என் மலர்
அழகுக் குறிப்புகள்

சருமத்தை ஒளிரச் செய்யும் எண்ணெய் குளியலின் நன்மைகள்!
- எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும்.
- வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.
2010க்கு பின் பிறந்த பலருக்கு எண்ணெய் குளியல் என்ற சொல்லே புதிதாக இருக்கும். ஆனால் அதற்குமுன் பிறந்தவர்களுக்கு அதனுடைய பயன்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமை என்றால் அம்மா கண், காது, தலை என உடல் முழுவதும் எண்ணெயை ஊற்றி, தேய்த்துவிட்டு, 2 மணிநேரம் கழித்து குளிக்க சொன்னால், குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்குவோம். தூங்கி எழுந்தால் அப்படி ஒரு பொலிவு முகத்தில் இருக்கும். நல்ல தூக்கத்திற்கும், முகத்தில் இருக்கும் அந்த பொலிவிற்கும் இந்த எண்ணெய் குளியல்தான் காரணம் என்று அப்போது தெரியாது. இப்படி தமிழ்நாட்டில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயல்தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. ஆனால் இப்போதெல்லாம் தீபாவளி என்றால் மட்டும்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்ற சொல் வெளிப்படுகிறது. அப்படி எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்தான் என்னவென்று நீங்கள் கேட்கும் அளவிற்கு அழகியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகளை கொண்டது எண்ணெய் குளியல். அதுகுறித்து பார்ப்போம்.
அழகியல் நன்மைகள்
எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சருமத்துளைகளை சுத்தப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறண்ட சருமத்தினர் எண்ணெய் குளியல் எடுக்கும்போது உடலுக்கு தேவையான எண்ணெயை வழங்குவதால், பளபளப்பான, மிருதுவான சருமம் கிடைக்கும். எண்ணெய்களில் உள்ள வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து காக்கிறது. எண்ணெய், சூரிய ஒளியின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியை தடுக்கிறது.
முடி வளர்ச்சி
எண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளித்தால், உடல்சூடு தணியும். உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மாதத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்
நல்ல தூக்கம்
வேலை காரணமாக, மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் இருந்தால் அல்லது உடல் சோர்வாக இருந்தால் ஒரு எண்ணெய் குளியல் போடுங்கள். குளித்துவிட்டு வந்த அரைமணிநேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.
நோய்களை தவிர்க்கும்...
எண்ணெய் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, பாலியல் கோளாறுகள், நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்க உதவும். எண்ணெயில் உள்ள அழற்சி பண்புகள் வலி, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை எண்ணெய் குளியல் கொண்டுள்ளது. உங்களால் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் குளியலில் பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து எண்ணெய்களும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவையாக இருந்தாலும், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் குளியல் இன்னும் உகந்தது.






