என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    நாளை பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று இந்த பொங்கல் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    வரகு அரிசி - 1 கப்
    சிறுபருப்பு - கால் கப்
    தண்ணீர்  - 2 கப்
    கோகோ பவுடர் - கால் கப்
    நாட்டு சர்க்கரை - 2 கப்
    பால் - 1 கப்+அரை கப்
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    நெய் - கால் கப்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு

    செய்முறை

    குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி சிறுபருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.

    அடுத்து அதில் வரகு அரிசியை போட்டு சிவக்க வறுக்கவும்.

    அடுத்து அதில் 1 கப் பால், 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து குக்கரை மூடி 3 விசில், 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து குக்கரை அணைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

    பின்னர் அதே கடாயில் வேக வைத்த அரிசியை போட்டு பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து திக்கான பதம் வரும் வரை கிளறி விடவும். இடையிடையே நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

    கடைசியான வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் பொங்கல் ரெடி.
    நாளை மறுநாள் பொங்கல் பண்டிகைக்கு பால் பொங்கல் செய்து அனைவரும் சுவைத்து மகிழுங்கள். இன்று பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 250 கிராம்
    நெய் - 7 தேக்கரண்டி
    பால் - 1 லிட்டர்
    முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப
    சர்க்கரை அல்லது வெல்லம் - தேவைக்கேற்ப
    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பச்சரிசியுடன் பால் மற்றும் 4 தேக்கரண்டி நெய் சேர்த்துக் குழைவாக வேகவைக்கவும்.

    பின்னர் அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும்.

    மற்றொரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து நெய்யோடு பொங்கலில் ஊற்றிக் கலக்கவும்.

    இப்பொழுது சுவையான மற்றும் சுலபமான பால் பொங்கல் தயார்.
    கருப்பட்டியில் அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. சத்தான கருப்பட்டியில் பொங்கல் செய்து இந்த வருடம் சந்தோஷமா பொங்கலை கொண்டாடுங்க....
    தேவையான பொருட்கள் :

    கருப்பட்டி தூள் - 1 கப்
    பச்சரிசி - 1 கப்
    பால் - 3 கப்
    தண்ணீர் - 3 கப்
    நெய் - அரை கப்
    சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்
    முந்திரி - தேவைக்கு
    உலர் திராட்சை - தேவைக்கு

    செய்முறை :

    அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

    அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

    மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

    பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

    மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

    அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

    அடுத்து அதில் சுக்குத்தூள் சேர்க்கவும்.

    எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

    குறிப்பு  :

    * கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

    * நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    பொங்கல் பண்டிகை என்றாலே விதவிதமான பொங்கல் தான் ஸ்பெஷல். இந்த பொங்கல் பண்டிகைக்கு கோதுமை ரவையில் கருப்பட்டி சேர்த்து பொங்கல் செய்து எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பயத்தம் பருப்பு - 1/4 கப்
    கருப்பட்டி பொடித்தது - ஒன்றரை கப்
    நெய் - கால் கப்
    முந்திரி பருப்பு - சிறிது
    காய்ந்த திராட்சை - சிறிது
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்  

    செய்முறை :

    வாணலியில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

    வறுத்த ரவை, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வடிகட்டிய கருப்பட்டி பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

    கடைசியில் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும்.

    ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    சூப்பரான கோதுமை ரவை கருப்பட்டி பொங்கல் ரெடி.

    மாலை நேரத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மசாலா அப்பளம் - 10,
    உருளைக்கிழங்கு (பெரியது) - ஒன்று,
    துருவிய பன்னீர் - 50 கிராம்,
    கரம்மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை,
    எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும்.

    அத்துடன் உப்பு, துருவிய பன்னீர் துருவல், பச்சை மிளகாய் விழுது, கரம்மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும்.
    உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும்.

    எண்ணெயைக் காயவைத்து, உருட்டிய அப்பளங்களை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் ரெடி.
    சிறுதானியங்களில் பல்வேறு சுவையான சத்தான ரெசிபியை செய்யலாம். அந்த வகையில் இன்று சாமை அரிசியில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாமை - 2 கப் (வறுத்தது)
    பொட்டுக்கடலை - 2/3 கப் (வறுத்தது)
    கடலை மாவு - 1 தேக்கரண்டி
    அரிசி மாவு - 2 தேக்கரண்டி
    உப்பு - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
    பூண்டு - 6 பல்,
    எள் - சிறிதளவு
    எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
    வெண்ணெய் (காய்ச்சியது) - ¼ கப்

    செய்முறை

    பூண்டை அரைத்து கொள்ளவும்.

    பொன்னிறமாக வறுத்த சாமை மற்றும் பொட்டுக்கடலையை நன்றாக அரைத்து சலித்தெடுத்து அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள்,

    மிளகாய்த்தூள், அரைத்த பூண்டு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பின் அதில் காய்ச்சிய வெண்ணெயை ஊற்றி மாவை நன்கு கலந்து அத்துடன் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து சரியான பதத்திற்குப் பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை முறுக்கு அச்சில் போட்டு ரிப்பன் பக்கோடாவாக பிழிந்து பொரித்தெடுக்க வேண்டும்.

    கடைசி வரை அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.

    பொரித்த ரிப்பன் பக்கோடா சூடு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம்.

    பூண்டு சேர்ப்பது மணமாக இருப்பதோடு வாயுத் தொல்லை ஏற்படுவதையும் தடுக்கும்.

    சூப்பரான சாமை ரிப்பன் பக்கோடா ரெடி.
    பிட்சா, பாஸ்தா, வறுவல் போன்ற ரெசிபிகள் செய்யும் போது சில்லி பிளேக்ஸ் பயன்படுத்தலாம். இன்று சில்லி பிளேக்ஸை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காய்ந்த மிளகாய் - 100 கிராம்

    செய்முறை


    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.

    பின்னர் கடாயில் அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடவும்.

    காய்ந்த மிளகாய் நன்றாக வறுபட்டு மொறு மொறு என்று இருக்கும். இப்போது வறுத்த காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

    இப்போது சூப்பரான சில்லி பிளேக்ஸ் ரெடி.

    இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து 3 மாதம் வரை பயன்படுத்தலாம்.

    இதை பிட்சா, பாஸ்தா, வறுவல் போன்ற ரெசிபிகள் செய்யும் போது பயன்படுத்தலாம்.
    தோசை, நாண், சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பச்சை பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 1 கப்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 3
    தக்காளி - 4
    பச்சைமிளகாய் - 4
    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
    கொத்தமல்லி - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தேங்காய் பால் முதல் பால் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :


    உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை அரைத்து கொள்ளவும்.

    2 தக்காளியை மட்டும் அரைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை சோம்பு, லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வெட்டி வைத்த தக்காளியை போட்டு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும அரைத்து வைத்த தக்காளி போட வேண்டும்.

    அரைத்த கொத்தமல்லி விழுதை போட்டு கொதிக்க விடவும்.

    பின் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி ..
    பீட்ரூட்டில் அல்வா செய்தால் அருமையாக இருக்கும். இன்று எளிய முறையில் நாட்டு சர்க்கரை சேர்த்து பீட்ரூட் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துருவிய பீட்ரூட் - 1 கப்
    பால் - 1 1/2 கப்
    முந்திரி - 5
    நெய் - 1 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நாட்டுச்சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    கடாயை சிறு தீயில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் துருவிய பீட்ரூட்டை கொட்டவும். பச்சை வாசம் நீங்கும் வரை நன்கு வதக்கவும்.

    பின்பு அதில் பால் ஊற்றி ஏலக்காய் தூள், முந்திரி, நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

    பால் சுண்டும் வரை கிளறி அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

    சூப்பரான பீட்ரூட் அல்வா ரெடி.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் மிளகு பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பூண்டு - 3 பல்,
    கடுகு - தாளிக்க.

    செய்முறை

    வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு தாளித்து வெண்டைக்காயை நன்கு வதக்கவும்.

    மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அரைக்கவும்.

    பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.

    நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் மிளகு பிரை ரெடி.
    அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருளாக பிரியாணி இருக்கின்றது. அதிலும் கருங்கோழியைக் கொண்டு செய்யப்படும் பிரியாணியானது மிகவும் ஆரோக்கியமானதாகவும், நோய்களைப்போக்கக் கூடியதாகவும் கருதப்படுகின்றது.
    கருங்கோழியை உட்கொள்வதால் இரத்த சோகை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், தோல் நிற மாற்றுக் கோளாறுகள் மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்களுக்கும் நல்ல பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது.

    கருங்கோழியில் அதிகப் புரதம், குறைந்த கொழுப்பு, பதினெட்டு விதமான அமிலோ ஆசிட்டுகள், பி1, பி2, பி6, பி12, சி மற்றும் இ வைட்டமின்களும், நியாசின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தானது அதிக அளவில் இருப்பதால் இவை பலவகை நோய்களைப் போக்கும் ருசியான மருந்தாக கருதப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கருங்கோழியில் பிரியாணி எப்படி செய்வது எனப்பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    பாஸ்மதி அரிசி - 1 கிலோ,
    எண்ணெய் - 180ml,
    பட்டை - 5 கிராம்,
    ஏலக்காய் - 5 கிராம்,
    இலவங்கம் - 5 கிராம்,
    பிரியாணி இலை - 5 கிராம்,
    நட்சத்திர ஆனிஸ் -  ஒன்று,
    கல்பாசி -  சிறிதளவு,
    வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - ½கிலோ,
    பச்சைமிளகாய் - 4, இஞ்சி,
    பூண்டு விழுது -  ஒரு சிறிய கப்,
    புதினா, கொத்தமல்லி, (பொடியாக நறுக்கியது) - 1கப்,
    தக்காளி (நறுக்கியது) -  200 கிராம்,
    உப்பு, மஞ்சள் தூள்,
    மிளாகய்த்தூள் -  சுவைக்கேற்ப,
    கரம் மசாலாத்தூள் -  இரண்டு ஸ்பூன்,
    தயிர் - 150ml,
    கருங்கோழி - 1கிலோ,
    எலுமிச்சை - 1.

    செய்முறை:

    * அடிகனமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, இலவங்கம், பிரியாணி இலை, கடல்பாசி மற்றும் ஏலக்காயைப் போட்டு வதக்கவும்.

    * பின்பு நீளவாக்கியில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை அதில் போட்டு நன்கு பொன்நிறமாக சிவக்கும் வரை வதக்கவும்.

    * இதற்கிடையில் ஒரு கிலோ பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்பு இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐம்பது சதவீதம் வேகவைத்து வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பொன்நிறமாக வெங்காயம் சிவந்து வரும் பொழுது அத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    * இத்துடன் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லி இலைகளில் பாதிஅளவைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.

    * இப்பொழுது நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி மற்றும் உப்பை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கும் பொழுது ஊற்றிய எண்ணெயானது பிரிந்து வருவதை பார்க்க முடியும்.

    * இந்த சமயத்தில் தயிரைச் சேர்த்து அதன் பின் வெட்டிவைத்துள்ள கோழி துண்டுகளையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து சூடாக வைத்துக்கொள்ளவும்.

    * இப்பொழுது கறி முக்கால் பாகம் வெந்தபிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதாவது பாஸ்மதி அரிசிக்கு ஏற்றாற் போல் ஊற்றி பாதி அளவு வெந்த பாஸ்மதி அரிசியைப் போட்டு அரிசி உடையாதவாறு லேசாக கிளறிக் கலக்கவும்.

    * தண்ணீரும், அரிசியும் கொதித்து சமஅளவில் வரும் பொழுது பாத்திரத்தைத் தட்டு போட்டு மூடி அதன் மேல் அந்த சுடு தண்ணீர் பாத்திரத்தையும் தூக்கி வைத்து விட வேண்டும்.

    * இருபது நிமிடங்கள் இது போன்று தம்மில் வைக்கப்படும் பிரியாணி சரியாக வெந்து தனித்தனியாக கடைகளில் விற்கும் பிரியாணி பதத்திற்கு வந்து விடும்.

    * இன்னும் தண்ணீர் தேவைப்பட்டால் மேலே தம் வைத்திருக்கும் சுடு தண்ணீரிலிருந்து சிறிது ஊற்றிக் கொள்ளலாம்.

    * பிரியாணி தயாராகி முடிந்தவுடன் பிரியாணி பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி மிகவும் லாவகமாக கிளறவும். பின்பு மீதமுள்ள நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை பிரியாணியின் மேல் தூவவும்.

    * பிரியாணியில் காரம் அதிகமாக இருந்தாலோ அல்லது புளிப்பு சுவை குறைவாக இருந்தாலோ எலுமிச்சை சாறைப் பிழிந்து கொள்ளவும்.

    * இந்த கருங்கோழி பிரியாணியுடன் தயிர் பச்சடி மற்றும் கத்திரிக்காய் குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது அதன் சுவையே அலாதியாக இருக்கும்.

    * கோழி மிளகு வறுவல் மற்றும் சிக்கன் 65 போன்றவற்றுடன் கருங்கோழி பிரியாணியைச் சாப்பிடும் பொழுது எப்படி இருக்கும்? என்று நான் கேட்கத் தேவையில்லை. அப்படி ஒரு அற்புதமான சுவையுடன் இருக்கும்.

    இந்த ரவா பூரி பாயாசத்தை 15 நிமிடங்களில் செய்து விடலாம். சுவையும் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்
    சர்க்கரை - தேவைக்கு
    கண்டன்ஸ்ட் மில்க் - 100 கிராம்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    ரவை - கால் கப்
    மைதா - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - சிறிதளவு
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    ரவையுடன் மைதா, நெய், தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அதனை அரை மணி நேரம் ஊற வைத்து மீண்டும் பிசைந்து பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    பின்னர் பூரிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதனுடன் கண்டன்ஸ்ட் மில்க், சர்க்கரை சேர்த்து கால் மணி நேரம் கிளறி விடவும்.

    பின்னர் இறக்கி அதில் பூரி துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து பருகலாம்.

    சூப்பரான ரவா பூரி பாயாசம் ரெடி.
    ×