என் மலர்
அழகுக் குறிப்புகள்
- இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
- பேஸ் பேக், சரும எரிச்சலைப் போக்கி, சருமத்துக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.
தற்போதைய குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், சருமத்தில் ஈரப்பசை வேகமாக நீங்கி, வறட்சி ஏற்படுகிறது. இந்நாட்களில் உண்டாகும் பொதுவான பிரச்சனை தான் இது.
இந்த சரும வறட்சியைப் போக்க தினம் தவறாமல் மாய்சரைசரை பயன்படுத்த வேண்டும். அதேசமயம் முகத்துக்கு ஒரு சில 'பேஸ் பேக்'குகளையும் போட வேண்டும்.
இதனால் சரும வறட்சி தடுக்கப்படுவதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் 'பளிச்'சென்று பிரகாசமாக ஆகும்.
இந்த விஷயத்தில், கற்றாழை வெகுவாக உதவும். கற்றாழையைக் கொண்டு அடிக்கடி பேஸ் பேக் போடும்போது சருமம் நீரேற்றத்துடனும், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
கற்றாழையைப் பயன்படுத்தி பேஸ் பேக்குகள் தயாரிக்கும் விதம்...
பேஸ் பேக் 1:
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1 ஸ்பூன் கிரீம் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
பேஸ் பேக் 2:
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் ½ ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக், சருமத் தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
பேஸ் பேக் 3:
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், சிறிது பாலில் ஊற வைத்த 4-5 குங்குமப்பூ இதழ்களுடன், ½ டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
பேஸ் பேக் 4:
இந்த பேஸ் பேக்குக்கு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக், சரும எரிச்சலைப் போக்கி, சருமத்துக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.
- தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.
- தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வயதாவது, எவருக்குமே கவலையை ஏற்படுத்தும் விஷயம்தான். அதிலும் பெண்கள், வயது கூடுவதை வெறுப்பார்கள்...
ஆனால், 50 வயது ஆனாலும், பெண்கள் சில உணவுப்பொருட்களை உட்கொண்டு வருவதன் மூலம், அழகு மாறாமல் திகழலாம், வயதான தோற்றத்தைத் தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
அந்த உணவுகள் விவரம்...
பழங்கள்
தினமும் ஏதாவது இரண்டு பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி உட்கொள்ளும்போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கிறது. அதுவும் பப்பாளி, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சரும செல்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. எனவே நீண்ட காலம் இளமையாக, அழகாக இருக்க விரும்பும் பெண்கள், எந்தப் பழம் பிடிக்குமோ அதை தவறாமல் சாப்பிடுங்கள்.
கீரைகள்
பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த கீரைகளை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அவை எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்வதோடு உடலில் ஆற்றலும் நிலையாக இருக்கும். முக்கியமாக கீரைகளை அதிகம் உணவில் சேர்க்கும்போது, சருமத்தின் ஆரோக்கியமும் அழகும் மேம்படும்.
கொட்டைப்பருப்புகள், விதைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டைப்பருப்புகள், பூசணி, ஆளி விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் புரதங்களும் அதிகம் உள்ளன. இவற்றை தினமும் உட்கொள்ளும் போது, இவை இதயத்தை வலிமையாக வைத்துக்கொள்வதோடு, சருமத்தை பொலிவாகவும் இருக்கச் செய்யும்.
தயிர் அல்லது மோர்
தயிர் அல்லது மோரில் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்தை எளிமையாக்கும், குடல் ஆரோக்கியத்தைக் காக்கும் என்பது நிபுணர்கள் கருத்து. உடலில் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலே, பாதி சரும பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.
சிறுதானியங்கள், முழுத் தானியங்கள்
தினசரி உணவில் சிறுதானியங்கள் மற்றும் முழுத் தானியங்களை சேர்த்து வந்தால், அவை உடலில் இன்சுலினை சீராக வைத்துக்கொள்ள உதவும். நீண்ட நேரம் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும். அதுவும் இவற்றை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே, பெண்கள் வயது கூடிக் கொண்டே செல்லும்போதும் இளமையாகவும், பொலிவான சருமத்துடன் அழகாகவும் தோன்ற வேண்டும் என்றால், மேலே தெரிவிக்கப்பட்டுள்ள 5 உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நல்லது.
- எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் முகத்துக்கு தயிரை பயன்படுத்தலாம்.
- தயிர், சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
பெண்கள், முகத்துக்கும், கூந்தலுக்கும் தயிரைப் பயன்படுத்தி நன்மை பெறலாம். தயிர் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, மிக அழகு மற்றும் கூந்தல் நலத்துக்கும் பயன்படுத்தலாம். ஏனெனில், தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அதனால், சருமத்துக்கும், கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
ஆகவே, தயிரை கூந்தல் மற்றும் முகத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டும், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம் ...
முகத்துக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தேன், வைட்டமின் பி6, போலேட் ஆகியவை நிறைந்தது. இவை அழகை இரட்டிப்பாக்குகின்றன. சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க தேன் உதவுகிறது. தேனைப் பயன்படுத்துவது சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
தயிரையும் தேனையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம், முகம் இழந்த பளபளப்பை மீண்டும் பெறும். இதற்காக, தயிரில் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தம் செய்தால், அது பளபளப்பாக மாறும்.
தயிர் ஸ்கிரப்:
தயிர் ஸ்கிரப், எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஸ்கிரப் தயாரிக்க தயிரில் அரிசி மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சருமத்துக்கு தயிரின் நன்மைகள்:
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் முகத்துக்கு தயிரை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், முகச் சருமப் பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர், சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
தலைமுடிக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?
தலைக்கு குளிக்கும்போது ஷாம்பு போடுவதற்கு முன் தயிர் தடவ வேண்டும். இதனால் கூந்தலுக்கு புரதம் கிடைக்கும். குறிப்பாக வறண்ட முடி உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர் தலைமுடியை மென்மையாக மாற்ற உதவுகிறது.
தலைமுடிக்கு தயிர் பயன்படுத்துவதன் நன்மைகள்:
தலைமுடிக்கு விலை உயர்ந்த ஷாம்புகளை உபயோகிப்பதற்குப் பதிலாக தயிரை பயன்படுத்துவது நல்லது. இது தலைமுடியை மென்மையாக மாற்றும். உச்சந்தலையை சுத்தமாக வைக்க உதவும்.
தயிரின் மிகப்பெரிய நன்மை, அது ஓர் இயற்கையான ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். மேலும் முடிக்கு ஊட்டமளித்து வலுப்படுத்தும்.
- ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த பேஸ்பேக்குகளை தொடர்ந்து போட்டு வர, முகத்தில் பொலிவும் பிரகாசமும் கூடும்.
வீட்டில் உள்ள ஒரு பொருளைப் பயன்படுத்தியே முகச் சரும பராமரிப்பை மேற்கொள்ள முடியும், பொலிவைக் காக்க இயலும்.
அதற்கு காபித் தூள் போதும். சருமப் பொலிவைக் காக்க உதவும் சில 'காபி பேஸ்பேக்'குகள் இங்கே...
காபித்தூள்-தேன்
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித்தூளை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமச் சுருக்கங்களும், கரும்புள்ளிகளும் குறையும்.
காபித்தூள்-மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் ½ டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து விழுதாக தயாரித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள்-கடலை மாவு
ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள் -தயிர்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள்-தேங்காய் எண்ணெய்
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்குகளை தொடர்ந்து போட்டு வர, முகத்தில் பொலிவும் பிரகாசமும் கூடும்.
- எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.
- 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம்.
அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியை, சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற தன்மைகள் இதில் நிறைந்திருக்கின்றன.
தக்காளியில் மிக அதிக அளவில் உள்ள வைட்டமின்கள் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நம்முடைய சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.
மேலும், சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சரும அழுக்குகளையும் முற்றிலும் சரிசெய்வதால் மாசுகள் நீங்கி முகம் பொலிவாக மாறும்.
தக்காளியில் உள்ள லைக்கோபீன் போன்ற பொருள்கள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகும். சருமத்தின் நிறமும் மேம்படும்.
சருமத்தின் செல்கள் அதிக எண்ணெய்த் தன்மை மற்றும் அதிக அளவில் வறட்சி அடையும்போது சரும செல்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
சரும வறட்சி அதிகமாகும்போது இறந்த செல்கள் சருமத்தில் அப்படியே தேங்கி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயதான தோற்றத்தையும் உண்டாக்கும்.
தக்காளியில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், சரும செல்களின் சேதத்தைத் தடுப்பதோடு, இறந்த செல்களை நீக்கி சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
இதற்கு, தக்காளியை சாறாகவோ அல்லது கூழ் போன்று மசித்தோ நேரடியாக முகத்தில் தடவலாம்.
அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவினால் போதும்.
வளரிளம் பருவம் தொடங்கியதுமே ஆண், பெண் இரு பாலரும் சந்திக்கும் சருமப் பிரச்சனை, முகப்பரு. குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.
அதிகப்படியான சீபம் சுரப்பது, சருமத் துளைகளுக்குள் அழுக்குகள் நுழைவது, பாக்டீரியா போன்றவற்றின் தொற்றுகள் காரணமாக பருக்கள் உண்டாகின்றன. இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து, சருமத்தின் பி.எச். அளவை சீராக வைத்திருக்கவும், முகப்பருக்களை விரட்டவும் தக்காளி பயனுள்ளதாக இருக்கும்.
முகப்பருக்களை போக்குவதற்கு தக்காளியை பயன்படுத்தும்போது, 4 ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் டீ டிரீ ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினாலே போதும். முகப்பருக்களை காணாமல் ஆக்கிவிடலாம்.
சிலருக்கு முகத்தில் பருக்கள், அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சருமத்தின் துளைகள் திறந்துகொள்ளும். பெரிய பெரிய சருமத் துளைகள் இருக்கும். அப்படி இருப்பதால் அதன் வழியே மாசுகள் உள் நுழைந்து சருமத்தில் வலியுடன் கூடிய பருக்கள், கட்டிகள் ஆகியவற்றை உண்டாக்கலாம். இதைச் சரிசெய்ய தக்காளி நல்ல மருந்தாக இருக்கும்.
சருமத்தின் பெரிய துளைகளைச் சுருக்க, தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறைக் கலந்துகொள்ள வேண்டும். இதை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். அப்படி தடவுவதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.
- மசித்த பப்பாளியை வாரத்துக்கு 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பொலிவாக மாறிவிடும்.
- தர்பூசணியை அரைத்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து விழுதாக தயாரிக்க வேண்டும்.
நாம் உணவுப்பொருட்களாக பயன்படுத்துபவற்றை கொண்டே உன்னதமான அழகைப் பெறலாம். அதுகுறித்து...
* காய்ச்சாத பசும்பாலை தினமும் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகும்.
* காபித்தூள், தக்காளி, அரிசி மாவு மூன்றையும் ஒன்றாக கலந்து ஸ்கிரப் தயாரித்து முகத்தில் பயன்படுத்தினால் இறந்த செல்கள் நீங்கி முகம் பளபளக்கும்.
* வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு சாறை தினசரி பருக, முகம் பொலிவடையும்.
* தக்காளிச் சாறு, தயிர் மற்றும் ஓட்ஸ் மீல் மூன்றையும் விழுதாக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், தழும்புகள் மற்றும் கொப்புளங்கள் நாளடைவில் மறைந்துவிடும்.
* வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை இரண்டையும் தண்ணீர் கலந்து பசை போல தயாரித்து முகத்தில் தடவி 4 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, இறந்த செல்கள் நீங்கி முகம் இளமையாகவும், பொலிவாகவும் ஆகும்.
* மசித்த பப்பாளி மற்றும் பாதாம் பருப்பை விழுதாக்கி முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து ஸ்கிரப் செய்து பின்பு கழுவுவதால் முகம் மென்மையாக மாறிவிடும்.

* முகத்தில் தேனைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவ, இறந்த செல்கள் நீங்கி வறண்ட சருமம் ஈரப்பதமாக மாறிவிடும்.
* எலுமிச்சம்பழத் தோலை அரைத்து முகத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் தடவி பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ, சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தை மென்மைப்படுத்தும்.
* மசித்த பப்பாளியை வாரத்துக்கு 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பொலிவாக மாறிவிடும்.
* தயிர், தேனுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து விழுதாக மாற்றி முகத்தில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் 'பளிச்'சென மாறிவிடும்.
* தோல் நீக்காமல் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து அதில் ஒரு முட்டை, தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் ஈரத்துணியால் துடைக்க, முகம் பிரகாசமாக ஆகிவிடும்.
* தர்பூசணியை அரைத்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து விழுதாக தயாரிக்க வேண்டும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் பொலிவோடு இருக்கும்.
மேற்கண்ட குறிப்புகளில் அவரவர் முகத்துக்கு உகந்த குறிப்புகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்வதன் மூலம் இளமையாகவும் பொலிவாகவும் முகத்தை வைத்திருக்க முடியும். எல்லாவற்றையும் விட, ஆரோக்கியமான சரிவிகித உணவால் உடல் ஆரோக்கியம் பெற்று, முகம் பொலிவடையும்.
- முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும்.
- பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சருமத்தில் உண்டாகும் பருக்களை கட்டுப்படுத்துவதற்கும், சரும பராமரிப்புக்கும் அதிக நேரமும், பணமும் செலவிட முடியாத நிலைமை பலருக்கும் இருக்கிறது. பார்லர் பேஷியல், கிரீம்கள் போன்றவை பருக்களை நீக்கி சருமத்திற்கு உடனடி பொலிவை தந்தாலும், அது தற்காலிக நிவாரணமாகவே அமைகிறது.
இதற்கு மாற்றாக, இயற்கை பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் 'நேச்சுரல் பேஷியல்' எனும் இயற்கை அழகு சிகிச்சை பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். சமையலறையிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த பேஷியல், சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க உதவுவதோடு பருக்கள் வராமல் தடுப்பதற்கும் உதவும்.
'நேச்சுரல் பேஷியல்' என்பது ரசாயனங்கள் இல்லாத, இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் முக அழகு பராமரிப்பு முறையாகும். இதில் பால், தேன், மஞ்சள், கடலைமாவு, கற்றாழை, ரோஜா நீர் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதில் நல்ல பலனை அளிக்கின்றன. எவ்வாறு 'நேச்சுரல் பேஷியல்' செய்யலாம் என்று பார்ப்போம்.
• முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும். காட்டன் துணியில் பாலை நனைத்து முகத்தை மெதுவாக துடைக்கவும். பால் சருமத்தை சுத்தம் செய்வதுடன், மென்மையும் அளிக்கும்.
• வெந்நீரில் சிறிது வேப்பிலை அல்லது புதினா போட்டு ஆவி பிடிப்பது, முகத்தில் உள்ள துளைகளில் இருந்து அழுக்குகளை வெளியேற்ற உதவிடும். ஆவி பிடிப்பதற்கு சுமார் 5 நிமிடங்களே போதுமானது.
• மசாஜ் செய்வது சருமத்தை உறுதியானதாக மாற்றும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யில் ஒன்றை விரல்களில் தடவி சருமத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இது முக சோர்வை குறைத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
• ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் தேவையான அளவு பால் கலந்து குழைத்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்கும்.
• தக்காளி சாறை காட்டன் துணியில் நனைத்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். முகத்தில் எண்ணெய் சுரப்பு குறையும், சரும துளைகள் சுருங்கும்.
• வெள்ளரிக்காய், தயிர் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். வெயிலால் ஏற்பட்ட எரிச்சல் குறையும்.
• பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகம் பிரகாசமாகவும், இளமையாகவும் தோன்றும். பப்பாளி இறந்த செல்களை இயற்கையாகவே அகற்றும் தன்மை உடையது.
• காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மென்மையாக தடவி 5 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். காபி தூள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
• வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பின்னர் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.
• 2 முதல் 3 கிராம்புகளை வெந்நீரில் ஊறவைத்து குளிர்ந்த பின்பு அந்த நீரை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவுவது, சருமத்தில் பருக்கள் வருவதை தடுக்கும்.
இதோடு சேர்த்து பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்:
• தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
• அன்றாடம் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.
• பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.
• ரசாயனம் கலந்த சரும உபகரணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
- யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்.
நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக தெரியவேண்டும் என பலரும் நினைப்போம். இதற்கு பொருட்செலவு, பணச்செலவு, நேரச்செலவு என அனைத்தையும் செய்வோம். ஆனால் எதற்கு இவ்வளவு மெனக்கெடல்கள்? பொருட்செலவு? பணச்செலவு? நம் முகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதுதான் உண்மையான அழகா? உண்மையில் எது அழகு? பார்ப்போம்.
"அழகு என்பது ஒருவரின் பார்வையில்தான் உள்ளது". ஆம், நாம் பலமுறை புத்தகங்களில் அல்லது பேச்சாளர்களால் அல்லது ஏதோ ஒருவகையில் கேள்விப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் உண்மையில் அழகு என்பது நாம் ஒருவரை பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. ஒருவரை அப்படியே அவராகவே ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. இந்த சமூகத்தில் அழகு என்றால் அளவு உள்ளது. அதாவது முகம் உட்பட உதடு, மூக்கு, உடல்வாகு என அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது. அது இந்த அளவில் இருந்தால்தான் அழகு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிறமும். தமிழர்களின் நிறமே, ஏன் இந்தியர்களின் நிறமே கருப்புதான் எனக்கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கே வெள்ளையாக வேண்டும் என்பதுதான் ஆசை. வெள்ளையாக இருப்பதுதான் இங்கு அழகு. அழகென்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு இலக்கணம் இந்த சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்கணத்தை தாண்டிய அழகு எது? இந்த கேள்வியை ஒரு 10 பொதுமக்களிடம் முன்வைத்தால், அவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பத்து பதில்கள் வரும்.
ஒவ்வொரு பதிலும் ஒவ்வொன்றாக இருக்கும்போது அவர்களின் புரிதல்கள், பார்வைகள் வேறுபட்டது என்பது நமக்குத் தெரியும். ஆம், உண்மையில் அனைவரின் பார்வையும் வேறுபட்டது. எல்லோருடைய கண்களுக்கும் நாம் அழகாக தெரிவோமா என்றால் இல்லை. சமூகத்தின் அழகு இலக்கண வரையறைப்படி இருக்கும் ஒருவரை அனைவருக்கும் பிடிக்காது. அந்த இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அவர்களை பிடிக்கும். அப்போது எப்படி நம்மை பிடிக்கும்? எதனால் நம்மை பிடிக்கும்? எதுதான் அழகு?

குழந்தைகளின் புன்னகையும் ஒரு அழகுதான்
உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகுதான். நான், நீங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள், எழில் கொஞ்சும் இயற்கை வளம், தெரியாதோரின் கருணை, காரணமே இன்றி அழுத்தத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் நம் மனதை புன்னகைக்க வைக்கும் குழந்தை, என்றோ ஓர்நாள் தடவியதற்காக பார்க்கும்போதெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி, பாதையை அறிந்து பயணம் செய்யும் நமக்கு பயணத்தின்போது வழிசொல்லி "பத்திரமாக செல்" எனக்கூறும் யாரென்றே தெரியாத நரைவிழுந்த மூதாட்டி, அம்மாவின் தலையில் இருக்கும் கனகாம்பரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும்தான் அழகு. ஆறுதல் தரும் அன்பை உமிழும் அனைவருமே அழகானவர்கள்தான். அவர்களின் வார்த்தைகள்தான் அழகானவை. அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள். பிடித்த பெண்கள் அனைவரும் ஆண்களின் கண்களுக்கு தேவதைதான். பிடித்த ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு இளமாறன்தான். மொத்தமாக அகமும், அகத்தின்வழி நாம் ஒருவருக்கு அளிக்கும் புன்னகையும்தான் உண்மையான அழகு. இறுதியாக, நீங்கள் அழகாக தெரியவேண்டும் என்றால் எதுவும் செய்யவேண்டாம், புன்னகையை மற்றவருக்கு பரிசளியுங்கள்.
- கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் ஒரு சிறந்த வழி.
- நல்ல தூக்கம் எந்த ஒப்பனையாலும் ஒப்பிட முடியாத இயற்கையான பளபளப்பை முகத்திற்கு அளிக்கும்.
பண்டிகை காலங்களில் அல்லது விஷேசங்களின்போது நாம் பெரும்பாலும், நீண்டநேரம் நீடிக்கவேண்டும் என்பதற்காக அதிகளவு மேக்கப் போடுவோம். இந்த அதிகப்படியான மேக்கப் பின்னர் சருமத்தை மந்தமாகவும், சோர்வாகவும் மாற்றும். அதிக லேயர்கள் மற்றும் அவற்றில் உள்ள சில பொருட்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து, சிவத்தல், வறட்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தும். கொண்டாட்டங்கள் முடிந்து நாம் பழைய நிலைக்கு திரும்பினாலும், முகம் அந்த கலைப்பில் அப்படியேத்தான் இருக்கும். அலச்சலால் சோர்வடைந்த சருமத்தை மீண்டும் பிரகாசிக்க வைக்க உதவும் சில எளிய வழிகள் இங்கே.
நீரேற்றம்
விழாக்களின்போது நாம் தவிர்க்கும் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று தண்ணீர் குடிப்பது. அங்கு செல்வது, இங்கு செல்வது என வேலையில் தண்ணீர் குடிக்கவே நேரம் இருக்காது. வேலைகளால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க எளிதில் மறந்துவிடலாம். நீரிழப்பு சருமத்தை மந்தாக்கும், சோர்வாக்கும். இதனால் நீரேற்றம் என்பது சருமத்திற்கும், உடலுக்கும் மிக அவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தண்ணீர் குடியுங்கள். மாற்றாக எலுமிச்சை சாறும் குடிக்கலாம். சில நேரங்களில் குலதெய்வ கோயில்களுக்கு செல்வோம். அங்கு வெயிலில் நிற்கவேண்டிய சூழல் வரும். அதனால் அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது வெள்ளரிக்காய், புதினா போட்டு தண்ணீரை எடுத்து சென்று அதை குடியுங்கள். ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வது, மேக்கப், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
எக்ஸ்ஃபோலியேட்
கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் ஒரு சிறந்த வழியாகும். இது முகத்தில் உள்ள இறந்த செல்கள், அதிகப்படியான எண்ணெய், மீதமுள்ள மேக்கப்பை நீக்கி சருமத்திற்கு புது தோற்றத்தை கொடுக்கும். பண்டிகை நாட்களை தாண்டி, வாரத்திற்கு ஒரு முறையும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது சிறந்தது.

கொண்டாட்டங்களுக்கு பிறகு சருமத்தை புத்துணர்ச்சியூட்ட எக்ஸ்ஃபோலியேஷன் சிறந்த வழி
ஃபேஸ்மாஸ்க்
ஃபேஸ்பேக் அல்லது ஃபேஸ்மாஸ்க் சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஸ்மாஸ்க் புத்துணர்ச்சியை அளிக்கும். ஃபேஸ் மாஸ்க்குகளில் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்கும் சீரம்கள் உள்ளன. காஃபின், தாவரச் சாறுகள் போன்ற பொருட்களும் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக கண்களைச் சுற்றி. அதுபோல ஃபேஸ்பேக்கும் சிறந்த நன்மையை அளிக்கும். தினமும் முகத்தை க்ளென்சிங் செய்தாலும் எல்லா முறையும் சருமத்தின் ஆழம்வரை நன்கு சுத்தம் செய்வதில்லை. அதனால் வாரத்தில் ஒருநாள் ஃபேஸ்பேக் பயன்படுத்தும்போது அது சருமத்தின் ஆழம்வரை சென்று சுத்தம் செய்யும். இரண்டு முறை செய்வது கூடுதல் பிரகாசத்தை வழங்கும்.
சன்ஸ்கீரினை தவிர்க்காதீர்கள்
விழா நாட்களில் அதிகம் வெளியே செல்ல வேண்டியிருக்கும். அப்போது சூரிய ஒளியின் சேதங்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கீரின் உதவும். அதனால் மறக்காமல் வெளியே செல்லும்போது சன்ஸ்கீரின் பயன்படுத்துங்கள்.
தூக்கம்
கொண்டாட்டங்களினால் தூக்கம் பாதிக்கப்படும். சரியான தூக்கம் இல்லாதது கண்ணைச்சுற்றி கருவளையங்களையும், வீக்கத்தையும் ஏற்படுத்தும். அதனால் நன்கு தூங்குங்கள். தூக்கம் உங்கள் உடல், சரும செல்களை சரிசெய்து சமநிலையை மீட்டெடுக்கிறது. நீங்கள் நன்றாக ஓய்வெடுத்து எழுந்திருக்கும்போது, உங்கள் சருமம் எந்த ஒப்பனையாலும் ஒப்பிட முடியாத இயற்கையான பளபளப்பைப் பெறும்.
- வெளியே செல்வதற்கு முன் கை, கால்களில் தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு செல்லலாம்.
- நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எந்த அளவு, எதனோடு பயன்படுத்தினால் சருமத்தில் மாற்றம் நிகழும்?
அழகு நிலையங்களுக்கு செல்ல இயலாதோர் பலரும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை மெருகூட்ட நினைப்பார்கள். ஆனால் பலருக்கும் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்? எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும்? என்பது தெரியாது. அவர்களுக்கான பதிவுதான் இது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எந்த அளவு, எதனோடு பயன்படுத்தினால் சருமத்தில் மாற்றம் நிகழும்? அதனுடைய விளைவுகள் என்ன? என்பதைப் பார்க்கலாம்.
தேன், எலுமிச்சை
ஒரு தேக்கரண்டி தேனில், இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் எலுமிச்சை சாறுவிட்டு, அதை நன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவலாம். இதை நன்றாக முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்தில் நல்ல பொலிவு உண்டாகும்.
பக்கவிளைவுகள்:
எலுமிச்சை சாறு சரும எரிச்சல், வறட்சி மற்றும் சூரிய ஒளிக்கு அதிக உணர்திறனை ஏற்படுத்தும். தேன் சிவத்தல் அல்லது அரிப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வாமை உள்ளவர்கள் ஆலோசனை செய்து பின்னர் பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்
தினமும் முகத்திற்கு கற்றாழை பயன்படுத்தவும். இது சருமத்தை ஆற்றவும், எரிச்சலை குணப்படுத்தவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவும். முகத்தில் அதிகப்படியாக இருக்கும் எண்ணெய்ப்பசையை குறைக்கும்.
பக்க விளைவுகள்:
கற்றாழை முகத்திற்கு நல்லது. ஆனால் சிலருக்கு அரிப்பு, சிவத்தல் அல்லது எரியும் உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மஞ்சள், தயிர்
1 தேக்கரண்டி தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் இட்டு, அதனை நன்றாக பேஸ்ட் போல அரைத்து சாப்பிடவும். இது வீக்கத்தை குணப்படுத்தவும், பளபளப்பான மற்றும் தெளிவான சருமத்திற்கு உதவும். முகத்திற்கும் பயன்படுத்தலாம். பேஸ்ட்டை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள்.
பக்க விளைவுகள்:
அதிக மஞ்சள் பயன்பாடு சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் எரிச்சல் மற்றும் சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களது சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்
வெள்ளரிக்காய், ரோஸ் வாட்டர்
1/2 வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றை வடிகட்டி, ரோஸ் வாட்டருடன் கலக்கவேண்டும். இதனை வெள்ளை பருத்தி துணியால் எடுத்து முகத்தில் தடவலாம். அல்லது கைகளாலும் மெதுவாக தடவலாம். 10-15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
தேங்காய் எண்ணெய்
உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முகம் மற்றும் கை, கால்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும சேதத்தை சரிசெய்யவும், இயற்கையான பளபளப்பை அதிகரிக்கவும் உதவும். முக வறட்சியை போக்கும்.
பக்க விளைவுகள்:
முகப்பரு உள்ளவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஏனெனில் சருமத்துளைகளை அடைத்து முகப்பரு வெடிப்புக்கு தூண்டுகிறது.
பப்பாளி, தேன்
பழுத்த பப்பாளியை மசித்து, 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக தடவுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியேவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். பப்பாளியில் உள்ள நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கும்.
பக்க விளைவுகள்:
பப்பாளியை அதிகமாகப் பயன்படுத்துவது உணர்திறன் வாய்ந்த சருமத்தை எரிச்சலடையச் செய்து, அரிப்பு அல்லது சொறியை ஏற்படுத்தும்.
கடலைமாவு, பால்
1 டீஸ்பூன் கடலைமாவுடன், 1 டீஸ்பூன் பால்சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலந்துவிட்டு, முகத்தில் ஃபேஸ்பேக்காக போடலாம். இதனை அப்படியே 10-15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கடலைமாவும், பாலும் முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.
பக்க விளைவுகள்:
ஏற்கனவே வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு கடலை மாவு வறட்சியை கொடுக்கும். இதனால் தோல் உரிய தொடங்கும்.
வாழைப்பழம், தேன்
ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் தேனை சேர்த்து நன்கு கலந்துவிட்டு முகத்தில் தடவுங்கள். இதனை 10-15 நிமிடங்கள் அப்படியேவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்திற்கு நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை அளித்து, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
பக்க விளைவுகள்:
அதிகமாக வாழைப்பழம் பயன்படுத்தும்போது முகத்தில் வறட்சி ஏற்படும்.
வீட்டு வைத்தியம் பொதுவாக பாதுகாப்பானதுதான். ஆனால் சில பொருட்கள் சில ஒவ்வாமை மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் உங்கள் சருமத்திற்கு சரிவருமா என மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பிறகு பயன்படுத்துங்கள்.
- அழகு என்பது சருமம் வெள்ளையாக இருப்பதல்ல.
- உடல் ஆரோக்கியமே சரும அழகுக்கு வழிவகுக்கும்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வர். சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்திற்கு அழகை கூட்டுவர். ஆனால் இதுபோல மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமலேயே சருமத்தை அழகாக வைத்திருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம்.
நீரேற்றம்...
ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமென்றால் உடலுக்கு நீரேற்றம் என்பது மிக அவசியமான ஒன்று. உடல் நீரேற்றத்தோடு இருக்கும்போது, சருமத்தின் தோற்றத்தை மங்கச்செய்யும் மாசுகளை திறம்பட நீக்கும். மேலும் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பதால், வறட்சி தடுக்கப்பட்டு, முக சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் முகம் குண்டாக, மென்மையாக காட்சியளிக்கும். நீர் உங்கள் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமை மற்றும் பிரகாசமான பளபளப்பைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
கிளென்சிங்
பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு மென்மையான சுத்திகரிப்பு என்பது முக்கியம். லேசான அதாவது அதிக பாதிப்பில்லாத க்ளென்சர்களை பயன்படுத்தும்போது, அது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்காமல், அழுக்கு, மாசுக்களை நீக்கும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ளென்சர்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யும். இதனால் வீக்கம் மற்றும் முன்கூட்டியே வயதான தன்மை ஏற்படும். ஒரு மென்மையான க்ளென்சர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த சமநிலை கூடுதல் எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கிறது. இது பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
எக்ஸ்ஃபோலியேஷன்
முகத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்தின் நிறத்தை மங்கச் செய்து சருமத்தை சீரற்றதாகத் தோன்றச் செய்யும். சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) முக்கிய பங்கு உண்டு. எக்ஸ்ஃபோலியேட் என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர செய்யும் ஒரு முறையாகும். இறந்த சரும செல்கள் அகற்றப்படும்போது முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.

சருமம் பளபளக்க தண்ணீர் அவசியம்
சரிவிகித உணவு
ஒரு சரிவிகித உணவுமுறை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நாம் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிப்புற அழுத்தங்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. மேலும் ஒரு நல்ல உணவுமுறை ஹார்மோன் ஒழுங்குமுறைக்கும் உதவும். ஆரோக்கியமான உடல்நலமே சருமத்தை பிரகாசிக்க செய்யும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரும செல்களுக்கு வழங்குகிறது. இந்த ரத்த ஓட்ட மேம்பாடு சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை ஊக்குவிக்கிறது. முக்கியமாக உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மன அழுத்தம் முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். உடற்பயிற்சி செய்வது வியர்வையை ஏற்படுத்தும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், மாசுகளை நீக்கவும், பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, வழக்கமான உடற்பயிற்சியே உங்கள் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.
மேற்கூறியவை போல நாம் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர், உணவு போன்றவற்றை சரியாக எடுத்தாலே உடலும், சருமமும் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.
- எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும்.
- வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.
2010க்கு பின் பிறந்த பலருக்கு எண்ணெய் குளியல் என்ற சொல்லே புதிதாக இருக்கும். ஆனால் அதற்குமுன் பிறந்தவர்களுக்கு அதனுடைய பயன்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமை என்றால் அம்மா கண், காது, தலை என உடல் முழுவதும் எண்ணெயை ஊற்றி, தேய்த்துவிட்டு, 2 மணிநேரம் கழித்து குளிக்க சொன்னால், குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்குவோம். தூங்கி எழுந்தால் அப்படி ஒரு பொலிவு முகத்தில் இருக்கும். நல்ல தூக்கத்திற்கும், முகத்தில் இருக்கும் அந்த பொலிவிற்கும் இந்த எண்ணெய் குளியல்தான் காரணம் என்று அப்போது தெரியாது. இப்படி தமிழ்நாட்டில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயல்தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. ஆனால் இப்போதெல்லாம் தீபாவளி என்றால் மட்டும்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்ற சொல் வெளிப்படுகிறது. அப்படி எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்தான் என்னவென்று நீங்கள் கேட்கும் அளவிற்கு அழகியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகளை கொண்டது எண்ணெய் குளியல். அதுகுறித்து பார்ப்போம்.
அழகியல் நன்மைகள்
எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சருமத்துளைகளை சுத்தப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறண்ட சருமத்தினர் எண்ணெய் குளியல் எடுக்கும்போது உடலுக்கு தேவையான எண்ணெயை வழங்குவதால், பளபளப்பான, மிருதுவான சருமம் கிடைக்கும். எண்ணெய்களில் உள்ள வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து காக்கிறது. எண்ணெய், சூரிய ஒளியின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியை தடுக்கிறது.
முடி வளர்ச்சி
எண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளித்தால், உடல்சூடு தணியும். உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மாதத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்
நல்ல தூக்கம்
வேலை காரணமாக, மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் இருந்தால் அல்லது உடல் சோர்வாக இருந்தால் ஒரு எண்ணெய் குளியல் போடுங்கள். குளித்துவிட்டு வந்த அரைமணிநேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.
நோய்களை தவிர்க்கும்...
எண்ணெய் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, பாலியல் கோளாறுகள், நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்க உதவும். எண்ணெயில் உள்ள அழற்சி பண்புகள் வலி, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை எண்ணெய் குளியல் கொண்டுள்ளது. உங்களால் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் குளியலில் பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து எண்ணெய்களும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவையாக இருந்தாலும், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் குளியல் இன்னும் உகந்தது.






