் பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாலாஜி நாயுடு சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தார்.

    பிடிபட்ட 2 பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராஜிபாளையம் பகுதியில் அழுக்கான கிழிந்த ஆடைகளை அணிந்த 2 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் பெரிய சாக்கு மூட்டைகளை தோளில் சுமந்தபடி சென்றனர்.

    இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    மேலும் பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் 2 வாலிபர்களும் அங்கிருந்து மூட்டைகளுடன் ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்த போது அதில் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வாலிபர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    அவர்களை நெல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அழுக்கான கிழிந்த ஆடைகளுடன் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர்கள் போல் சென்று அவர்கள் குழந்தைகளை கடத்தி சென்றது தெரியவந்தது.

    குறிப்பாக தெருவில் விளையாடும் குழந்தைகளை மயக்க மருந்து தெளித்தும் கைக்குட்டையில் மயக்க பவுடர் வைத்து அதன் மூலமும் மயங்க செய்து சாக்கு மூட்டையில் கட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் இதுவரை 2 குழந்தைகளையும் மற்றொருவர் 10 குழந்தைகளையும் கடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

    கடத்தப்பட்ட குழந்தைகளை நெல்லூர் காவாலி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் வைத்து கடத்தல் கும்பல் தலைவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர். அதற்கு ரூ.5 ஆயிரம் முதல் பணம் வாங்கியுள்ளனர்.

    பணத்திற்கு பதிலாக மது பாட்டில்களையும் வாங்கியுள்ளனர்.

    இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் எங்கு உள்ளார்கள்? குழந்தைகளை வாங்கியவர்கள் யார்? என போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த குழந்தைகளை பிச்சை எடுக்கவும், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் உடல் உறுப்புகளை திருடி விற்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தற்போது மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் இருந்து ரிங் ரோடு, நாராயணகிரி ஷெட், சீலா தோரணம் தாண்டி 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக வரிசையில் காத்துநின்றனர்.

    இதேபோல் பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் ஆகிய கவுண்டர்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 40 முதல் 45 மணி நேரம் காத்திருந்தனர்.

    திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தங்குவதற்கு அறைகள் உள்ளன. அதற்கு மேலும் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வந்து அறைகள் கிடைக்காமல் அவதி அடைவதை தவிர்க்க வேண்டும்.

    கீழ்திருப்பதியில் தங்கி இருந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதேபோல் நடைபாதை அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் நடைபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நடைபாதை மற்றும் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணவில்லை.

    இதனால் தற்போது இரவு 12 மணி முதல் 2 மணி வரை மட்டும் நடைபாதை மூடப்படுகிறது. முன்பு போல் பக்தர்கள் நடை பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 66, 233 பேர் தரிசனம் செய்தனர். 36,486 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.
    • 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 24-ந் தேதி இரவு தேவஸ்தானத்துக்கு சொந்தமான மின்சார பஸ்சை டிரைவர் திருமலை பஸ் நிலையத்தில் நிறுத்தினார். அவர் ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அதிகாலை வந்த மர்ம நபர் ஒருவர் பஸ்சை திருடிக்கொண்டு திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றார்.

    நாயுடு பேட்டை என்ற இடத்தில் பஸ் சென்ற போது பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது. இதனால் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் செய்வது அறியாமல் திகைத்த மர்ம நபர் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

    பஸ் காணாமல் போனதை அறிந்த டிரைவர் திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.

    பஸ் சென்ற பாதையில் உள்ள கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 19 வயதுடைய வாலிபர் பஸ்சை ஓட்டி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவருடைய இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் வாலிபர் போட்டோவை வெளியிட்டு அவரை காட்டி கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

    மேலும் 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது.
    • பவித்திர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    திருப்பதி:

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி, சகஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் பவித்திர மாலைகள் சமர்ப்பணம் நடந்தது. அப்போது மூலவர் பத்மாவதி தாயார், உற்சவர் பத்மாவதி தாயார், உபகோவில்கள், பரிவார தேவதைகள், விமானப் பிரகாரம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு பவித்திர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்பிறகு மாலை மற்றும் இரவில் யாகசாலையில் வைதீக காரியக்கர்மங்கள் நடந்தன.

    • திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.
    • புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி.

    திருப்பதி:

    திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி ஸ்ரீவாரி புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    திருமலையில் ஆண்டுதோறும் 'சுக்ல சதுர்தசி' அன்று அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேச கோவில்களில் ஆண்டு தோறும் அனந்த பத்மநாபசாமி விரதம் நடக்கும். 108 திவ்ய தேச கோவில்களில் முதன்மையானவர் 'திருமால்' என்பதால், அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    அதன்படி நேற்று திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் அனுசரிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு சுதர்சன சக்கரத்தாழ்வாரை கோவிலில் இருந்து பூவராகசாமி கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்த பின், ஸ்ரீவாரி புஷ்கரணியில் சாஸ்திர ரீதியாக 'சக்கர ஸ்நானம்' எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இந்தச் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் கடைசிநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாபசாமி விரதம் ஆகிய முக்கிய நாட்களில் மட்டுமே நடப்பது சிறப்பம்சமாகும்.

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்குள் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    பெண்களின் நலனுக்காக வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதுபோல், ஆண்களின் நலன் மற்றும் செல்வ செழிப்புக்காக அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சமுத்திரத்தில் சேஷ சயனத்தில் வீற்றிருக்கும் திவ்ய மங்கல வடிவமே அனந்த பத்மநாபன். இந்த விரதத்தில் பூமியின் பாரத்தை சுமக்கும் அனந்தனும், ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு வழிபடப்படும் மகா விஷ்ணுவை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் அருள்பாலிக்கும் அனந்த பத்மநாபசாமி வீற்றிருக்கும் மகா விஷ்ணுவை வேண்டி, இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    • ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார்.
    • சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பீமாவரத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவரது மனைவி துர்கா. தம்பதியின் ஒரே மகள் ரத்தினகுமாரி (வயது 14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    கடந்த 26-ந் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். சிறுமியின் உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மவுலு. காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டு மகள்களும் நரசாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் மவுலு மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார். சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை சிறுமி வெளியில் சொல்லிவிட்டால் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய மவுலு சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    பின்னர் சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.

    மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளை ஊர் முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அவர்களுடன் மவுலு ஒன்றும் தெரியாதது போல் போலீஸ் நிலையம் சென்று இருந்தார். கடந்த 3 நாட்களாக தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை மவுலுவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மவுலுவின் வீட்டில் சோதனை நடத்தியபோது சிறுமியின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • இன்று இரவு பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை நடைபெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவ விழா நடந்தது. இதனால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.

    பிரமோற்சவ விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் குறைந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வி.ஐ.பி.கள் பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த சாதாரண பக்தர்கள் 30 மணி நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.

    மேலும் இன்று இரவு பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை நடைபெறுகிறது. இதனால் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதியில் நேற்று 54, 620 பேர் தரிசனம் செய்தனர். 24,234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், பாச தாவாரி பேட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள சந்திப்பில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்றனர்.

    அங்கு தனது குடும்பத்தினருக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் உங்கள் ஓட்டலில் பூரான் பிரியாணி சமைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். அவர்களின் கேள்விக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்தனர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரிய வந்தது. பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • வீனஸ் போன்ற கிரகங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
    • இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை.

    சென்னை:

    சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, சூரிய குடும்பத்திற்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகங்களை ரேடாரில் தேடும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இறங்க உள்ளது. இதற்காக 'எக்சோ வேர்ல்ட்ஸ்' என்ற செயற்கைகோளை உருவாக்கி வருகிறது. இது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் கிரகங்கள் அல்லது மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு பணியாகும். சுமார் 5 ஆயிரம் புறக்கோள்கள் (எக்சோபிளானெட்டுகள்) இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

    பூமியை போன்ற வளிமண்டலம் இருப்பதால் நூற்றுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வாழக்கூடியதாக இருக்கலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது மாற்றம் அடைகின்றன. திட்டமிடப்பட்ட புறக்கோள்கள் பணிக்கு இன்னும் மத்திய மந்திரி சபையால் அங்கீகரிக்கப்படவில்லை. விண்வெளி ஆய்வு அத்தகைய விளக்குகளின் நிறமாலை பண்புகளை ஆய்வு செய்யும். அவை பூமியால் உருவாக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்துமா என்பதை கண்டறியும்.

    புறக்கோள்களின் வளிமண்டல குணாதிசயங்களை தெரிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வுக் கருவிகள் அகச்சிவப்பு, ஒளியியல் மற்றும் புற ஊதா நிற மாலைகளில் கதிர்வீச்சை பகுப்பாய்வு செய்யும். இத்தகைய குணாதிசயங்கள் மூலம் அங்கு வாழக்கூடிய கிரகங்களின் வளிமண்டலம் எதனால் ஆனது என்பதை நமக்கு தெரியவரும். செவ்வாய் கிரக ஆய்வுக்கான லேண்டர் திட்டங்களும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

    அதே நேரத்தில் வீனஸ் (சுக்கிரன்) பயணத்திற்கான ஒப்புதலுக்காக இஸ்ரோ ஈடுபட்டு வரும் வகையில், வீனஸ் பயணத்திற்கான 2 கருவிகள் தயாராகி வருகின்றன. வீனஸ் மேற்பரப்புக்கு அருகில் பூமியை விட 100 மடங்கு வளிமண்டல அழுத்தத்தை கொண்டுள்ளது. ஆனால் வீனஸ் மேற்பரப்புக்கு அருகில் அதிக வளிமண்டல அழுத்தத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. வீனசை சூழ்ந்திருக்கும் அடர்த்தியான மேகங்கள் அமிலத்தால் நிரம்பியுள்ளன, மேலும் ஒருவரால் மேற்பரப்பைக் கூட ஊடுருவ முடியாது.

    வீனஸ் போன்ற கிரகங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது அவசியமாகும். வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களை ஆய்வு செய்தால், பூமியில் நம்முடைய செயல்பாடுகளினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய முடியும்.

    இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில் இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப்பணிக்காக இஸ்ரோ 'எக்ஸ்ரே போலரிமீட்டர்' அல்லது 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைகோள் டிசம்பரில் ஏவ இஸ்ரோ தயாராக உள்ளது.

    450 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோள் பிரகாசமான எக்ஸ்ரே பல்சர்களின் துருவமுனைப்பை அளவிடுவதற்கும் பிரகாசமான கருத்துகள் மூலங்களின் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கும் 2 கருவிகளை கொண்டுள்ளது. தற்போது எக்ஸ்ரே மூலங்கள் ஆற்றல், நேரம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை அளவிடுகின்றன' என்றனர்.

    • ஒரு வருடமாக சிறுவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார்.
    • வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மென்டாடா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி. இவரது பெற்றோர் வெளியூரில் வசிக்கின்றனர்.

    மாணவி அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர்.

    இதனிடையில் கடந்த ஆண்டு சிறுவன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தான். தொடர்ந்து அவனது நண்பர்கள் 3 பேரிடம் இதனை தெரிவித்தான்.

    இதைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் மாணவியை தனிமையில் சந்தித்து மிரட்டினர். மாணவியை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்தனர்.

    ஒரு வருடமாக அவர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார். இதனால் வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார். இதனை கவனித்த அவரது பாட்டி மாணவியிடம் விசாரித்தார்.

    அப்போது தன்னை அங்குள்ள சிறுவர்கள் பலாத்காரம் செய்ததை மாணவி தெரிவித்தார். இது குறித்து கஜபதி நகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

    மேலும் 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேரை கைது செய்து சிறுவர் ஜெயிலில் அடைத்தனர்.

    ×