என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டியை சப்பாத்தி, நாண், தோசை, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறவும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - 6
    ப.மிளகாய் - 2
    இஞ்சி -1 துண்டு
    பூண்டு - 6 பல்
    முந்திரி - 100 கிராம்
    பிரிஞ்சி இலை - 1
    காலிஃப்ளவர் - 1
    கேரட் - 2
    பீன்ஸ் - 4
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    எண்ணெய்/ நெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    ஓமம் - கால் டீஸ்பூன்
    ஏலக்காய் - 2
    பட்டை - 1
    வெங்காயம்  - 3
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    ப்ரஷ் கிரீம் - 4 டேபிள் ஸ்பூன்
    கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய்,  கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் 3 நறுக்க்கிய தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு,  10 முந்திரி, பிரிஞ்சி இலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக மசியும் வரை  வேக வைக்கவும்.

    அடுத்து அந்த கலவையை ஆறவைத்து மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு வேறொரு வாணலியில் தண்ணீர், சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சோத்து நன்றாக கொதிக்க விடவும். அதில் நறுக்கி காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின்பு அதனுடன் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வேக வைக்கவும்.

    மீதமுள்ள முந்திரியை தனியாக வேக வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், ஓமம், ஏலக்காய், சிறிய துண்டு பட்டை போன்றவற்றை சேர்க்கவும்.

    அவை நன்கு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், சேர்த்து பொன்னிறாமாக வதக்கவும்.

    அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பின்பு மீதமுள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

    அதனுடன் வேகவைத்த காய்கள், அரைத்து வைத்த முந்திரி விழுது, தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.

    பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அதில் ஃபிரெஷ் க்ரீம், கஸ்தூரி மேத்தி, தேவையான அளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    இதை சூடான சப்பாத்தி பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறவும்.
    அனைவருக்கும் விருப்பமான சாக்லேட் பனானா கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 250 கிராம்
    சர்க்கரை - 5 தேக்கரண்டி
    கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 50 மில்லி
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி
    பழுத்த வாழைப்பழம் - 2
    காய்ச்சிய பால் - 4 தேக்கரண்டி
    சாக்லேட் துண்டுகள் - தேவைக்கேற்ப
    வினிகர் - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    வாழைப்பழத் துண்டுகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.  மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவை நான்கையும் ஒன்றாகக் கலந்து சலித்து எடுக்கவும். அதை வாழைப்பழ கலவையில் கொட்டிக் கிளறவும். அதில் சிறிது சிறிதாக பால் ஊற்றி பசை போல, சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி இந்தக் கலவையை அதில் ஊற்றவும்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது தண்ணீரை ஊற்றி குக்கிங் ஸ்டாண்டு பொருத்தவும். கேக் கலவை இருக்கும்  பாத்திரத்தை அதன் மேல் வைத்து, காற்று புகாதவாறு மூடி,

    மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து பின்பு ஆற வைக்கவும். இப்பொழுது சுவையான சாக்லேட் பனானா கேக் தயார்!
    சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் வகையில், மிருதுவான கேக்கை சுலபமான முறையில் மைக்ரோ ஓவன் பயன்படுத்தாமல் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 80 மி.லி
    பொடித்த சர்க்கரை - 1 கப்
    மைதா மாவு - 1 கப்
    பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
    உப்பு - ¼ டீஸ்பூன்
    எண்ணெய் - ½ கப்
    வெனிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    லைன் பேப்பர் - 1
    மணல் - 1 ½ கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சலித்த சர்க்கரைப் பொடி மற்றும் ¼ கப் எண்ணெய் சேர்த்து பசை போல நன்றாகக் கலக்க வேண்டும்.

    அதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் ¼ கப் எண்ணெய் சேர்த்துக் கிளற வேண்டும்.

    இந்தக் கலவையில் பாலை ஊற்றி, கட்டிகள் இல்லாதவாறு நன்றாகக் கலக்க வேண்டும். இறுதியாக அதில் வெனிலா எசன்ஸ் ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கலக்கவும்.

    இப்போது கேக் தயார் செய்யும் பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் நெய்யைத் தடவவும். அதற்குள் லைன் பேப்பரை வைத்து, அதன் மேல் கேக் கலவையைப் போட்டு காற்று குமிழ்கள் இல்லாத வகையில் சமன் செய்யவும்.

    பிரஷர் குக்கரில் மணலைக்கொட்டி, அதிக தீயில் ஐந்து நிமிடங்கள் வரை வைக்கவும். பின்பு, சிறிய பாத்திர ஸ்டாண்டை மணலில் வைத்து, அதன் மேல் கேக் பாத்திரத்தை வைத்து குக்கரை மூடவும். கேக் கலவையை குறைந்த தீயில் 45 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.

    பிறகு கவனமாக கேக்கை வெளியே எடுத்து, உங்கள் விருப்பப்படி அலங்கரித்து பரிமாறலாம்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பேரீச்சம்பழம் - 25 (விதை நீக்கப்பட்டது)
    மைதா - 1 கப்
    பால் - 3 /4 கப்
    சர்க்கரை - 3 /4 கப்
    சமையல் சோடா - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 /2 கப்
    அக்ரூட், முந்திரி - தேவையான அளவு

    செய்முறை :

    பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்

    பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    நன்றாக அரைத்த விழுதுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மாவை அரைத்த விழுதுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிஇல்லாமல் நன்றாக கலக்கவும்.

    இறுதியாக அக்ரூட், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பேக்கிங் பானில் வெண்ணெய் தடவிய பின்னர் கலவையை ஊற்றி பரப்பவும்.

    மைக்ரோவேவ் ஓவன் 350 F ல் சூடு பண்ணவும்.

    பின்னர் பேக்கிங் பானை வைத்து 350 Fஇல் 35 - 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்

    சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.

    சிக்கன், மட்டனில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் சிக்கன் கீமா வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 5 கப்
    சிக்கன் கைமா(கொத்துக்கறி) - 800 கிராம்
    வெங்காயம் - 6 (பொடிதாக நறுக்கியது - 4, நீளமாக நறுக்கியது - 2)
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன்
    தயிர் - ¼ கப்
    பச்சை மிளகாய் - 6
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மசாலா பொருட்கள் (பட்டை, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ) - தேவையான அளவு
    சாஹிஜீரா - 1 டீஸ்பூன்
    குங்குமப்பூ - தேவையான அளவு
    புதினா - 1 கட்டு
    கொத்தமல்லித்தழை - 1 கட்டு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    நீளமாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.

    தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிக்கன் கைமாவுடன், பாதி அளவு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள் மற்றும் தனியா தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

    வாணலியில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை, சாஹிஜீரா சேர்த்து வதக்கவும்.

    பின்பு பொடிதாக நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

    பின்னர் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து பொடிதாக நறுக்கிய தக்காளியை அத்துடன் சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்துக் கிளறவும்.

    அடுத்து அதில் ஊற வைத்த சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து கிளறி சில வினாடிகள் கழித்து, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்த பாஸ்மதி அரிசி, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, ஏலக்காய், சிறிதளவு சாஹிஜீரா, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை வேக்காட்டில் வேக வைத்து எடுக்கவும்.

    சிக்கன் வெந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் சிக்கன் கலவை ஒரு அடுக்கு, வேக வைத்த அரிசி ஒரு அடுக்கு என்ற விகிதத்தில் வைக்க வேண்டும்.

    இறுதியாக, குங்குமப்பூ, சிறிதளவு தண்ணீர், கொத்தமல்லித்தழை, வறுத்த வெங்காயம் கலந்து, குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால், சுவையான ‘சிக்கன் கீமா பிரியாணி’ தயார்.

    இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா  - 3/4 கப்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப்
    உப்பு - 1 சிட்டிகை
    சர்க்கரை  - 1/3 கப்
    எண்ணெய் - 1/8 கப் மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
    வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 1/4 கப்
    கெட்டியான தயிர் - 1/4 கப்
    வினிகர் - 1/2 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய், வெனிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் சிறு பௌலில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃப்ரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, 2 முறை சலித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின் 1 டேபிள் ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்னர் மற்றொரு பௌலில் தயிர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் எல்லா கலவைகளையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு 180 டிகிரி Cல் மைக்ரோ ஓவனை சூடேற்ற வேண்டும். பின் பேக்கிங் ட்ரேயில் பேப்பரால் செய்யப்பட்ட கப் கேக் லைனரை வைத்து, அதற்குள் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள டூட்டி ஃப்ரூட்டியை தூவி, பின்னர் மைக்ரோ ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து, 25-30 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், சுவையான டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் தயார்.
    கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஃப்ரூட் கேக்கை வீட்டிலேயே செய்து சுவைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்
    வெண்ணெய் - 1/2 கப்
    நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
    பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் + 1/8 டீஸ்பூன்
    மசாலா பொடி - 1/2 டீஸ்பூன் (1 கிராம்பு, 1 பட்டை மற்றும் சிறு துண்டு ஜாதிக்காய்)
    தேன் - 1/2 டேபிள் ஸ்பூன்
    தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
    வெனிலா எசன்ஸ் - 1/2 + 1/4 டீஸ்பூன்
    தண்ணீர் - 1/2 கப்

    ட்ரை ஃப்ரூட்ஸ்…

    உலர் திராட்சை - 50 கிராம்
    டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்
    பேரிச்சம் பழம் - 25 கிராம்
    பாதாம் - 25 கிராம்
    பிஸ்தா - 25 கிராம்
    முந்திரி - 25 கிராம்

    செய்முறை:

    ட்ரை ஃப்ரூட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய், உலர் பழங்களான உலர் திராட்சை, பேரிச்சம் பழம், டூட்டி ஃப்ரூட்டி, தேன், நாட்டுச்சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

    பின் தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மீண்டும் தீயை குறைத்து 20 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். இந்நேரத்தில் உலர் பழங்களானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து, அதில் 1/8 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கிளறி குளிர வைக்க வேண்டும்.

    ஒரு பௌலில் தயிர், வெனிலா எசன்ஸ், மசாலா பொடி மற்றும் உலர் பழங்களின் கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு மைதா, 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்கு சலித்துக் கொண்டு, பின் அதனை உலர் பழங்களுடன் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின் மைக்ரோ ஓவனை 180 டிகிரி C-யில் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, பின் அதில் வெண்ணெய் மற்றும் மைதாவை தடவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கேக் கலவையை கொட்டி, விருப்பமிருந்தால் அதன் மேல் சிறிது தோல் நீக்கப்பட்ட பாதாமை துண்டுகளாக்கி தூவி விட வேண்டும்.

    இறுதியில் அதனை மைக்ரோ ஓவனில் வைத்து, 1 மணிநேரம் 15 நிமிடம் பேக்கிங் செய்து இறக்கி, டூத் பிக் கொண்டு கேக்கின் நடுவே குத்தி எடுக்கும் போது, குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால், அதனை உடனே ஒரு ஈரமான துணியின் மேலே வைத்து, 15 நிமிடம் கழித்து, அதனை ஒரு தட்டில் தலைகீழாக தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்தால், முட்டை சேர்க்காத ஃப்ரூட் கேக் ரெடி!!!

    பொதுவாக பஜ்ஜி என்றால் வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இன்று தக்காளியைக் கொண்டு பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தக்காளி - 2 (வட்டமாக நறுக்கியது)
    கடலை மாவு - 3/4 கப்
    அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, பேக்கிங் சோடா, கேசரி  பவுடர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அந்த மாவில் தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான தக்காளி பஜ்ஜி ரெடி

    இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ரிச்சான சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்
    கோக்கோ பவுடர் - 2/3 கப்
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய், அடித்தது - 3/4 கப்
    பொடித்த சர்க்கரை -  1 3/4 கப்
    வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - 2 தேக்கரண்டி
    பெரிய முட்டை - 1
    சூடான நீர் - 1 கப்

    செய்முறை:

    மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போடவும்.

    வெண்ணெயை நன்கு அடித்து, சர்க்கரை, வெனிலா எக்ஸ்ட்ராக் ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.

    அடுத்து அதில் முட்டையைச் சேர்த்து, மீண்டும் அடித்து கலக்கவும்.

    மாவு கலவையை மெதுவாக சேர்த்து, தொடர்ந்து அடித்துக் கலக்கவும், தேவையான பதம் கிடைக்க அவ்வப்போது சுடுநீரைச் சேர்க்கவும். தனித்தனி பாத்திரத்தில் பரப்பி வைக்கவும்.

    சுமார் 25 முதல் 35 நிமிடங்களுக்கு அல்லது மரக்குச்சியை நுழைத்து எடுக்கும்போது, ஒட்டாமல் வரும் வரைக்கும் பேக் செய்யவும். 15 நிமிடங்களுக்கு குளிர வைக்கவும்.

    முழுமையாக ஆறிய பிறகுதான் ரிச் சாக்லெட் கேக் சரியான பதத்தில் இருக்கும்.

    ஆறிவிட்டதை உறுதி செய்வதற்காக திருப்பி வைத்து சிறிது நேரம் வைத்திருக்கவும். இதோ யம்மியான கேக் தயார்.

    குறிப்பு: க்ரீம் பதம் வரும் வரை நன்கு கலக்க மறக்க வேண்டாம்.

    திருவாதிரைக் களி என்பது மார்கழியில் வரும் திருவாதிரை திருவிழாவின் போது நடராஜருக்குப் படைக்கப்படும் அரிசிக் களி ஆகும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி -  1 கப்
    பாசிப் பருப்பு -  கால் கப்
    தேங்காய் - ¼ மூடி (சிறியது)
    மண்டை வெல்லம் - 1½ கப்
    தண்ணீர் - 2½ கப்
    சுக்கு - சிறிதளவு
    ஏலக்காய் - 1
    நெய் - 2 ஸ்பூன்
    முந்திரிப் பருப்பு - 10

    செய்முறை

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பினை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து, ஆற விடவும்.

    ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை பெரிய ஓட்டை உள்ள சலிப்பில் போட்டு சலித்து கொள்ளவும்.

    சலித்தது போக மேலே உள்ளவற்றை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலிக்கவும். இவ்வாறு எல்லாவற்றையும் ஒரே பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

    மண்டை வெல்லத்தை 2½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    ஏலக்காய் மற்றும் சுக்கை பொடியாக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் கரைத்து வடிகட்டிய சர்க்கரைக் கரைசலை ஊற்றி மிதான தீயில் வைத்து சூடேற்றவும். பாகு சூடாகி ஆவி வந்ததும் துருவிய தேங்காயை சேர்க்கவும்.

    சர்க்கரைக் கரைசல் நன்கு கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து சலித்து வைத்துள்ள அரிசி பருப்பு கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறவும்.

    பின்னர் அதனுடன் தட்டிய சுக்கு, ஏலக்காயை சேர்த்துக் கிளறவும்.

    இரண்டு நிமிடங்களில் கலவை கெட்டியாகி விடும். கலவை நன்கு திரண்டு வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

    மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரியை போட்டு வறுத்து அதனை களியில் சேர்த்து ஒரு சேரக் கிளறி இறக்கவும்.

    இப்போது சுவையான திருவாதிரைக் களி தயார்.

    உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை பாலக்கீரைக்கு உண்டு. இன்று பாலக்கீரையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 2 கப்
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - முக்கால் டீஸ்பூன்
    வறுத்து அரைத்த சீரகத் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
    புதினா - ஒரு கைப்பிடி
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை :

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி தழை, புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பாலக்கீரையை போட்டு அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு, கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இறுதியாக சூடான எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போது தான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து மாவை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

    இப்போது சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.

    இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

    இதையும் படிக்கலாம்...பிரெட் பயறு காய்கறி சாலட்
    வீட்டில் வாரத்திற்கு ஒரு முறை வித்தியாசமான உணவு வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள். இன்று ஜவ்வரிசியை வைத்து சூப்பரான போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    பச்சை மிளகாய் - 5
    வெங்காயம் - 1,
    புதினா மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சி - சிறிதளவு
    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

    செய்முறை


    வெங்காயம், புதினா, இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து., மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

    ஜவ்வரிசியை 5 மணிநேரம் நீரில் ஊற வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து எடுத்தால் சூடான சுவையான ஜவ்வரிசி போண்டா ரெடி!

    ×